வியாழன், 30 ஜனவரி, 2020

மூன்று நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கச் செய்யும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தவும் - ஜி.கே.வாசன்


தமிழக அரசு – மாநிலம் முழுவதும் கார், பைக், லாரி, வேன், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனத்தை யார் மது அருந்தி ஓட்டினாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 3 நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கச் செய்யும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- ஜி.கே.வாசன்



தமிழக அரசு மாநிலத்தில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலும் எடுக்கும் நடவடிக்கைகள் போன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

காரணம் தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதும், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.

இச்சூழலில் தமிழக அரசு மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும், எத்துறையில் பணிபுரிந்தாலும் அவர்களிடம் அபராதம் வசூலித்தால் மட்டும் போதாது. ஏனென்றால் பல நேரங்களில் அவர்கள் அபராதத்தை கட்டினால் மட்டும் போதும் என்ற மனநிலையில் மீண்டும் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு.

அதாவது பணம் தவறு செய்பவர்களுக்கு மீண்டும் தவறு செய்து தப்பிக்க இலகுவாக மாறிவிடும். எனவே மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு செய்து, விபத்து ஏற்படுத்தி பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களிடம் அபராதத் தொகையை வசூல் செய்வது மட்டுமல்லாமல் அவர்களை 3 நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அதுவும் அவர்கள் வாழ்கின்ற, சார்ந்திருக்கின்ற பகுதிகளில் உள்ள சிக்னலில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து சாலைவிதிகளை கடைபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அப்போது தான் அவருக்கு சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு ஏற்படும். மேலும் அவர் சாலைவிதிகளை கடைபிடிக்கும் பணியில் இருப்பதை அவரின் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அவருக்கு தெரிந்தவர்கள் அவரை பார்க்கும் போது பயம் கலந்த அச்சம் ஏற்படும்.

இதனால் தான் செய்த தவறுக்காக அவர் மனம் வருந்தி திருந்தக்கூடிய நிலை ஏற்படும். குறிப்பாக அவர் அவரது பணிக்கு செல்லாமல் கண்டிப்பாக 3 நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கும் பணியில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அது மட்டுமல்ல மன்னிப்போ, சிபாரிசோ ஏற்றுக்கொள்ளக்கூடாது. எனவே போக்குவரத்துக் காவல்துறையினர் சட்ட விதிகளை கடைபிடிக்கும் அதே நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்களிடம் அபராதத்தை வசூலிப்பதோடு 3 நாள் சிக்னலில் சாலைவிதிகளை கடைபிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதை கோட்பாடாக கொண்டு செயல்பட வேண்டும்.

இதனால் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டும் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட முதியோர் வரை அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுப் போது எவரும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்ட முன்வர மாட்டார்கள். இப்படி சட்டமும், கோட்பாடுகளும் சரியாக, முறையாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டால் விபத்துக்களில் இருந்து வாகனத்தையும், வாகனத்தில் இருப்பவர்களையும், பொது மக்களையும் பாதுகாக்க முடியும். எனவே தமிழக அரசு – மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டுபவர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக