செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக ரெனாக் மலைச் சிகரத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி ஏற்றம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு


 விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தைக் கொண்டாடும் வகையில், டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறுதல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கிளைம்பதானின் நிறைவு நிகழ்ச்சியில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று கலந்து கொண்டார். சிக்கிமில் உள்ள இமாலயப் பகுதிகளின் 4 சிறிய மலைச் சிகரங்களில் ஏப்ரல் 20-25, 2021 வரை கிளைம்பதான் நடைபெற்றது. க்ருப் கேப்டன் ஜெய் கிஷன் தலைமையில் 125 மலையேறும் வீரர்கள் ரெனாக், ஃப்ரே, பிசி ராய் மற்றும் பலுங் ஆகிய மலைச் சிகரங்களில் ஏறினார்கள்.

7500 சதுர அடியில், 75 கிலோ எடையிலான தேசியக் கொடி, ரெனாக் மலைச் சிகரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது. மலைச் சிகரங்களின் மீது ஏற்றப்படும் மாபெரும் இந்திய தேசியக் கொடி என்ற சாதனையை ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில் இந்த நிகழ்வு படைத்துள்ளது. டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறுதல் நிறுவனத்தில் 75 மணி நேரம் இடைவிடாமல் 2.51 லட்சம் முறைகள் சூரிய நமஸ்காரம் செய்தும் இந்தக் குழு உலக சாதனையைப் படைத்தது.

இந்தத் தனித்துவம் வாய்ந்த நிகழ்வை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெகுவாகப் பாராட்டினார். இது போன்ற முன்முயற்சிகள் இளைஞர்களிடையே நாட்டுப் பற்றையும் சாகச உணர்வையும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்து, பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்களை அவர் வெளியிட்டார்.

கன்னியாகுமரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் தேசியக்கொடியைக் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக