செவ்வாய், 6 ஜூலை, 2021

சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆழ்ந்த இரங்கல்


 சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் ஆழ்ந்த இரங்கல்

பாஜக அரசின் வன்ம போக்கிற்கு ஸ்டேன் சுவாமி பலிகடா என குற்றச்சாட்டு  

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;

ஜார்கண்ட் மாநிலத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிவாசி மக்களிடையே தன்னலமற்ற பணிகளை ஆற்றியதோடு, தொடர் போராட்டம் மூலம் ஆதிவாசி மக்கள் வனத்தின் நிலங்களுக்கு உரிமை கோரும் வன உரிமைகள் சட்டம்(2016) கொண்டுவரக் காரணமாக இருந்த, சமூக செயற்பாட்டாளர் திருச்சியை சேர்ந்த 84 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அன்னாரது மரணத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பாஜக ஆட்சியில் அர்பன் நக்சல், தேச விரோதிகள்  பெயரால் மனித உரிமை ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள், தலித் மற்றும் சிறுபான்மை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக, யு.ஏ.பி.ஏ. எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், புனையப்பட்ட பீமா கொரேகான் வழக்கில், மத்திய பாஜக அரசால் கொடும் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் ஸ்டேன் சுவாமி அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக மரணித்துள்ளார்.   ஸ்டேன் சுவாமி அவர்களின் மரணத்திற்கு மத்திய பாஜக அரசே முழு காரணம் என்பதை மறுக்க முடியாது. உண்பது, நடப்பது போன்ற பணிகளை கூட பிறரின் உதவியின்றி செய்ய முடியாத பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு பிணை வழங்குவதை கூட பாஜக அரசு தடுத்தது. நடுக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு சிறையில் உறிஞ்சுக் குழலும், குவளையையும் கூட மறுத்த அவலம் நடந்தது. 

பாதிரியார் ஸ்டேன் சுவாமி அவர்களுக்கும், பீமா கொரேகான் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையிலும்,  புனேயில் நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதை காரணமாக கூறி என்.ஐ.ஏ. கைது செய்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பவர்களைப் பழிவாங்கும் நோக்கில் என்.ஐ.ஏ.வைக் கொண்டு, யு.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கும் மத்திய பாஜக அரசின் வன்ம போக்கிற்கு ஸ்டேன் சுவாமி பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். இத்தகைய கொடும்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக