வேடந்தாங்கல் சரணாலயத்தை வகைப்படுத்தும்
திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்
வனத்துறை செயலாளருக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்
தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்; விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக வனத்துறை செயலாளர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோருக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
பெறுநர்:
1. திரு. சந்தீப் சக்சேனா அவர்கள்,
கூடுதல் தலைமைச் செயலாளர்
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
2. திரு. எச். மல்லேசப்பா அவர்கள்,
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்
மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், வனத்துறை
பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015
அன்புடையீர்....
வணக்கம்!
(பொருள்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியை மறு வரையறை செய்வதை கைவிட ஆணையிடுதல் & சரணாலயப் பகுதியில் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துதல் - தொடர்பாக)
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. பறவைகள் நலனிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சருமான நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் இந்த விளக்கம் ஐயங்களை போக்குவதற்கு பதிலாக ஐயங்களை அதிகரிக்கச் செய்திருக்கிறது. வேடந்தாங்கல் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப் படப்போவதில்லை என்றும், மாறாக இப்போதுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோமீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப் படுத்த முடிவு செய்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது உண்மையை மூடி மறைக்கும் முயற்சியாகும்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1998-ஆம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டதாகும். அப்போது வேடந்தாங்கல் ஏரி அமைந்துள்ள 73 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 கி.மீ சுற்றளவும் மையப்பகுதியாகவே கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை மட்டும் மையப் பகுதியாக அறிவித்து விட்டு, அடுத்த இரு கிலோ மீட்டர் சுற்றளவை இடைநிலை பகுதியாகவும், அடுத்த இரு கிலோ மீட்டர் சுற்றளவை சுற்றுச்சூழல் பகுதியாகவும் மாற்ற வனத்துறை முயல்கிறது. 5 கிமீ சுற்றளவுள்ள மையப்பகுதியை ஒரு கிலோ மீட்டராக சுருக்குவது சரணாலயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடாதா? இந்த விதிமீறலை அலங்கார வார்த்தைகளை போட்டு மறைக்க வனத்துறை முயல்வது ஏன்?
அதுமட்டுமல்ல..... தமிழக வனத்துறையின் சார்பில் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சரணாலயப்பகுதியின் கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதி சுற்றுச்சூழல் பகுதியாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு முன் வனத்துறையின் செயலாளராக இருந்த ஷம்பு கல்லோலிகர் அவர்கள் தேசிய வன விலங்குகள் வாரியத்தின் உறுப்பினர் செயலருக்கு எழுதிய 19.03.2020 தேதியிட்ட கடிதத்தில், கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை சரணாலயப் பகுதி என்ற நிலையிலிருந்து மாற்றி (de-notify) சாதாரணப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது. வனச்சரணாலயப் பகுதியை சாதாரணப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று தேசிய வனவிலங்குகள் நலவாரியத்திடம் விண்ணப்பித்து விட்டு, அதை தமிழக மக்களிடம் மறைப்பது ஏன்? தவறான தகவல் தருவது ஏன்? யாருக்கு சாதகமாக வனத்துறை இப்படி செயல்படுகிறது?
வேடந்தாங்கல் பகுதியில் உள்ள சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தின் ஆலை ஏற்கனவே சரணாலயப் பகுதிக்குள் தான் உள்ளது. ஆனாலும் அந்த ஆலை வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட 1998-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டது என்பதால் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்க முடியாது. இத்தகைய சூழலில் அந்த நிறுவனம் 17.25 ஏக்கர் பரப்பளவில் ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் 37.20%, அதாவது 6.42 ஏக்கர் நிலம் சரணாலயப் பகுதியில் உள்ள பசுமைப் பகுதியில் வருகிறது. சன் ஃபார்மா நிறுவனத்தின் விரிவாக்கப்பகுதி சரணாலயப் பகுதிக்குள் உட்புறத்தில் 0.72 கிலோ மீட்டர் தொலைவிலும், ஏரியிலிருந்து 3.72 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த பகுதியில் எந்த விரிவாக்கத் திட்டத்திற்கும் இடம் அளிக்க முடியாது. இந்த சூழலை மாற்றி சன் ஃபார்மா நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிப்பதற்காகத் தான் சரணாலயப் பகுதியின் கடைசி இரு கிலோ மீட்டர் சுற்றளவை சாதாரணப் பகுதியாக மாற்ற வனத்துறை முயல்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல தருணங்களில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் அடிப்படையில், சுற்றுச்சூழல் பகுதி என்பது பறவைகள் சரணாலய எல்லையின் வெளியில் தான் அமைக்கப்பட வேண்டும். அதன்படி, வேடந்தாங்கலில் சுற்றுச்சூழல் பகுதி (Eco Sensitive Areas- ESA) உருவாக்கப்பட வேண்டும் என்றால், அது ஏற்கனவே சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியில் தான் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக வனத்துறையோ, இருக்கும் 5 கி.மீ சுற்றளவில் இந்த பகுதிகளை உருவாக்க முயல்கிறது. அதன்படி சரணாலயப் பகுதி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் சுருக்கப்பட்டு விடும். இந்த உண்மையை வனத்துறை மறைப்பது ஏன்?
வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒட்டுமொத்த 5 கிலோ மீட்டர் சுற்றளவும் மையப் பகுதியாக இருந்து வருகிறது. அதனால் அந்த பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால், விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு ஆம்கோ பேட்டரீஸ் ஆலை 2010-ஆம் ஆண்டிலும் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலை 2011-ஆம் ஆண்டிலும் திறக்கப்பட்டுள்ளன. சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
மேற்கண்ட வினாக்கள் அனைத்துக்கும் விடை அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. எனவே, இந்தக் கடித்தத்தில் நான் எழுப்பியுள்ள வினாக்கள் அனைத்துக்கும் வனத்துறையின் செயலாளர் என்ற முறையில் தாங்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்; விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. இதை தமிழக அரசு செய்யத் தவறும்பட்சத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்வு காண வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக