புதன், 22 ஜனவரி, 2020

டில்லியை திருப்தி செய்வதற்காக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துகிறார்கள் - கி.வீரமணி


டில்லியை திருப்தி செய்வதற்காக 5 மற்றும் 8  ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துகிறார்கள் - கி.வீரமணி
கல்வி என்பது நம்முடைய நாட்டில் இதற்குமுன்னால் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், பிறகு அது கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்றாலும், இப்போது உள்ள நிலைமை, மத்திய அரசுக்கே அது முழுமையாக மாற்றப்பட்டது போல அதனை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே 5 ஆம் வகுப்பிலே தேர்வு, 8 ஆம் வகுப்பிலே தேர்வு, 10 ஆம் வகுப்பிலே தேர்வு, 11 ஆம் வகுப்பிலே தேர்வு, 12 ஆம் வகுப்பிலே தேர்வு, அதற்குப் பிறகு நீட் தேர்வு, அதற்குப் பிறகு நெக்ஸ்ட் தேர்வு என்று இப்படி தேர்வு, தேர்வு, தேர்வு என்று ஆக்கிக் கொண்டிருப்பதே, அதன்மூலமும் சமஸ்கிரு தத்தைத் திணிக்கவேண்டும் என்பது போன்று இருக்கக் கூடிய மத்திய  கல்விக் கொள்கையை, இன்னும் நடைமுறைக்கு இந்திய அளவிற்கு வராத ஒரு சூழ்நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆட்சி - அதிலும் அண்ணா பெயரில் இருக்கக்கூடிய ஓர் ஆட்சி முழுக்க முழுக்க ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக 5 ஆம் வகுப்பிலே தேர்வு, 8 ஆம் வகுப்பிலே தேர்வு  என்று வைத்திருப்பது அக்கிரமுமாகும்.

டில்லியை திருப்தி செய்வதற்காக 5 மற்றும் 8  ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துகிறார்கள்

இதனால் பிள்ளைகள் இடைநிற்றல் என்பது ஏராளமாக வரக்கூடிய வாய்ப்பாக இருக்கும். 5 ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கு என்ன படிக்கின்றோம் என்றே விளங்காத சூழ்நிலையில், கல்வியமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், ‘‘லேசான கேள்விகளை, எளிமையாக கேட்கப்படும்'' என்று சொல்கிறார்.

யாருடைய நிர்ப்பந்தத்திற்காகவோ அவர்கள் இதனை நடத்துகிறார்கள்; யாரையோ திருப்தி செய்வதற்காக, டில்லியை திருப்தி செய்வதற்காக நடத்துகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.

பெற்றோர்களுடைய மிகப்பெரிய ஆதங்கம் இருக்கிறது. பக்கத்தில் இருக்கக்கூடிய புதுவை மாநிலத்தில் நடைபெறக்கூடிய காங்கிரஸ் ஆட்சியில், இன்னுங்கேட்டால், மத்திய அரசினுடைய நேரிடை ஆட்சி அங்கே இருக்கிறது.

அந்த புதுவை மாநிலத்தில் 5 ஆம் வகுப்பிற்கும், 8 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு கிடையாது என்று தெளிவாக அவர்கள் சொல்லுகிறார்கள். ஒரு சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு அந்தத் துணிச்சல் இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஏன் அந்தத் துணிச்சல் இல்லை. அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம்

எனவேதான், உடனடியாக 5 ஆம் வகுப்புத் தேர்வு, 8 ஆம் வகுப்புத் தேர்வு என்று குழந்தைகளை வஞ்சித்து, இடைநிற்றல் என்று சொல்லக்கூடிய ‘டிராப்அவுட்' பெருகக்கூடிய அளவிற்கு, கிராமப் பிள்ளைகளை மீண்டும் மீண்டும் படிக்காமல் இருக்கச் செய்வதற்காகவும், அவர்களுடைய கல்வியில் மண்ணைப் போடக்கூடிய ஏற்பாட்டினை ஒழிக்க வேண்டும்; நிறுத்தவேண்டும் உடனடியாக - இல்லை யானால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட் டத்தை திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ளவர்களோடு தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக