செவ்வாய், 28 செப்டம்பர், 2021

புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு


 பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 26, 2021 அன்று, புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

பணியின் வளர்ச்சி நிலையைக் கேட்டறிந்ததுடன், உரிய காலத்திற்குள் திட்டம் நிறைவடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களது நலனையும்  விசாரித்தார்.  புனிதமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு மாதாந்திர மருத்துவ சோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மின்னணு காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பணியாளர்களின் பெயர், சொந்த ஊர், புகைப்படம் ஆகியவை அடங்கிய தகவல்கள் பிரதிபலிக்கப்படுவதுடன் கட்டிட பணியில் அவர்களது பங்களிப்பையும் இந்தக் காப்பகம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தங்களது பணி மற்றும் பங்களிப்பை எடுத்துரைக்கும் சான்றிதழ்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மிகக் குறைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரதமரின் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தை பிரதமர் அவ்விடத்தில் செலவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக