சனி, 25 ஜனவரி, 2020

நீட் தேர்வு பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் ? - ஈஸ்வரன்


‘நீட்டாக’ நடக்கும் நீட் தேர்வு பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் ?.

தமிழக அரசின் இலக்கு என்ன ?.


நேற்றையதினம் நீட் தேர்வு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது என்று பதில் அளித்திருப்பதை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசுப்பள்ளியில் பயின்ற ஒரு மாணவன் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேட்டி இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகப்படியானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்திருக்கிறது என்பது தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளின் நிலையை வெளிக்காட்டுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு கடினமாக இருக்கும், தேர்ச்சி பெறுவது இயலாத காரியம் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. 

அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளின் மீதுள்ள நம்பிக்கை இழந்துவிட்டார்கள். தனியார் நீட் பயிற்சி வகுப்பில் பயின்றால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாக தமிழக அரசே காரணம். தனியார் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வை எளிதாக அணுகி தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த சூழலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு உருவாக்கி கொடுக்க தவறிவிட்டது. தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள், எத்தனை பேர் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சொல்ல வேண்டும். இனிமேலாவது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக