செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இந்தியாவை உலக தலைமையகமாக உருவாக்குவதற்கான பங்களிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.-திரு பியூஷ் கோயல்


 “ஏற்றுமதியாளர்களுக்கு உதவவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கவும் 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது”, என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல்  கூறினார்.

நொய்டா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வர்த்தகம் மற்றும் வணிக வாரத்தின் துவக்க நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்திய அவர், தரம், உற்பத்தி, திறமை மற்றும் புதுமையின் அடையாளமாக இந்தியாவை மாற்றுவதே நமது முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் 7 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை அமைச்சகம் நடத்த உள்ளது.

தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை உத்தரப் பிரதேசம் மேம்படுத்தியிருப்பதன் வாயிலாக அந்த மாநிலத்தில் வர்த்தகம் மேற்கொள்வது எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவை உலக தலைமையகமாக உருவாக்குவதற்கான பங்களிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காலத்திலும் பிரதமரின் சீரிய தலைமையின் கீழ் நமது பொருளாதாரம் புத்துயிர் பெற்று ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்து வருவதாக திரு கோயல் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக