சனி, 18 செப்டம்பர், 2021

ஹிமாச்சலப் பிரதேச மக்களால் கடந்த 50 வருடங்களாக எழுதப்பட்டு வரும் வளர்ச்சி சரித்திரம் குறித்து அனைத்து இந்தியர்களும் பெருமை அடைகிறார்கள்.- திரு ராம்நாத் கோவிந்த்


 ஹிமாச்சலப் பிரதேச மக்களால் கடந்த 50 வருடங்களாக எழுதப்பட்டு வரும் வளர்ச்சி சரித்திரம் குறித்து அனைத்து இந்தியர்களும் பெருமை அடைகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ஹிமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆவதை ஒட்டி கூட்டப்பட்ட அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் இன்று பேசிய குடியரசுத் தலைவர், இந்த வளர்ச்சி பயணத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து முந்தைய அரசுகளும் முக்கிய பங்கை வகித்துள்ளதாக கூறினார்.

முன்னாள் முதல்வர்கள் மறைந்த டாக்டர் ஒய் எஸ் பர்மர், மறைந்த திரு தாக்கூர் ராம் லால், திரு சாந்தகுமார், திரு பிரேம்குமார் துமல் மற்றும் மறைந்த திரு வீரபத்ர சிங் ஆகியோரின் பங்களிப்புகளை திரு கோவிந்த் பாராட்டினார்.

மாநிலத்தின் வளர்ச்சி பயணத்தை மக்களிடையே கொண்டு சென்ற ஹிமாச்சலப் பிரதேச அரசின் முன்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார். வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை பல்வேறு துறைகளில் ஹிமாச்சலப் பிரதேசம் அடைந்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆறுகள் தூய்மையாகவும் அம்மாநிலத்தின் மண் ஊட்டச்சத்து மிக்கதாகவும் உள்ளதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தை இன்னும் அதிக அளவில் செய்யுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா, கல்வி, வேலைவாய்ப்பு குறிப்பாக சுய வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் நீடித்த வளர்ச்சியில் முக்கிய பங்குள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

மிகவும் இயற்கை எழில் வாய்ந்த மாநிலம் இது என்பதால் வளர்ச்சிக்கான தொடர் முயற்சிகளை நாம் எடுக்கும் போது அதன் இயற்கை அழகு மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக