வியாழன், 9 செப்டம்பர், 2021

காரைக்குடி பகுதியில் தொடங்கவிருக்கும் கல்லூரிக்கு தொண்டறச் செம்மல் இராம.சுப்பையா பெயரை சூட்டுக! - கி.வீரமணி


 தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் மேலான பரிசீலனைக்கு!

காரைக்குடி பகுதியில் தொடங்கவிருக்கும் கல்லூரிக்கு தொண்டறச் செம்மல் இராம.சுப்பையா பெயரை சூட்டுக! - கி.வீரமணி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மானியக் கோரிக்கை விவாதத்தின்போதும் தேனிசையாக பல அருமையான அறிவிப்பு மழை பெய்துகொண்டே உள்ளன.

கேட்போர் நெஞ்செமல்லாம் குளிர்கின்றது. 150 நாள்களில் 150 ஆண்டு வரலாறு!

வழக்கமான வாக்கெடுப்பின்போது சட்டமன்ற நடைமுறையில், ‘‘ஏற்போர் ‘ஆம்' என்க; மறுப்போர் ‘இல்லை' என்க'' என்பதற்கே இடமின்றி, அனைத்துத் தரப்புமே ‘ஆம்' என்றே கூறி, அனைத்து அறிவிப்பையும் வரவேற்பது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உள்ள ஆட்சி 150 நாள்களில் 150 ஆண்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் வண்ணம் நடைபெறுவதற்குச் சான்று.

காரைக்குடி, செட்டிநாடு பகுதியில் அரசு சட்டக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி தொடங்கவிருப்பது வரவேற்கத்தக்கதே!

தொண்டறச் செம்மல் காரைக்குடி இராம.சுப்பையா

காரைக்குடி பகுதியில் அமைக்கப்படும் ஒரு கல்லூரிக்கு திராவிடர் இயக்க முன்னோடியும், சுயமரியாதை சமதர்மக் கொள்கை அந்நாளைய போராளியும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றவர்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், செட்டிநாடு பகுதிகளில் அடிநாளில் திராவிடர் இயக்கம் வளர கைமாறு கருதாது எதிர்நீச்சல் அடித்து வளர்த்தவரும், கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் சிறையில் வதிந்த தொண்டறச் செம்மலுமான காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் பெயரைச் சூட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்!

அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதால், கலைஞர் அவர்கள், மேலவை உறுப்பினராக அவரைப் பொறுப்பேற்க வைத்துப் பெருமை செய்தார்.

தியாகிகளைப் போற்றும் சரித்திரம் தொடரட்டும்!

அதன் தொடர்ச்சியாக இந்தச் சிறப்பு மூலம் தியாகிகளைப் போற்றும் சரித்திரம் தொடர்கிறது என்று காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

1935-லேயே அவரது இல்லத்திற்குப் பெயர் ‘சமதர்ம விலாஸ்' என்பதாகும்.

எனவே, சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதலமைச்சர் இதைப் பரிசீலிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக