சனி, 11 செப்டம்பர், 2021

அரசியலில் ஆதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!! சாதி, மத, இன, மொழி வல்லாதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 மக்கள் கவிஞர் – பாரத தேச விடுதலைக் கவிஞர்!

பாரதியாரின் 100-வது நினைவு நாளில் புதிய தமிழகத்தின் புகழஞ்சலி!!

பிறவிக் கவிஞர், பிறவி தேசப்பற்றாளர், பொதுவுடைமைவாதி, ஏழைப் பங்காளன், சமத்துவ நாயகன், மகாகவி – மக்கள் கவிஞர் – விடுதலைக் கவிஞர் - பாரதியார் அவர்களின் நூறாவது ஆண்டு நினைவு தினத்தில் புதிய தமிழகம் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது. 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, அன்றைய ஒட்டப்பிடாரம் வட்டம், எட்டையபுரத்தில் பிறந்த பாரதியார், 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1.40 மணிக்கு, நியாயப்படி செப்டம்பர் 12-ஆம் தேதி அவர் தனது 39-வது வயதில் மரணமெய்தினார். அவர் தன் வாழ்நாளின் ஒவ்வொரு மணித்துளியும் இந்த மண்ணுக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும் மட்டுமே குரல் கொடுத்துள்ளார். தனது 11-வது வயதிலேயே கவிபாடும் திறமையின் காரணமாக, தனது சுப்பிரமணியன் என்ற இயற்பெயருடன் பாரதி என்றப் பட்டம் பெற்று ‘சுப்பிரமணிய பாரதி’ என்று அழைக்கப்பட்டார். வடக்கே இரவீந்தரநாத் தாகூர் தனது பாடல்கள் மூலம் விடுதலை கனலை மூட்டினார்; தெற்கே பாரதியார் தனது பாடல்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும், இந்தியா நிச்சயம் சுதந்திரம் பெறும் என்பதன் வெளிப்பாடாக, ”ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!!, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று” எனும் உயிரோட்டமான பாடலை எழுதி, ஒவ்வொரு இந்தியரிடத்திலேயும் சுதந்திரக் கனலை நெஞ்சிலே மூட்டினார். அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தேசபக்தியை ஊட்டுவது மட்டுமல்ல, சமூகப் பற்றையும் ஊட்டுவதாகும். தேசம் விடுதலை அடைந்தால் மட்டும் போதாது சமூக விடுதலையும், ஏற்றத்தாழ்வுகளும் ஒழிய வேண்டும் என்பதிலும் அவர் தெளிந்த சிந்தனையோடு இருந்துள்ளார்.

”தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற அவருடைய வார்த்தை, இந்தியாவில் வறுமை நீங்க வேண்டும் என்பதை வலுவாக எடுத்துரைக்கக்கூடியதாகும்.

”சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்” என்று அன்றே சாதிக்கு விளக்கமளித்தவர்.

“சிந்து நதியின் மிசை நிலவினிலே; சேரநன்னாட்டிளாம் பெண்களுடனே; சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து; தோணிகளோட்டி விளையாடி வருவோம்; கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்; காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு; சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! என்று இந்திய தேசத்தினுடைய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர். பெண் விடுதலை குறித்தும் பாடியவர்; இந்திய சுதந்திரப் போராட்டத்தை மகாபாரதத்தோடு ஒப்பிட்டு, ஆங்கிலேயர்களை துரியோதணர்களாகவும், இந்திய மக்களை பஞ்சபாண்டவர்களாகவும் சித்தரித்து, இது ஒரு நீதிக்கான போர் என்று அப்பொழுதே முழங்கியவர்.

பாரதியாருடைய வாழ்க்கையை விவரிக்கின்றபொழுது, இரண்டு முக்கியமான விசயங்களை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒன்று அவருடைய ஈகைக் குணம்; பாரதியார் செல்வ செழிப்பிலும் வாழ்ந்தவரல்ல, வறுமையிலும் வாடியவரல்ல. ஆனால், வறுமையைத் தானாக வரவழைத்துக் கொண்டவர். அவர் சமையலுக்கு இருக்கக் கூடிய அரிசியையெல்லாம் பறவைகளுக்கு போட்டுவிடுவார் என்று நாம் பள்ளிப் பருவத்திலே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பாரதியார் அவர்களைப் பற்றி அவரோடு நெருக்கமாக இருந்த ஒரு நண்பர், குறிப்பிடுகின்றபொழுது, ”பாரதியார் சென்னையில்  ஒரு  பள்ளியில்  ஆசிரியராகப்  பணியாற்றிய  காலகட்டத்தில்,  மாதம் 1-ஆம் தேதியன்று கை நிறைய சம்பளத்தோடு பாரதியார் வருவாரென்று அவருடைய துணைவியார் செல்லம்மாள் காத்துக் கொண்டிருந்தார்; பாரதியார் சம்பளம் வாங்கினார், ஆனால், அது வீட்டிற்கு வந்து சேரவில்லை. அன்றையக் காலகட்டத்தில், அவர் பள்ளியிலே இருந்து வீட்டிற்கு ஒரு கை ரிக்‌ஷாவிலே தான் வருவாராம். கை ரிக்ஷாக்காரர் பழக்கமானவர் என்பதால்,  தன்னுடைய மனைவிக்குப் பிரசவம், அதுவும் சிக்கலான பிரசவம், கையிலே காசு இல்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை என அந்த ரிக்‌ஷாக்காரர் இவரிடத்திலே உதவி கேட்காத போதும், பாரதியார் அதனையறிந்து, அவருடைய சம்பளத்தை அந்த ரிக்‌ஷாக்காரரிடத்திலே கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீட்டிற்குச் சென்றதாக” அவரது ஈகைக் குணம் பற்றி வரலாறுகள் சொல்லுகின்றன. தனது 39 வயதில் 14 மொழிகளை கற்று, அத்தனை மொழிகளிலும் புலமை பெற்று சிறந்து விளங்கியும் கூட, அவர் தன்னை வளப்படுத்திக் கொள்ள ஒருநாளும் எண்ணியதில்லை. 

ஆங்கிலேயரை அனுசரித்துப் போகவோ, அண்டிச் செல்லவோ நினைத்ததில்லை. பாலகங்காதர திலகர், தாதாபாய் நெளரோஜி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோருடன் நெருக்கம் கொண்டு, ஆங்கிலேயர்களை ஆயுதப் போராட்டத்தின் மூலம் விரட்ட வேண்டும் என்ற அளவிற்கு அவர் தீவிர விடுதலை வீரராக இருந்திருக்கிறார். அவர் புரட்சிக் கவிஞர் மட்டுமல்ல, புதுமைக் கவிஞர் என்று சொல்லக்கூடிய வகையில், வேறு எந்தக் கவிஞரும் பயன்படுத்தாத ஒரு புதிய வார்த்தை அவருக்கே சொந்தமானது. 

ரெளத்திரம் பழகு என்பது அவர் பயன்படுத்திய புதியதொரு வார்த்தை. பல பேருக்கு ரெளத்திரம் பழகு என்றால் என்னவென்று தெரியாது. ரெளத்திரம் என்பது ஒருவகையான நியாயமான கோபம் அல்லது ஆத்திரம். தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கோ, தேசத்திற்கோ அநீதி நடக்கின்றபொழுது அதைத் துணிவோடு எதிர்த்துத் தட்டிக்கேட்கும் கோபம் வரவேண்டும். தேவையானவற்றுக்கு தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும்; அந்தக் கோபத்தில் நியாயம் மட்டும் இருக்க வேண்டும்; இதுவே ரெளத்திரம் பழகு என்பதன் பொருளாகும். கண்ணுக்கு எதிரே அநீதி நடக்கின்ற பொழுது அதை எதிர்த்துக் கேட்பது தான் தர்மம்; அது தான் உண்மையான நீதி. ஆனால் அந்த மாதிரியான நேரங்களில் கை கட்டி, வாய்பொத்தி இருந்து விடுவது கோழைத்தனம். இந்த அடிப்படை ரெளத்திர உணர்வு கூட இல்லாத காரணத்தினால்தான் பல நாடுகள் அடிமைப்பட்டன. நாடுகளுக்குள் பல சமுதாயங்கள் அடிமைப்பட்டன;  ஒரு வர்க்கத்திற்கு இன்னொரு வர்க்கம் அடிமையாயிற்று. ஏகாதிபத்தியங்களுக்கு சிறிய நாடுகள் இரையானதும், வலியவனுக்கு எளியவர்கள் அடிமையாவதும், அடிபணிந்து போவதும், கை கட்டி, வாய்பொத்திப் போவதும் இந்த ரெளத்திர உணர்வு இல்லாத காரணத்தினால் தான்.

இன்றும் கூட, சமூகத்தில் எல்லோருக்கும் ரெளத்திர உணர்வு வந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கண்ணெதிரே ஒரு பெண்ணுக்கு எதிராகவோ அல்லது ஒரு ஏழை, எளியவருக்கு எதிராகவோ ஒரு அநீதி நடக்கின்றபொழுது நமக்கேன் வம்பு என்று பலபேர் தலையைக் கீழே போட்டுக் கொண்டு, கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள். போலிஸ் அத்துமீறலை கண்டும் ரெளத்திரம் ஏற்படாதால் அது காவல் நிலைய மரணத்தில் முடிகிறது. பேருந்தில் ஒரு இஞ்ச் பிச்சுவாக்கத்தியைக் காட்டி, பிக்பாக்கெட்காரன் ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிடுகிறான். அந்தப் பேருந்தில் 50 பேர் பயணம் செய்தாலும் அவர்களுக்கு ரெளத்திரம் வருவதில்லை. 

சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அரசியல்வாதிகள் செய்யாத அட்டூழியங்கள் எதுவுமில்லை. ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஊராட்சிமன்றத் தலைவரோ, ஒன்றிய கவுன்சிலரோ, மாவட்டக் கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, அரசு அதிகாரிகளோ, கட்சி நிர்வாகிகளோ ஊழல் செய்தாலோ அல்லது தவறிழைத்தாலோ நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். அங்கே, அதைக் காண்கிற நமது மக்களுக்கு ரெளத்திரம் அதாவது கோபம் வருமேயானால், ஆற்று மணல் கொள்ளை போகாது; அநியாயமாக ஒருவர் நிலத்தை இன்னொருவர் எழுதி வாங்க முடியாது. குறைந்தபட்சம் மனிதர்களுக்கு நியாயத்திற்கான கோபம் வருமேயானால் இந்தியாவில் இவ்வளவு கொலைகளும், கொள்ளைகளும், ஊழலும், இலஞ்சமும் நடைபெற வாய்ப்புகளே இல்லை. ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்கிறார்கள்; அதைக் காண்கின்ற எவருக்கும் ரெளத்திரம் ஏற்படாதால், ஆட்சிகள் மாறினாலும் அந்தக் கொள்ளைக் காட்சிகள் தொடர்கின்றன. இந்த நாட்டில் சாதி, இன, மதக் கொடுமைகள் நடப்பதற்கு, பாரதியார் வலியுறுத்திய அநியாயங்களைத் தட்டிக் கேட்க, நியாயத்திற்காகப் போராட, சரியான இடத்தில், சரியான நேரத்தில் ரெளத்திரம் பழகாததே காரணம். இந்திய தேசத்தில் இந்தியர்கள் இப்படி முனை மழுங்கி விடுவார்களோ என்று எண்ணித்தானோ என்னவோ, அன்றே அவர், ’ரெளத்திரம் பழகு,  அநீதிகளை தட்டிக் கேட்பதற்குத் தேவையான அளவு கோபம் கொள்ளப் பழகு’ என்று அறிவுறுத்திச் சென்றார்.

இன்று அவருடைய நூறாவது நினைவு தினத்தைக் அனுசரிக்கக் கூடிய வேளையில், அவருடைய வாழ்க்கையையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தேசப்பற்றுடனும், சமத்துவ உணர்வுடனும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், இந்த நாட்டில் இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற இலட்சியத்தை அடைய, ரெளத்திரம் பழகு; அதாவது நியாயத்திற்காகக் கோபம் கொள், அநியாயம், அட்டூழியம், அராஜகம், ஆதிக்கம் செலுத்துவோரிடத்தில் அஞ்சாதே; அச்சம் தவிர்! என்று சபதமேற்போம்.

பாரத தேச விடுதலைக் கவிஞரின் 100-ஆம் ஆண்டு நினைவு நாளில்,

பாரத தேசத்தைக் கட்டிக்காக்க ரெளத்திரம் பழகுவோம்!

ஏழ்மையை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!!

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவம் படைக்க ரெளத்திரம் பழகுவோம்!

அரசியலில் ஆதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!!

சாதி, மத, இன, மொழி வல்லாதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக