செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய பாரா-விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்


 டோக்கியா 2020 பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பாரா-விளையாட்டு வீரர்கள் குழு மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாதுகாவலர்கள், பயிற்சியாளர்களுடன்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை; தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பாரா விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் பாராட்டினார்.  பாரா ஒலிம்பிக் போட்டிக்கான, மிகப் பெரிய அளவிலான குழுவின் கடின உழைப்பை அவர் பாராட்டினார். பாரா விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய பின், டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா புதிய வரலாறு படைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளதாக அவர் கூறினார்.   இன்றைய புதிய இந்தியா, பதக்கங்களுக்காக அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால் அவர்கள் தங்களின் மிகச் சிறப்பானதை வெளிப்படுத்துவர்  என எதிர்பார்க்கிறது என்று பிரதமர் கூறினார். தற்போதைய ஒலிம்பிக் போட்டியைக் குறிப்பிட்டு பிரதமர் கூறுகையில், வென்றாலும், அல்லது வெற்றியைத் தவறவிட்டாலும், விளையாட்டு வீரர்களின் முயற்சிகளில் நாடு உறுதியாகத் துணைநிற்கிறது என்றார்.

விளையாட்டுத் துறையில் உடல் பலத்துடன், மனபலத்தின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் விவாதித்தார். தங்கள் சூழ்நிலைகளையும் சமாளித்து, முன்னேறுவதற்காக பாரா விளையாட்டு வீரர்களை அவர் புகழ்ந்தார்.  குறைவான வெளிப்பாடு,  புதிய இடம், புதிய நபர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மனதில் வைத்து,  இந்தியக் குழுவினருக்கு விளையாட்டு மனோதத்துவம் பற்றிய பயிலரங்குகள், கருத்தரங்குகள் மூலமாக மூன்று அமர்வுகள் நடத்தப்பட்டன.

நமது கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் திறமையானவர்கள் நிறைந்துள்ளனர். அதற்கு உதாரணமாக பாரா விளையாட்டு வீரர்கள் குழுவினர் உள்ளனர் என பிரதமர் கூறினார்.  நமது இளைஞர்களுக்கு அனைத்துப் பயிற்சிகளும், வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.  விளையாட்டுத் துறையில் பதக்கம் வெல்லும் திறமைகளுடன் பல இளம் விளையாட்டு வீரர்கள் உள்ளனர் என பிரதமர் கூறினார்.  நாடு, அவர்களைச் சென்றடைய முயற்சிக்கிறது, ஊரகப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார். உள்ளூர்த் திறமைசாலிகளை அங்கீகரிக்க, 360 கேலா இந்தியா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.  விரைவில் இந்த எண்ணிக்கை 1000 மையங்களாக அதிகரிக்கப்படும்.  விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சாதனங்கள், மைதானங்கள், இதர வசதிகள், உள்கட்டமைப்புகள் கிடைக்கச் செய்யப்படுகின்றன.  விளையாட்டு வீரர்களுக்கு, திறந்த மனதுடன் நாடு உதவி வருகிறது. ‘ஒலிம்பிக் வெற்றி மேடை இலக்கு’ (‘Target Olympic Podium Scheme’)  திட்டம் மூலம் தேவையான வசதிகளையும், இலக்குகளையும் நாடு வழங்கியது என பிரதமர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் உச்சத்தை அடைவதற்கு, நாம் அச்சங்களைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.  ஒரு குழந்தைக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால், ஒன்றிரண்டு விளையாட்டுக்களைத்  தவிர வேலைவாயப்புகள் இல்லை என்ற அச்சம்  பழைய தலைமுறை குடும்பங்களின் மனதில் இருந்தது.  இந்த பாதுகாப்பற்ற தன்மை அழிக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறினார்.  இந்தியாவில் விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்க்க, நமது வழிகளையும், அமைப்புகளையும் தொடர்ந்து நாம் முன்னேற்றி வர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.  சர்வதேச விளையாட்டுக்கள் ஊக்குவிப்புடன், பாரம்பரிய விளையாட்டுகளும் புதிய அடையாளத்தைப் பெற்று வருகின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த நோக்கில், மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம், புதிய தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம், கேலோ இந்தியா இயக்கம் போன்றவை அரசின் முக்கியமான நடவடிக்கைகள் என பிரதமர் குறிப்பிட்டார்.

எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை விளையாட்டு வீரர்கள் வலுப்படுத்துவதாக பிரதமர் கூறினார். ‘‘எந்த மாநிலம், எந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், என்ன மொழி நீங்கள் பேசினாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று நீங்கள் இந்தியக் குழுவினர். இந்த உணர்வு நமது சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் ஊடுருவ வேண்டும்’’ என  பிரதமர் வலியுறுத்தினார்.

முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் அளிப்பது நலஉதவிகளாகக் கருதப்பட்டது, இன்று தனது கடமையின் ஒரு பகுதியாக நாடு அதை செய்து கொண்டிருக்கிறது.  அதனால் தான்,  மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான பாதுகாப்பை அளிக்க, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியது என  பிரதமர்  கூறினார்.   புதிய சிந்தனைக்கு ‘சுகம்யா பாரத் பிரசாரம்’ மிகப் பெரிய உதாரணமாக உள்ளது என அவர் கூறினார்.  இன்று நூற்றுக்கணக்கான அரசுக் கட்டிடங்கள், ரயில்வே நிலையங்கள், ரயில் பெட்டிகள், உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகின்றன.  இந்திய சைகை மொழிக்கு நிலையான அகராதி, என்சிஇஆர்டி பாடத்திட்டங்கள் சைகை மொழியில் மாற்றம் போன்றவை நாடு முழுவதும் ஏராளமான திறமைசாலிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து, நம்பிக்கையை அளிக்கிறது எனக் கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.

9 விளையாட்டு பிரிவுகளில் 54 பாரா விளையாட்டு வீரர்கள், இந்தியா சார்பில் டோக்கியோ செல்கின்றனர்.  இது, பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், இதுவரை இல்லாத அளவிலான இந்தியாவின் மிகப் பெரிய குழுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக