சனி, 4 செப்டம்பர், 2021

திராவிடத்தின் முன்னோடியான அயோத்திதாசப் பண்டிதருக்கும் - ‘‘தந்தை பெரியாரே என் குரு’’ என்று சொன்ன வ.உ.சி.க்கும் சிறப்பு என்ற அறிவிப்பு தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தின் புதிய முத்துக்கள்! - கி.வீரமணி


திராவிடத்தின் முன்னோடியான அயோத்திதாசப் பண்டிதருக்கும் - ‘‘தந்தை பெரியாரே என் குரு’’ என்று சொன்ன வ.உ.சி.க்கும் சிறப்பு  என்ற அறிவிப்பு தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தின் புதிய முத்துக்கள்! - கி.வீரமணி

திராவிட ஆட்சியின் பெருமை - வரலாற்றின் பொன்னேடுகளாகட்டும்!

நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சராக நாளும் ஒளிவீசி செயல் செய்து சரித்திரம் படைக்கிறார் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்!

சட்டமன்றத்தின் நடவடிக்கைகளும், நாள்தோறும் அறிவிப்புகளும் நாட்டோரை, கேட்டோரைப் பரவசப்படுத்தி வருகின்றன.

நேற்று (3.9.2021) சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் செய்தது தேனிசையாய் காதுகளில் ஒலித்து மக்களை மகிழ்விக்கிறது.

திராவிடத்தின் முன்னோடியான ‘ஒரு பைசாத் தமிழன்’ ஏடு நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் பெருமகனாருக்கு வடசென்னையில் மணிமண்டபம், ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெருமை பெற்றும், தான் கொண்ட இலட்சியத்திற்காக தனது வாழ்வாதாரத்தையே இழந்து, வறுமையில் வாடிய நிலையில், சமூகநீதிக் கொடியைத் தாங்கி, தந்தை பெரியாரை தமது குரு என்று தந்தை பெரியாருக்கு - நாகையில், அவர் படம் திறந்து - புகழ் மாலை சூட்டிய புடம்போட்ட தியாகத் திருவுருவமான, தன்னலம்பாரா பொதுநலத்தின் இலக்கண இலக்கியமாய் என்றும் திகழும் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவர்தம் சிறப்புகளுக்கு நன்றி கூறும் பண்பாடு தமிழ்நாட்டில் இன்னமும் பட்டுப் போகவில்லை; பசுமையாகவே இருக்கிறது என்று பாரறியச் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பது - தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தின் முத்துக்களில் புதிய முத்துக்களாக (இவை இரண்டும்) அமைகின்றன.

பண்டித அயோத்திதாசர்பற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம், குறள் போன்று, கூறப்பட்டு குவலயத்தை குதூகலமடையச் செய்கிறது.

திராவிடத்தின் முன்னோடி!

தந்தை பெரியார் அவர்களே, ‘‘என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்தி தாசப் பண்டிதர்தான்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அவர் சொன்னதைத் தாண்டி, நான் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை! ‘‘இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜாதியமும், மதமுமே தடை’’ என்று சொன்ன அயோத்தி தாசர், ‘மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ, அவர்தான் மனிதர்’ என்று முழங்கினார் என்று விளக்கிவிட்டு, 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்தி தாசப் பண்டிதர் அவர்களுடைய 175 ஆம் ஆண்டு விழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும் வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டப்பட வேண்டிய அறிவிப்பு - திராவிடத்தின் முன்னோடி அவர்!

வ.உ.சி. போன்ற ஒரு ஒப்பாரும் மிக்காருமிலா ஒப்பற்ற தன்னலம் மறுத்த தகைசான்ற சமூகநீதிப் போராளியாகிய வீரரை இந்திய வரலாறு என்ன, உலக வரலாற்றில் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

வேர்களைத் தேடி, விழுதுகள் அவர்களைப் பெருமைப்படுத்துவதன்மூலம் அறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனை எப்படி சரித்திரத்தின் ஜீவநதியாகி ஓடுகிறதோ அதுபோல இவை இவ்வாட்சியின் மாட்சிக்கும் தனிப்பெருமை சேர்க்கும்.

நாடும், நாமும் எதிர்பார்க்கிறோம்!

தந்தை பெரியார் என்ற அறிவுச் சூரியனைப்பற்றி சட்டப்பேரவையில் புதுக்கோட்டை உறுப்பினர் முத்துராஜா பேசியுள்ளார்.

முதலமைச்சரின் முழுதாய்ந்த முத்தான அறிவிப்பையும் நாடும், நாமும் எதிர்பார்க்கிறோம்.

திராவிட ஆட்சியின் பெருமை - வரலாற்றின் பொன்னேடுகளாகட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக