சனி, 25 ஜனவரி, 2020

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. - ஜி.கே.வாசன்


இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் (26.01.2020) நாடு முழுவதும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. - ஜி.கே.வாசன்

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளால் ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

விடுதலை பெற்றதன் முக்கிய நோக்கம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான்.


எனவே குடியரசு தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாடு பெற்ற விடுதலைக்கான நோக்கமாகிய பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதே போல இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளும் இதே நாள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணமே இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

எனவே அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அந்த சட்டத்திற்கு உட்பட வேண்டியது அனைத்து தரப்பு மக்களின் கடமையாகும்.

மேலும் மக்களாட்சி மலர்ந்த நாளாக ஜனவரி 26 ஆம் நாளை கொண்டாடி வருவதால் மக்களாட்சிக்கு அடிப்படையாக இருக்கின்ற வாக்குரிமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.

நம் பாரத மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பதற்கு பாடுபட்ட தியாகிகள், வீர்ர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரை ஒவ்வொரு இந்தியரும் நினைத்து பார்த்து அவர்களுக்கு மரியாதை செய்வதோடு அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையைக் கொண்டுள்ளது. எனவே சாதி, மத, இன, மொழி ஆகிய பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு செயல்பட்டு இந்திய நாட்டில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் துணைநிற்போம். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பை பாதுகாப்போம்.

தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் 71 ஆவது குடியரசு தின நல்வாழ்த்துக்களை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக