வியாழன், 16 செப்டம்பர், 2021

மருத்துவக் கனவை மனதில் தூக்கிச் சுமந்த எம் சொந்தங்கள் - இப்படித் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகப்படலம் நாளும் தொடருவதா? - கி.வீரமணி


 ‘நீட்’டால் உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகப்படலம் நாளும் தொடருவதா?

மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டவேண்டியது இன்று காலத்தின் கட்டாயம்

செப்.21 இல் அனைத்து தோழமைக் கட்சிக் கூட்டம்

‘நீட் தேர்வில் நாம் வெற்றி பெற முடியாது’ என்ற விரக்தியின் உச்சத்திற்குச் சென்றதால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, இந்த ஆண்டு நடைபெற்ற (12.9.2021) ‘நீட்’ என்ற ஆட்கொல்லி ஊழல் நடமாடிய தேர்வுக் காலத்தில் இதுவரை இந்த வாரத்தில் மட்டுமே - மூவர் (சேலம் தனுஷ்,  அரியலூர் கனிமொழி, காட்பாடி சவுந்தர்யா)  தற்கொலை செய்துகொண்டனர் என்பது நம் நெஞ்சங்களைக் கனலாக்குகிறது. ரத்தக் கண்ணீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகப்படலம் நாளும் தொடருவதா?

வேதனையாலும், துயரத்தாலும் எம் இளம் செல்வங்கள் - மருத்துவக் கனவை மனதில் தூக்கிச் சுமந்த எம் சொந்தங்கள் - இப்படித் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சோகப்படலம் நாளும் தொடருவதா?

இரக்கமெனும் உணர்வற்றவர்கள் ஒன்றியத்தில் ஆளும் நிலையில், இவை அவர்களின் கண்களைத் திறக்காது என்பதால், புரியாத எம் இளையவர்கள் இப்படிப்பட்ட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதன்மூலம் தீர்வை அவர்கள் பெற முடியாது - அவரது பெற்றோர் - உற்றார் உறவினர்களுக்கு மீளாத் துயரத்தையும், மாறாத் துன்பத்தையும், விட்டுச் செல்லும் சுமையையும்தான் அவர்களை சுமக்க வைக்க முடியும் என்பதைக்கூட சிந்திக்க இயலாத பக்குவமுள்ளவர்களை ‘நீட்’ பலி வாங்குவது தொடர்கதை ஆகிவருகிறது!

அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான உரிமைப் போர்

தி.மு.க. ஆட்சியில் நிச்சயம் இதற்கு விடியல் ஏற்படும்; காரணம், இதனை எதிர்த்து ஒழிப்பதில் சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் காட்டும் உறுதியும், உத்வேகமும் உண்மையானது. அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான உரிமைப் போர் என்று எண்ணியே அவர், அத்துணை முயற்சிகளிலும் - நீதிமன்றப் போராட்டமானாலும், அவரது இயக்கத்தின் வீதிமன்றப் போராட்டமானாலும் வாய்மையுடன் போராக நடத்தி வருகிறார்கள். எனவே, இளைய செல்வங்களே, எக்காரணம் கொண்டும் தற்கொலை போன்ற தகாத முடிவுகளை எடுக்காதீர்கள்!

தீராத பிரச்சினைகளோ, விடியாத இரவுகளோ எப்போதும் இல்லை என்பதே இயற்கை நியதி.

மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டவேண்டியது இன்று காலத்தின் கட்டாயம்

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அத்துணை முயற்சிகளிலும் உண்மையான ஈடுபாட்டுடன் நீட்டை ஒழிப்பதில் - தவிர்ப்பதில் உழைத்து வருகிறது.

என்றாலும், மற்ற ஒத்தக் கருத்துள்ள அத்துணை இயக்கங்களும், அமைப்புகளும் நாம் நம்முடைய பங்களிப்பை - இந்த நீட் தேர்வு என்ற ஊழலின் ஊற்றுக்கண்ணை ஒழித்துக்கட்ட ஒரு மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டவேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.

திராவிடர் கழகம்தான் இந்த ஆபத்து, கருவில் உருவானபோதே - உச்சநீதிமன்றம் மறுசீராய்வு எனக் கொண்டு வந்தபோதே சுட்டிக்காட்டி, அனைவரையும் ஓர் அணியில் திரட்டினோம். இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற மாநிலங்களில் அமைப்புகள் இல்லாததால், அவர்களுக்கு இந்தக் கொடுமை, மாநில உரிமைப்பறிப்பு உள்பட - பல செய்திகள் புரியவில்லை.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து வருகின்றனர்!

நீட் கேள்வித்தாள்கள் விற்பனை

நாடு தழுவிய ஒரு மாபெரும் பிரச்சார அறப்போராட்ட கட்டமைப்பை உருவாக்க நாம் முனைந்து தொடங்கவிருந்த நேரத்தில், கரோனா கொடுந்தொற்று ஊரடங்கு காரணமாக அதனை ஒத்தி வைக்கச் செய்தது!

இன்றோ மற்ற எல்லாத் தேர்வுகளும் நடத்தாத நிலையில்கூட, இதனை மட்டும் வேண்டுமென்றே வீம்புக்காக,  ‘நீட்’ தேர்வை மட்டும் தள்ளி வைக்காது, ஈவிரக்கம் அற்று, இந்த நேரத்திலும் நடத்தியுள்ளனர்!

ஆள் மாறாட்டம் நடக்கவில்லையா?

28 லட்சம் ரூபாய்க்கு (வடக்கே) கேள்வித்தாள் விற்பனை என வந்த செய்திக்குப் பதில் என்ன?

கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபமும், தனியாருக்குத் தங்கள் விருப்பம்போல், மருத்துவக் கல்விக் கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ள வாய்ப்பும்தானே இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது! இதனை உயர்நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டினால், அதனைத் தடுக்கும் சட்ட அதிகாரங்கள்தானே பயன்படுத்தப்படுகின்றன!

செப்.21 இல் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இத்தனை உண்மைகளும், நீதிமன்றங்களின்முன் சட்டப் போராட்டமாகவும், வீதிமன்றங்களில் அறப்போராட்டமாகவும் நடைபெற ஓய்வற்ற பிரச்சாரப் பெருமழை, தடையற்ற அறப்போர்களில் முனைப்புடன் அனைவரும் இணைந்து - மருத்துவப் படிப்புக்குள்ளத் தடைகளை நீக்க ஒரு தொடர் முயற்சிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள  திராவிடர் கழகம் தன்னை ஒருங்கிணைப்பாளராக்கிக் கொண்டு அனைத்து ஒத்தக் கருத்துள்ள தமிழ்நாட்டு கட்சிகள், அமைப்புகளை அழைத்து பல கட்டப் போராட்டங்கள்பற்றி யோசித்து முடிவெடுக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட 21.9.2021 அன்று, அனைவருக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம். சென்னை பெரியார் திடலில் அக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்.

அதில் திட்டங்கள் அறிவிக்கப்படக் கூடும். தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டி, ‘நீட்’ கொடுவாள் மாணவர் தலைமேல் தொங்குவதை நீக்குவதற்கும், மாநில உரிமைகளைக் காக்கும் முயற்சிகளில் உறுதியாய் இருப்பதற்கும், சட்டப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதுபற்றியும் யோசித்து முடிவுகளை எடுக்க வாய்ப்பமையும்.

தன்னம்பிக்கையோடு நீட்டை வெல்லுவோம் எனவே, மாணவச் செல்வங்கள் அவசரப்பட்டு தகாத முடிவுகளில் இறங்காதீர்!

தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து - தன்னம்பிக்கையோடு நீட்டை வெல்லுவோம் என்று உறுதியோடு நம்பி, கல்வி கற்கமுனையுங்கள்!

உங்களுக்காக களம் இறங்க தமிழ்நாடு அரசும், பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தயாராக இருக்கும்போது, இந்த தகாத முடிவு தேவைதானா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக