சனி, 18 செப்டம்பர், 2021

நமது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றும் போது இந்தப் பொதுவான பொறுப்புணர்ச்சியை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 அமைப்பு முறை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துவதற்கு தணிக்கை நடவடிக்கைகள் தனித்துவம் வாய்ந்த வாய்ப்பாக அமைவதுடன், நடைமுறைகளின் மேம்படுத்துதலை பரிந்துரைக்கும் உயரிய நிலையை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வகிப்பதாக குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். சிம்லாவின் தணிக்கை மற்றும் கணக்கியல் தேசிய அகாடமியில் நடைபெற்ற 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் அலுவலர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 18 மாதங்களாக கொவிட்-19 பெருந்தொற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, நாடு கடினமான தருணத்தை சந்தித்து வருவதாக அவர் கூறினார். இதன் காரணமாக மக்களின் துயரை நீக்கவும், அவர்களது நல்வாழ்விற்காகவும் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர்,  இந்த உதவிகள் ஏழை மக்களின் நல்வாழ்விற்காக முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் பணியில், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி மிக முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமைப்பு முறைகளை மேம்படுத்துவதற்கான உள்ளீடுகளை அளிக்கும் வாய்ப்புகள் குறித்தும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதுபோன்ற நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நமது பொது சேவைகளின் தரத்தில் நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்றார் அவர்.

நாட்டு மக்களின் வசதிக்காக அரசு நடைமுறைகள் விரைவாக மின்னணுமயமாக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நேரடி பண பரிமாற்ற முறையின் வாயிலாக, கணினி பொத்தானை அழுத்தியதும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள ஏழை குடிமகனுக்கும் பணம் உடனடியாக சென்றடைகிறது. தணிக்கைத் துறையினர் பார்வையில் இது ஒரு ‘சிறிய சவாலாகவும்’, அதேவேளையில் ‘மிகப்பெரிய வாய்ப்பாகவும்' விளங்குகிறது. மேம்பட்ட பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான தரவுகளில் உள்ள தகவல்களை ஓரிடத்திலிருந்தே எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் தணிக்கை பணிகளை கூடுதல் கவனத்துடனும் தரமாகவும் மேற்கொள்ள முடியும்.

ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதிலும், அவர்களின் முகங்களில் புன்னகையைத் தவழச் செய்வதும் பொது சேவையில் ஈடுபடுவோருக்கு மிகச்சிறந்த மகிழ்ச்சியைத் தருமென்று பயிற்சி அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவர் கூறினார். நமது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றும் போது இந்தப் பொதுவான பொறுப்புணர்ச்சியை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக