செவ்வாய், 21 செப்டம்பர், 2021

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.- திரு எம். வெங்கையா நாயுடு


 உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில், பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஆளுகை என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், 75-வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடும் வேளையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த ஆளுகைக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் தேவையை வலியுறுத்தினார்.

அரசை விமர்சிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், தங்களது கருத்தை வலியுறுத்தும்போது, நல்லொழுக்கம், கண்ணியம் மற்றும் மேன்மையின் எல்லைக்கோட்டை அவர்கள் எப்போதும் தாண்டக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இளைஞர்கள் தீவிர அரசியலில் மட்டும் ஈடுபடாமல், உற்சாகத்துடன் அரசியலில் இணைந்து, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் முழு ஈடுபாட்டுடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று தான் எப்போதும் விரும்பியதாக திரு நாயுடு தெரிவித்தார். கருத்தியலைவிட பொருத்தமான நடத்தை மிகவும் முக்கியம் என்றார் அவர். துரதிருஷ்டவசமாக, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் காலப்போக்கில் மாண்புகள் மற்றும் தரம் குறைவதாக அவர் வேதனை தெரிவித்தார். “பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் முறைகளை தூய்மைப்படுத்துவதற்கும், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உயரிய பண்புகள் மற்றும் நீதி நெறிகளை ஊக்குவிப்பதற்கும் காலம் கை கூடியுள்ளது”, என்று அவர் கூறினார்.

தங்களது தாய் மொழிகளில் புலமை பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிப்பளித்து, ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டுமென்று மாணவர்களுக்கு திரு வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார். “நமது நாகரிகம், மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்று. பகிர்தல் மற்றும் அன்பு செலுத்துதல் என்ற தத்துவம் இந்திய கலாச்சாரத்தின் மையமாக விளங்குகிறது”, என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக