புதன், 1 செப்டம்பர், 2021

அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 3.30 கோடியை கடந்தது.


 இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டில் 28 லட்சத்திற்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் 25 நிலவரப்படி 3.30 கோடியை கடந்துள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தவரை, இது வரை மொத்தம் 24,55,438 பேர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, அதிகம் பேர் இணைந்துள்ள 11 மாநிலங்களில் தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பிகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.

2021 ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினர்களில், 78 சதவீதம் பேர் ரூ 1000 ஒய்வூதிய திட்டத்தையும், 14 சதவீதம் பேர் ரூ 5,000 ஒய்வூதிய திட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பெண்களாக உள்ளனர். சுமார் 44 சதவீதம் பேர் 18-25 வயதுடைய இளம் வயதினர் ஆவர்.

அடல் ஓய்வூதிய திட்டத்தின் செயலியில் சமீபத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அடல் ஓய்வூதிய திட்டத்தின் மக்கள் சாசனம் மற்றும் தகவல் குறிப்பேடு 13 பிராந்திய மொழிகளில் தற்போது கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக