செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். - கே.எஸ்.அழகிரி


 தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில் அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதலமைச்சரை மனதாரப் பாராட்டுகிறேன்.

கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்த அ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிற வகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம். ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலே முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசிடம் நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலைகளுக்கு  அ.தி.மு.க. ஆட்சி தான் பொறுப்பாகும். 

கடந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்தது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன்மூலம் தமிழக சட்டசபையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம். அத்தகைய படுபாதகச் செயலை செய்தவர்கள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள் இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும். 

அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்த அ.தி.மு.க.வினருக்கு உரிய தண்டனையை கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. இதுகுறித்து சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சமஉரிமை இருக்கிறது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசனை செய்து ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் பொது பட்டியலில் உள்ள கல்வி சம்மந்தமான நீட் தேர்வு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடு விளைவிப்பதாகும். 

எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரிய அழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி  உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். இதன்மூலம், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற  தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக