செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வியில் அரசியலைப் புகுத்தி வாக்குவங்கிக்காக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவிதமான அவநம்பிக்கையையும் இனி எந்த அரசியல் கட்சியும் கொடுக்கக்கூடாது.- ஜி.கே.வாசன்


நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி  தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துக்கொண்டது வேதனைக்குரியது.

நாமக்கல்லில் தனியார் பள்ளியில் படித்த போது 10 ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்களை பெற்று அப்பள்ளியில் முதலிடத்தைப் பிடித்தார். மேலும் 12 ஆம் வகுப்பில் 600 – க்கு 562.28 மதிப்பெண்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய நிலையில் மதிப்பெண் சம்பந்தமாக பயந்த நிலையில் உயிரிழந்திருப்பதால் பெற்றோரும், அப்பகுதி மக்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீட் தேர்வு சம்பந்தமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்நிலை நீடிக்கக்கூடாது.

குறிப்பாக நீட் தேர்வு நடைபெற்று முடிவுற்ற பிறகு மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டுமே தவிர மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியிடுவது ஏற்புடையதல்ல.

கல்வியில் அரசியலைப் புகுத்தி வாக்குவங்கிக்காக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவிதமான அவநம்பிக்கையையும் இனி எந்த அரசியல் கட்சியும் கொடுக்கக்கூடாது என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது உயிரிழந்த மாணவி கனிமொழியின் இழப்பு அவரது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் பெற்றோருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே நீட் தேர்வு சம்பந்தமாக நீங்கள் ஒருவர் கூட மனம் தளராமல், நன்கு படித்து, தொடர் முயற்சி மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர தவறான முடிவுக்கு வரக்கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக