புதன், 29 செப்டம்பர், 2021

பொதுத்துறை- தனியார் துறை கூட்டணி, இராணுவ உற்பத்திப் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.- மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சர்வதேச பாதுகாப்புச் சூழலில் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை அரசு உருவாக்கியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) வருடாந்திரக்  கூட்டத்தில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், அதிகரித்துவரும் பாதுகாப்பு விஷயங்கள், எல்லைப் பூசல்கள் போன்றவற்றினால் ராணுவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

“குறைந்த செலவில் தரமான அணுகுமுறையுடன் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா என்று கூறும் போது, பொதுத்துறை, தனியார் துறை, கல்வித் துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் இந்தியாவை ராணுவ ஏற்றுமதியாளராக உருவாக்கும் வகையில் நவீன ரக, உயர்தர, குறைந்த செலவிலான உபகரண உற்பத்தியின் இருப்பிடமாக இந்தியப் பாதுகாப்புத் தொழில்துறை விளங்குவதாக அவர் கூறினார். எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்தியாவில் தயாரிக்கவும்’ மற்றும் 'உலகிற்காக தயாரிக்கவும்’ என்ற அரசின் உறுதித்தன்மையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். வெண்மைப் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சியைப் போல பொதுத்துறை – தனியார்துறை  கூட்டணி வரும் காலங்களில் இராணுவ உற்பத்திப் புரட்சி என்று அழைக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்ளூர்த் தயாரிப்புகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய திரு. ராஜ்நாத் சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தற்சார்பு இந்தியா இலக்கை அடையவும், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் அரசு மேற்கொண்டு வரும் ஏராளமான சீர்திருத்தங்களைப் பட்டியலிட்டார்.

எஸ்ஐடிஎம் சாம்பியன் விருதுகளை நிகழ்ச்சியின் போது திரு. ராஜ்நாத் சிங் வழங்கினார். இது போன்ற முயற்சிகள் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு முக்கியமான பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக