ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நாடு முழுவதும் வேகம் எடுக்கிறது.- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்


 அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி  தொடங்கப்பட்டதில் இருந்து, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  24 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இன்று வரை 1,03,12,095 தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் பேர் ஆண்கள்.

இந்த இ-ஷ்ரம் இணையதளத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இத்துறை இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கி வைத்தனர்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பதிவு மையத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று கலந்துரையாடி அவர்களுக்கு இ-ஷ்ரம் அட்டைகளை வழங்கினார். 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பதிவு மையத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி, கடந்த 18ம் தேதி கலந்துரையாடி இ-ஷ்ரம் அட்டைகளை வழங்கினார்.

சமீபத்திய தரவுகள் படி பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும்  மேற்குவங்கத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக