வியாழன், 16 செப்டம்பர், 2021

பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் ஊதியத்தொகையை அரசு உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும்! - பெ.ஜான்பாண்டியன்


 பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் ஊதியத்தொகையை அரசு உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும்! 

தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் 2006 ஆண்டு முதல் 10 உறுப்பு மற்றும் மாதிரி கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதில் பணிபுரிவதற்கு பல்கலைக்கழகத்தால் பத்திரிக்கை விளம்பரம் கொடுக்கப்பட்டு முறையாக குழு அமைத்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டு,பணி நியமன சான்று வழங்கப்பட்டு கெளரவ விரிவுரையாளர்கள் P.hD.,முடித்திருந்தால் 15,000, NET/SLET 13,000,M.Phil 12,000 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தால் 12 -மாதங்களும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் தமிழகத்திலுள்ள 41 உறுப்புக்கல்லூரிகளையும் அரசே எடுத்து நடத்தும் என அரசு அறிவித்து ,அரசு ஊதியம் வழங்கும் வரை அந்தந்த பல்கலைக்கழகங்களே அந்த கல்லூரி விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான நிதியினை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியது. 

தற்போது இந்த வருடம் 2021 மே மாதம் வரை பாரதிதாசன் பல்கலைக்கழகம் முறையாக சம்பளம் வழங்கி வந்தது. ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்டு ( மூன்று)  மாதம் வரை சம்பளம் வழங்கப்பட வில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகம்,எங்களிடம் நிதி இல்லை என்கிறது,அரசு சம்பளத்தை வழங்கச்சொல்கிறது. இந்த சூழலில் கெளரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. மேலும், முந்தைய அரசு அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு 2020 ஜனவரியிலிருந்து ரூ 15,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கி அரியர் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் உறுப்புக்கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமும் மூன்று மாதங்களுக்கு வரவில்லை,நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காமல் கல்லூரியில் ( தேர்வுத்தாள் சேகரிப்பு,தேர்வுத்தாள் திருத்தும் பணி,நேரடி வகுப்புகள் ) , இந்த கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை என அனைத்து பணிகளையும் கல்லூரி நிர்வாகமும்,அரசும் எங்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது என்கின்றனர்,

ஆகவே கெளரவ விரிவுரையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையையும் அரசு உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அதனைப்போல கர்நாடகா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் அரசு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திமுக அரசு தமிழகத்தில் பணிப்புரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் மாத ஊதியத்தையும் ஆவண செய்து வழங்கிடுமாறு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக