வெள்ளி, 24 செப்டம்பர், 2021

இந்திய ராணுவத்துக்கு 118 அர்ஜூன் எம்கே-1ஏ பீரங்கி வாகனம் வாங்க ஆர்டர் கொடுத்தது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.


 தாக்கும் திறன், இயக்கம் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க புதிய பீரங்கி வாகனத்தை உருவாக்கியது டிஆர்டிஓ ரூ.7,523 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்கே-1 பீரங்கியுடன் ஒப்பிடுகையில், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில்,  72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு உற்பத்தி துறையில் 200 இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படும், சுமார் 8,000 வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

இந்திய ராணுவத்துக்காக சென்னையில் உள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 118 அர்ஜூன் எம்கே-1ஏ பீரங்கி வாகனத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று ஆர்டர் கொடுத்தது.  இதன் மதிப்பு ரூ.7,523 கோடி. இந்த ஆர்டர் பாதுகாப்புத்துறையில் மேக் இன் இந்தியா முயற்சிக்கு மேலும் ஊக்குவிப்பை அளிக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

சென்னையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று, அர்ஜூன் எம்.கே-1ஏ பீரங்கி வாகனத்தை ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவானேவிடம், பிரதமர் ஒப்படைத்தது நினைவிருக்கலாம்.

நவீன பீரங்கி வாகனம் எம்கே-1ஏ, அர்ஜூன் பீரங்கி வாகனத்தின் புதிய வகை. தாக்குதல், இயக்கம் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய பீரங்கி வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  எம்கே-1 வகை பீரங்கி வாகனத்துடன் ஒப்பிடுகையில் 72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு உபகரணங்களும், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்த பீரங்கி வாகனம், அனைத்து வகையான நிலபரப்புகளிலும் எளிதாக செல்வதை உறுதி செய்யும். அதோடு, பகலிலும், இரவிலும், துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் படைத்தது.  இந்த பீரங்கி வாகனத்தை, பல மேம்பட்ட வசதிகளுடன்  ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. 

எம்கே-1ஏ பீரங்கி வாகனம் துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்தது, அனைத்து நிலப் பகுதிகளிலும் எளிதாக செல்லும் திறன் வாய்ந்தது மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளுடன் பல அடுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.  இரவிலும், பகலிலும், ஒரே இடத்தில் நின்றுக் கொண்டும், இயங்கி கொண்டும் எதிரிகளை தாக்கும் திறன் படைத்தது.  இந்த திறன்களுடன், இந்த உள்நாட்டு பீரங்கி வாகனம், உலகத் தரத்துக்கு இணையாக இருக்கும்.  இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பீரங்கி வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை திறம்பட பாதுகாக்க, இந்த பீரங்கி வாகனம் பொருத்தமானதாக இருக்கும்.

ஆவடி கனரக தொழிற்சாலையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆர்டர் மூலம், குறு, சிறு தொழில்நிறுவனங்கள் உட்பட 200 இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும், சுமார் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் உள்நாட்டு திறனை வெளிப்படுத்தும் ஒரு முதன்மை திட்டமாக இது இருக்கும்.

இந்த அர்ஜூன் எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தை, போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சிவிஆர்டிஇ), டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களுடன் இணைந்து 2 ஆண்டுக்குள் உருவாக்கியது.  இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் 2010 ஜூன் மாதம் தொடங்கின. இந்த பீரங்கி வாகனம் கடந்த 2012 ஜூன் மாதம் பரிசோதனைக்கு விடப்பட்டது. அர்ஜூன் எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தை உருவாக்கி பரிசோதனைக்கு அனுப்ப 2 ஆண்டுகள் மட்டுமே ஆனது. இது பல கட்டங்களாக விரிவான பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை, மேற்கொள்ளப்பட்ட  விரிவான பரிசோதனையில் 7000 கி.மீ மேற்பட்ட தூரம் இந்த பீரங்கி வாகனம் பயணம் செய்துள்ளது. இதில் பல வகையான ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக