ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

விவசாயிகளுக்கு வருமான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஊரக பொருளாதாரத்தை நோக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும்.-திரு எம் வெங்கையா நாயுடு


 விவசாயிகளுக்கு வருமான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஊரக பொருளாதாரத்தை நோக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று போன்ற சவாலான தருணங்களில் நாட்டிற்கு துணையாக இருந்த விவசாயிகளைப் பாராட்டிய அவர், ஊரகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் ஊரக சமுதாயத்தின் நல்வாழ்வே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குருகிராமில் உள்ள ஹரியானா வரலாறு மற்றும் கலாச்சார அகாடமியின் “சர் சோட்டு ராம்: எழுத்துக்களும் உரைகளும்” என்ற தலைப்பிலான ஐந்து தொகுதிகளை இன்று வெளியிட்டுப் பேசிய குடியரசு துணைத் தலைவர், வேளாண்மையை நிலையானதாகவும், லாபகரமானதாகவும், மாற்றுவதற்கு சிறந்த நடைமுறைகள் மற்றும் நவீனமயமாக்கலின் அவசியத்தை எடுத்துரைத்தார். ‘கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில், நமது வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு உத்திகளை ஆய்வு செய்து, புதுப்பிப்பதுடன், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்’, என்று அவர் கூறினார்.

விவசாயத்தை நமது அடிப்படை கலாச்சாரம் என்று குறிப்பிட்ட அவர், நம் கிராமங்கள், உணவு தானியங்களை மட்டும் உற்பத்தி செய்யாமல், நமது மாண்புகள் மற்றும் பாரம்பரியங்களையும் நம்மிடையே புகுத்துகின்றன என்று தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்வதாகவும், நம் கிராமங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையாமல், பின்தங்கி இருந்தால், நாடு வளர்ச்சி அடைய முடியாது என்றும் அவர் கூறினார்.

ஒட்டுமொத்த வேளாண் சங்கிலியும் லாபகரமான மதிப்புக்கூட்டலுக்கான ஏராளமான வாய்ப்புகளை அளிப்பதாக சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், ஊரகப் பொருளாதாரத்தின் இந்த மறைந்திருக்கும் சாத்தியக்கூறுகளை வெளிக்கொணர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஊரகப் பகுதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே சர் சோட்டு ராம் போன்ற புரட்சியாளர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரிவினையை சர் சோட்டு ராம் கடுமையாக எதிர்த்ததை நினைவு கூர்ந்த திரு வெங்கையா நாயுடு, ஒன்றிணைந்த மற்றும் வலுவான இந்தியா குறித்துக் கனவு கண்ட உண்மையான தேசியவாதி, அவர் என்று தெரிவித்தார். சர் சோட்டு ராம் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூறிய அவர், அரசியல், சமூகம் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தில் புதிய எண்ணங்களை அவர் அறிமுகப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக