செவ்வாய், 21 செப்டம்பர், 2021

‘சமுத்திர சக்தி’ பயிற்சியில் இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைகள் ஈடுபட்டுள்ளது.


 சுண்டா ஜலசந்திக்கு அருகே 2021 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறவுள்ள ‘சமுத்திர சக்தி’ எனும் மூன்றாவது இருதரப்பு பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கட்மட் ஜகார்தாவுக்கு 2021 செப்டம்பர் 18 அன்று சென்றடைந்தன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இருதரப்பு கடற்படைகளுக்கிடையே பரஸ்பர புரிதல் மற்றும் கடல்சார் செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டதாகும். சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகளின் பொதுவான புரிதலை உருவாக்கவும் சரியான தளத்தை இந்த பயிற்சி வழங்கும்.

இதில் கலந்து கொள்ளும் இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கட்மட், உள்நாட்டிலேயே நவீன வசதிகளோடு கட்டமைக்கப்பட்டவையாகும். விசாகப்பட்டினத்தில் இருந்து செயல்படும் இந்திய கடற்படையின் கிழக்கு தளத்தின் கீழ் இந்த கப்பல்கள் செயலாற்றுகின்றன.

இந்தோனேசிய கடற்படையின் சார்பில் கேஆர்ஐ புங்க் டோமோ, கேஆர்ஐ மலஹயாதி ஆகிய கப்பல்களும், சிஎன்-235 விமானம் உள்ளிட்டவை பயிற்சியில் பங்கேற்கின்றன.

கொவிட் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் ‘சமுத்திர சக்தி’ மூன்றாவது இருதரப்பு பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே ஒத்துழைப்பு மேம்பட்டு, இந்திய பசிபிக் பகுதியில் வலுவான நட்புறவு உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக