செவ்வாய், 21 ஜனவரி, 2020

“பித்தம் தெளிந்திடுவீர் ரத்தம் கொதிப்பேறும் முன்னே” - மு.க.ஸ்டாலின் உரை

 கலைஞர் அவர்கள் நம்மை இயக்கும் சக்தியாக இருப்பார்; நாம் தமிழகத்தை இயக்குவோம் - மு.க.ஸ்டாலின்


விழுப்புரத்தில் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்து எழுச்சியுரை.


மறைந்தும் மறையாமல் நம்முடைய உள்ளத்திலே ஊனோடு உதிரத்தோடு இரண்டறக் கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலை இன்று விழுப்புரத்திலே மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில், இந்த மாவட்டத்தை வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன்முடி அவர்களுடைய சீரிய முயற்சியோடு உருவாக்கப் பட்டு அந்தச் சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தி முடித்து அதைத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த பொதுக் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கக் கூடிய அரியதொரு வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“உதித்திட்டான் செங்கதிரோன்

தென்திசையில் கொதித்தெழுவோம்

கொத்தடிமை தீர்வதற்கே”

என்று கனல் கக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை இன்றைக்கு விழுப்புரத்திலே நாம் திறந்து வைத்திருக்கிறோம்.

“பித்தம் தெளிந்திடுவீர்

ரத்தம் கொதிப்பேறும் முன்னே”

என்று முழங்கிய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையினை நாம் திறந்து வைத்திருக்கிறோம்.

“வீழ்வது நாமாக இருப்பினும்

வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

என்ற உணர்வை நம் நெஞ்சத்திலே குடியேற வைத்திருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையினை நாம் திறந்து வைத்திருக்கிறோம்.

“அண்ணா வழியில் அயராது உழைப்போம்”

“ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்”

“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்”

“வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்”

“மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி”

என்கிற ஐம்பெரும் முழக்கங்களை நமக்காக உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை இன்று நாம் திறந்து வைத்திருக்கிறோம்.


ஏற்கெனவே சென்னையில், அண்ணா அறிவாலயத்தில், முரசொலி வளாகத்தில், முத்தமிழ் பேரவை வளாகத்தில், ஏன் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண். தலைவர் கலைஞருடைய குருகுலம் என்று பெருமையோடு பேசப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஈரோட்டில், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை நமக்கெல்லாம் உருவாக்கித் தந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பல திருப்பு முனைகளை, ஏன் கலைஞருக்கும் பல திருப்பு முனைகளை உருவாக்கித் தந்திருக்கக் கூடிய திருச்சியிலே, கலையுலகத்திற்கு வித்திட்ட சேலத்திலே, அதேபோல் கடல் கடந்து இருக்கக் கூடிய அந்தமானிலே, அருகாமையில் இருக்கக் கூடிய கர்நாடக மாநிலத்திலே, தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலைகள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று விழுப்புரத்திலே தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை நாம் திறந்து வைத்திருக்கிறோம்.

பல்வேறு பெருமைகளை பெற்றிருக்கக் கூடிய மாவட்டம் இந்த விழுப்புரம் மாவட்டம் என்பது அனைவரும் அறிந்திருக்கக் கூடிய உண்மை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி ஆண்ட மலையமான் நாடும், அதனுடைய தலைநகரமான திருக் கோவிலூரும் கொண்டது இந்த விழுப்புரம்.

வீரத்தின் விளை நிலமாம் தேசிங்கு ராஜன் கோட்டைக் கட்டி ஆண்டதும் இந்தப் பகுதிதான்.

புலவர் கபிலர் தனது நண்பரான பாரி மறைவைத் தொடர்ந்து இங்கே வந்து தென்பெண்ணையாற்றின் கரையிலே தவம் இருந்து உயிர் துறந்தார்.

இப்படிப்பட்ட பல வரலாற்றுப் பெருமைக் குரிய மாவட்டமாக இந்த விழுப்புரம் மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் தலைவர் கலைஞருடைய திருவுருவச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கலைஞருடைய வாழ்க்கைக்கு பல பெருமைகளை இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சொல்லலாம். சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஏன் பொன்முடி குறிப்பிட்டாரே இது தளபதி மாவட்டம், தளபதி மாவட்டம் என்று அடிக்கடி பெருமையோடு எடுத்துச் சொல்லுவார். ஆம் உண்மைதான். என்னுடைய வாழ்க்கையிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மாவட்டம்தான் இந்த விழுப்புரம் மாவட்டம்.

மிக அழகிய வனப்புடன், வண்ணத்தில் கம்பீரமாக நம்முடைய மாவட்டச் செயலாளர் பொன்முடி அவர்கள் கலைஞர் சிலையை உருவாக்கி கம்பீரமாக அமைத்து இன்றைக்கு திறந்து வைக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்று சொன்னால் அதற்காக நான் என்னுடைய சார்பிலும் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பிலே இந்த மாவட்டத்திற்கு, மாவட்டச் செயலாளருக்கு பொன்முடி அவர்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றியை, வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத ஊர்தான் இந்த விழுப்புரம். நினைத்துப் பார்க்கிறேன். 2003-ஆம் ஆண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மண்டல மாநாடு. காரிலே வருகிறபோது, பொன்முடி அவர்கள் அடையாளம் காட்டினார். இங்குதான் மண்டல மாநாட்டை நடத்தி னோம் என்று. நான் நினைத்துப் பார்க்கிறேன். 2003-ஆம் ஆண்டு அந்த மண்டல மாநாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய வாய்ப்பு இந்த அடியேனுக்கு கிடைத்தது. முதன் முதலில் ஒரு மாநாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்த மாவட்டம் இந்த விழுப்புரம் மாவட்டம்.

அந்த மாநாட்டிலே கலந்து கொண்டு பேசிய தலைவர்கள், முன்னணியர்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்கள். என்னை அடையாளம் காட்டி பேசுகிறபோது குறிப்பிட்டுக் காட்டினார்கள். `இன்று நீ மாநாட்டு தலைவர். நாளை நீ தி.மு.க.வின் தலைவர்’ என்று சொன்னார்கள். நான் அடைந்த மகிழ்ச்சியை விட மேடையில் அமர்ந்திருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அதிகமான மகிழ்ச்சியை அடைந்தார்கள். அந்த மகிழ்ச்சியோடு தலைவர் அவர்கள் அந்த மாநாட்டிலே உரையாற்றுகிற போது குறிப்பிட்டுச் சொன்னார். தந்தைக்கு நேராக மகனை பாராட்டினார்கள் என்று நான் கருத மாட்டேன். தலைவனுக்கு நேராக ஒரு தொண்டனை பாராட்டியிருக்கிறார்கள் என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன் என்று எடுத்துச் சொன்னார்.

அதுமட்டுமல்ல அந்த மாநாட்டிலே எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையும் எடுத்துச் சொன்னார். கழகத்தினர் உன்னைப் பாராட்டலாம். பெருமைப் படுத்தலாம். புகழ்ந்து பேசலாம். ஆனால் மாற்றுக் கட்சியில் இருக்கக் கூடியவர்கள், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக் கூடியவர்கள், உன்னைப் பாராட்ட வேண்டும். அங்கிருந்து வரக்கூடிய அங்கீ காரத்தைப் பெறக்கூடிய அளவிற்கு நீ நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை எனக்கு அப்பொழுதே வழங்கினார். அதைத்தான் இன்றைக்கும் என்னுடைய இதயத்திலே கல்வெட்டைப் போல் செதுக்கி வைத்திருக்கிறேன் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய மறைவிற்குப் பிறகு உங்களுடைய பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுக் குழுவின் மூலமாக. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான் முதன் முதலில் கலந்து கொண்ட ஒரு மாபெரும் கூட்டம் எங்கு நடந்தது என்று கேட்டால் இதே விழுப்புரத்திலேதான் நான் கலந்து கொண்டேன்.

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா நடத்துவோமே ஒவ்வொரு ஆண்டும். அந்த விழாவை இதே விழுப்புரத்திலேதான் நடத்தினோம். அந்த முப்பெரும் விழா பொதுக் கூட்டத்திலே நான் பேசுகிற போது குறிப்பிட்டுச் சொன்னேன். ``கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை இந்தக் கலைஞரின் மகன் சாதித்தான். தலைமைத் தொண்டன் இந்த ஸ்டாலின் சாதித்தான் என்ற பெயரை வாங்கித் தரக் கூடிய பிள்ளையாக நான் நிச்சயம் இருப்பேன் என்று நான் அன்றைக்கு எடுத்துச் சொன்னேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார் என்ற அந்த உணர் வோடு நாம் நித்தமும் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இன்றைக்கு அவருடைய புகழை நாம் பாடிக் கொண்டி ருக்கிறோம். அவருக்கு நாடு முழுவதும் அவருடைய சிலையை அமைத்துப் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த விழுப்புரம்தான் திருவாரூர் கருணா நிதியை, கலைஞர் கருணாநிதியாக மாற்றிய ஊர். 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் நாள் திருவாரூரில் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் பத்மாவதி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. நாவலர் அவர்கள் 6 மைல் தூரம் நடந்தே வந்து அந்த திருமணத்தில் பங்கேற்று வாழ்த்திவிட்டுச் சென்றார். இது வரலாறு. ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கலைஞர் முடிவெடுக்கிறார். அப்பொழுதுதான் திராவிடர் நடிகர் கழகம் உருவாக்கப்பட்டது. அவர் எழுதிய `பழனியப்பன்’ என்ற நாடகம் அந்த நாடகத்தை ஒருவர் நூறு ரூபாய்க்கு வாங்குகிறார். ஊர் ஊராகச் சென்று அந்த நாடத்தை நடத்த திட்டமிடுகிறார்கள். திருவாரூரில் இருந்து புறப்பட்டு முதன்முதலில் முகாமிட்ட ஊர்தான் இந்த விழுப்புரம். அந்த நாடகத்திலே தலைவர் கலைஞர் அவர்கள் வேடமேற்று நடிக்க வேண்டுமென்று அனைவரும் வற்புறுத்தி னார்கள். கலைஞர் ஒரு நிபந்தனை போட்டார். நான் நடிக்கிறேன். ஆனால் நான் எழுதுகிற நாடகத்தில் மட்டும்தான் நான் நடிப்பேன். நாடகம் நடக்கக் கூடிய நாளுக்கு முன்பே இதே விழுப்புரத்திற்கு ஒருமாத காலம் முன்பே வந்து இங்கேயே தங்கி அந்த நாடகத்தினுடைய ஒத்திகையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். பலநாட்கள் இங்கேயே தங்கி அந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். விழுப்புரத்தைச் சுற்றியிருக்கக் கூடிய சுற்று வட்டாரப் பகுதியில் எல்லாம் அந்த நாடகத்தை நடத்தி யிருக்கிறார்கள். ஒருநாள் அந்த நாடகத்திற்கு தந்தை பெரியாரே தலைமை தாங்குகிறார். மற்றொருநாள், இன்னொரு நாள் அறிஞர் அண்ணா தலைமை தாங்குகிறார். ஆக அதையெல்லாம் முடித்து விட்டு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்குச் செல்லு கிறார்கள். அங்கேதான் தலைவர் கலைஞர் அவர்கள் தாக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவரை தன்னுடைய ஈரோட்டிற்கு அழைத்துச் செல்கிறார். நினைத்துப் பார்க்கிறேன். ஆக இப்படிப்பட்ட பல வரலாறுகளை பின்னணி யிலே பெற்றிருக்கக் கூடிய விழுப்புரத்திலே கலைருடைய சிலை திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் களம் என்று எடுத்துப் பார்த்தால் 13 முறை குளித்தலையிலே தொடங்கி திருவாரூர் வரையிலே 13 முறை சட்டமன்ற தேர்தல் களத்தில் நின்று ஒரு முறை கூட தோல்வி என்பது பற்றியே அறியாமல் வெற்றி வெற்றி வெற்றி... என்பதையே குறிக்கோளாக வைத்து வரலாற்றைப் படைத்தவர்.

ஐந்து முறை தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்காக ஆட்சியை நடத்திக் காட்டியிருக்கக் கூடியவர். இந்தியாவினுடைய பிரதமர்களை உருவாக்கக் கூடிய இடத்திலே அமர்ந்து அந்தப் பணியை நிறைவேற்றித் தந்திருக்கக் கூடியவர். ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கக் கூடிய தலைவர். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக இருந்து பெயர் பெற்றத் தலைவர் நம்முடைய தலைவர். புலவர்களுக்கெல்லாம் பெரும் புலவராக இருந்து தலைவர்களுக்கெல்லாம் பெரும் தலைவராக இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் காட்டியிருக்கக் கூடியவர்.

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல. சாமானியன் வீட்டுப் பிள்ளை என்று சொல்லுவார்கள். நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பைச் சார்ந்திருக்கக் கூடியவன். அந்த பின்தங்கிய வகுப்பு மக்க ளுடைய உயிரை காப்பாற்ற என்னுடைய உயிரை பணயம் வைத்து நான் பாடுபடுவேன் என்று 1969-லே அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்று சட்ட மன்றத்திலே அதைப் பதிவு செய்திருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1969-லே சென்னை கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலே கலைஞர் பேசுகிறபோது குறிப்பிடுகிறார். எனக்கென்று தனி சாதிப் பெருமை கிடையாது. எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ்பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று கூறக் கூடிய பெருமை எனக்கில்லை. ஏன் கல்லூரிப் பட்டம் கூட எனக்குக் கிடையாது.

நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும், காஞ்சிக் கல்லூரியும் அங்கு தான் நான் பட்டம் பெற்றேன். பகுத்தறிவாளன் பணியாளனாக இருக்கிறேன். சாதிப் பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான் என்று கலைஞர் பெருமையோடு குறிப்பிட்டி ருக்கிறார்.

சாமான்யன் சாமான்யன் என்று சொல்லிக் கொண்டே சாமான்யர்களுக்காக ஆட்சி நடத்திக் காட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். சாமான்யர்களின் கனவிலே இருந்த திட்டங்கள் அதற்கு எண்ணிக் கொண்டிருந்த எண்ணங்கள், அத்தனையும் சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் காட்டியர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தி.மு.கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் சாமான்யர் களுக்காக ஆட்சி நடத்தப்பட்டிருக்கிறது. நான் உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் ரத்து

காவிரி நடுவர் மன்றம்

மண்டல் கமிஷனுடைய பரிந்துரையை நிறைவேற்றியது.

சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கித் தந்தது

அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராகலாம் 

என்ற சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தது.

மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தியது.

திருநங்கைகளின் வாழ்விலே ஒளியேற்றியது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கித் தந்திருப்பது

அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தந்தது

ஏராளமான மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தித் தந்தது.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு. மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு. அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு.

புதிரை வண்ணார் மக்களுக்கு நலவாரியம் அமைத்துத் தந்தது.

தாட்கோ நிறுவனத்தை ஏற்படுத்தித் தந்தது.

குடிசை மாற்று வாரியம் கண்டது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தை ஏற்படுத்தித் தந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக சிகரம் வைத்தாற் போல் நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு செம்மொழி என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் எந்த ஆட்சியும், எந்த முதலமைச்சரும், எந்தத் தலைவரும் செய்தது கிடையாது. செய்யப் போவதும் கிடையாது. செய்யவும் முடியாது. எவனும் பிறந்து இந்த நாட்டிலே வரவும் முடியாது. இதுதான் உண்மை.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடக்கிறது. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.,வின் ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் சாதனை என்று பட்டியல் போட முடியுமா? அரசாங்கத்தின் வேதனை பட்டியலைத் தான் சொல்ல முடியும்.

மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், நாங்கள் விருது வாங்கி இருக்கிறோம் என்கிறார்கள். இந்த நாட்டில் விருதுகளுக்கெல்லாம் மரியாதை இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு மத்திய அரசின் மூலமாக ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது. விவசாயிகளை விட வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் பட்டதாரிகளின் தற்கொலையில் இந்தியா முதலிடம்; இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடம். இந்த லட்சணத்தில் விருது வாங்கிவிட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்குக்கு விருதுப் பெற்றோம் என்கிறார். சட்டம் ஒழுங்கைப் பற்றி எடப்பாடி பேசலாமா?

குமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியிலிருந்த போது, எஸ்.ஐ வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. இதை விட சான்று தேவையா? நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மூன்று குற்றச்சாட்டுக்களை வைத்தேன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன என்பது முதல் கேள்வி. நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் செயல்படுகிறதா - இல்லையா? ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்கள் அல்ல. இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முதன்முதலாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று 40 நிமிடம் அங்கே உட்கார்ந்து தியானம் செய்து, ஆவியுடன் பேசினார். விசாரணை தேவை என்று சொன்னது ஓ.பி.எஸ். அதற்குப் பிறகுதான் சமரசம் செய்து கொண்டீர்கள். ஆறு முறை அழைப்பு வந்திருக்கிறது அவர் விசாரணையில் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை ஓ.பி.எஸ் காப்பாற்றுகிறாரா?

பொள்ளாச்சி விவகாரம், இளம் பெண்கள் அங்கே கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அங்கே இருக்கக்கூடிய ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் காவல்துறையின் துணையோடு ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல 8 வருடமாக தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துக் கொண்டிருக்கிறது.காவல்துறை, புலனாய்வுத் துறைக்கு இதைப்பற்றித் தெரியாதா? தெரிந்திருந்தும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்ததற்கு காரணம் அங்கே இருக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். சட்டமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அமர்ந்திருந்தபோது, ‘பொள்ளாச்சி’ என்று அவர் பெருமையாக பேசினார். நாங்கள் பொள்ளாச்சியா என்றுதான் கேட்டோம். அசந்து போய்விட்டார். 250 பேருக்குமேல் இளம்பெண்கள் பண்ணை வீட்டில் வைத்து மிரட்டி, அச்சுறுத்தி கொடுமைகள் நடந்திருக்கின்றது.

அந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள்.

காவல்துறையால் முறையான வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்தப் பாவம் சும்மா விடுமா? யாரைக் காப்பாற்றும் முயற்சி. 2021 நெருங்கி விட்டது. ஜெயலலிதாவுடைய மர்ம மரணமாக இருந்தாலும் சரி, பொள்ளாச்சியில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் அந்த கொடுமைகளாக இருந்தாலும் சரி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதல் வேலையாக அவற்றை முறையாக விசாரிக்கும் அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்வோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

கொடநாடு என்றாலே ஜெயலலிதா நினைவுதான் நமக்கு வரும். ஏனென்றால் அவர்தான் ஓய்விற்காக அடிக்கடி அங்குச் செல்வார். ஜெயலலிதா என்றால் கொடநாடு - கொடநாடு என்றால் ஜெயலலிதா என்று வந்துவிட்டது. இப்போது கொலை - கொள்ளை என்று வந்துவிட்டால் கொடநாடு நினைவுதான் வருகிறது. இரண்டும் சேர்ந்து நடந்திருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஓய்விற்காக சென்று தங்கிய அந்த கொடநாட்டு பங்களாவில், கொலையும் - கொள்ளையும் நடந்திருக்கிறது. இப்போது ஆளும் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் யாரையெல்லாம் கூலிப் படைகளாக அமர்த்தினார்களோ அவர்களே உண்மையை வெளியில் சொல்லி இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னக் காரணத்தினால் மீண்டும் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு, இன்றைக்கும் தமிழகக் காவல்துறை அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நான் அதிகம் பேச விரும்பவில்லை. காரணம் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை விரிவாகப் பேசுவது முறையல்ல.

கொடநாடு வழக்கு விசாரணை ஜனவரி இரண்டாம் தேதி தொடங்க இருந்தது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கிருஷ்ணதாபா என்ற கொடநாடு பங்களாவில் வேலை செய்த காவலாளி இருக்கிறார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தான் முக்கிய சாட்சி. அவர் இப்போது தலைமறைவாகி இருக்கிறார். தலைமறைவாக இருக்கிறாரா? இல்லை தலைமறைவாக்கப்பட்டாரா? புரியவில்லை.

கொடநாடு பங்களாவில் இந்தக் கொள்ளைக் கும்பல் அங்கே இருக்கும் ரெக்கார்டுகளை, கோடிக்கணக்கான பணங்களை, பென்டிரைவ் போன்றவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அந்தக் கொடநாட்டு பங்களாவிற்கு சென்றது. அப்போது காவல் காத்துக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகள் அதை தடுத்தார்கள். அதில் ஒருவர் பெயர் ஓம்பகதூர், இன்னொருவர் பெயர் கிருஷ்ணதாபா. சம்பவம் நடந்த நாளில், தடுத்த நேரத்தில் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அடுத்ததாக மயக்க ஊசி போட்டு, கட்டிப் போட்ட நிலையில் மீட்கப்பட்டவர்தான் கிருஷ்ணதாபா. அவர்தான் முக்கியமான சாட்சி. அவர் இன்றைக்கு தலைமறைவாகி இருக்கிறார் என்றால் இந்த வழக்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது.

கொடநாட்டு பங்களாவில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டோம் என்று அந்த கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அங்கே கொள்ளை அடித்த பணம் எங்கே? அந்த சம்பவத்தில் 5 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் இந்த அரசுதானே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.

எனவேதான் இந்த 3 கேள்விகளை நாடாளுமன்றத் தேர்தலின்போது கேட்டேன். நாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ, அதுபோல இந்த 3 கேள்விகளை கேட்டேன். இந்த கேள்விகளையும் சேர்த்து சொல்கிறேன். ஆட்சிக்கு வரும்போது தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிக்கை மட்டுமல்ல; உறுதிமொழி மட்டுமல்ல; நீங்கள் செய்திருக்கிற வண்டவாளங்கள் அத்தனையும் தண்டவாளத்தில் ஏற்றி அதற்குரிய தண்டனையை வழங்குவோம் என்பதுதான் எங்களின் லட்சியம். மறந்துவிடாதீர்கள்!

அதேபோல் ஆர்.கே.நகரில் 2017-ல் நடைபெற்ற இடைத்தேர்தல். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர். வெறும் விஜயபாஸ்கர் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. ‘குட்கா’ விஜயபாஸ்கர். அவர் வீட்டில் ரெய்டு நடந்தது. ரெய்டு நடந்தபோது 89 கோடி ரூபாய்க்கான பணப்பட்டுவாடா ஆதாரங்களுடன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனால் நடைபெற இருந்த தேர்தலே ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை அரசு இப்போது ரத்து செய்திருக்கிறது. விஜயபாஸ்கர் வீட்டில் 89 கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அதில் இடம்பெற்றிருப்பவர்கள் பெயர்கள் எல்லாம் யார் யார்? முதல் பெயரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்கடுத்து வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் என 8 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமி இப்போது முதலமைச்சராக இருக்க முடியாது. எங்கே இருந்திருப்பார் தெரியுமா? சிறையில்தான் இருந்திருப்பார்!

மாநில தேர்தல் அதிகாரிக்கு டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையம் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று ஒரு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கையும் இல்லை.இதற்கும் சேர்த்து சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதையும் கையில் எடுப்போம்; விசாரிப்போம். உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.

டெண்டர் விடுகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், பினாமிகள், அவர்கள் பெயர்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டு டெண்டர்கள் எடுத்ததை ஆதாரங்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாரதி அவர்கள் வழக்கு போட்டார். 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். வழக்கில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு போட்டார்கள். உடனடியாக டெல்லிக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தடை உத்தரவு பெற்றார்கள். ஆனால் சட்டமன்றத்தில், வெளியில் பேசுவார் நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று. டெண்டர் வழக்கை பார்த்தே பயப்படுகிற நீங்கள், யாருக்குமே பயப்படமாட்டேன் என எப்படி சொல்லலாம்.

ஈழத்தமிழர்களுக்கு, சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதற்காக ஆதரித்தீர்கள்? இதற்காகத்தான். இதை ஆதரித்தது நியாயமா என நாம் வாதாடுகிறோம். சட்டமன்றத்தில் கேட்டோம். தமிழ்நாடு அமைதியாகத்தான் இருக்கிறது என பதில் சொல்கிறார்கள். எங்கேயும் கலவரம் கிடையாது. நான் திருப்பி கேட்டேன். தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அமைதியாக போராடுகிறார்கள். அது மகிழ்ச்சிதான். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்தியா முழுவதும், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு, தடியடி நடைபெறுகிறது. பலபேர் இறந்திருக்கிறார்கள். தொடர்ந்து போராட்டம் வலுத்துக் கொண்டிருக்கிறது என்று கேட்டால், ஏதோ சட்ட மேதையை போல எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்கிறார், யாருக்கும் இதனால் பாதிப்பு கிடையாது என்று!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராடக்கூடிய மக்கள் எல்லாம் முட்டாள்களா? எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் புத்திசாலி போல பேசிக் கொண்டிருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மக்களை மனரீதியாக பிளவுபடுத்தக்கூடிய சதியாக வந்திருக்கிறது.

சிறுபான்மையினருக்கும், ஈழத் தமிழருக்கும் துரோகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது என்ன சொல்கிறார்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு நாடகத்தை அவர்கள் இன்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சட்டத்தைப் பார்க்கும்போது அதை செய்வதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாடகம் செல்லுபடியாகவில்லை என்பதற்கான உதாரணம்தான் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல். மறந்துவிடாதீர்கள்!

கேட்டால் நாங்கள் வளர்பிறை - தி.மு.க. தேய்பிறை என்று சொல்வார்கள். அவர்கள் வளர்பிறையாம். நாம் தேய்பிறையாம். அதற்கென்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவருக்கு வைத்திருக்கும் பெயர் முந்திரிக்கொட்டை. சட்டமன்றத்தில் கூட பதிவு செய்திருக்கிறேன். யார் வளர்பிறை? யார் தேய்பிறை?

மாவட்டக் கவுன்சிலர் பதவிகள் மொத்தம் எவ்வளவு? 512. அதில் 242 இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. எது வளர்பிறை? எது தேய்பிறை?

ஒன்றியக் கவுன்சிலர்கள் இடங்கள் மொத்தம் 5,076. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் 2,090 இடங்களை கைப்பற்றி உள்ளது. எது வளர்பிறை நான் கேட்கிறேன்.

2011-ல் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட தற்போது 34 சதவீதம் தி.மு.க. கூடுதலாக பெற்றுள்ளது. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் என்னென்ன சதிதிட்டங்கள் எல்லாம் போட்டார்கள் தெரியுமா? அ.தி.மு.க. தோற்ற இடங்களை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். தி.மு.க. வெற்றி பெற்றதை தோற்றதாக அறிவித்தார்கள். சில இடங்களில் தேர்தலையும் நிறுத்தி வைத்தார்கள். அதிகாரிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கு என்று அவர்களே கலவரம் ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தி உள்ளார்கள். வெற்றி பெற்றதை கூட அறிவிக்காமல் நிறுத்தி வைத்தார்கள். டிக்ளரேஷன் வாங்கிய பிறகு கூட அபிசியலாக அறிவிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்துள்ளது. நமக்கு தெரிந்த 20 இடங்களில் இருந்த பிரச்சினைகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

சிசிடிவி பதிவு செய்தீர்களே அது எங்கே? எப்போது கொண்டு வந்து கொடுப்பீர்கள் என்று கேட்ட நீதிமன்றம் இன்றைய விசாரணையில் 28-ம் தேதிக்குள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, தருமபுரியில் மொரப்பூர், ஆதாரத்துடன் சொல்கிறேன். சேலம் மாவட்டத்தில் கொளத்தூர், தாரமங்கலம். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம், கடலூர் மாவட்டத்தில் நல்லூர், மங்களூர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர், மயிலாடும்பாறை இங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் எல்லாம் நாம் வெற்றி பெறப்போகிறோம்.

இதுதான் தேர்தல் நடத்தும் இலட்சணமா?

எடப்பாடியை போல ஒரு பொய்யர், ஊழல்வாதி, ஏமாற்றும் பேர்வழி தமிழகத்தில் இவரைப் போல் ஒருவர் இருப்பாரா, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம்.

உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு முன்புவரை நம்முடைய மாவட்டக் கழகத்தில் இருக்கும் நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் தெம்போடு, துணிச்சலோடு இருந்தாலும், தலைமையில் இருக்கும் எங்களைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சி இங்கு அதிகாரத்தில் இருக்கிறார்கள். பல அக்கிரமங்களைச் செய்வார்கள். அவர்களாகவே முடிவு அறிவிப்பார்கள். முறையாக வாக்குப்பதிவு செய்யவிட மாட்டார்கள். அப்படியே செய்தாலும் அதை எண்ணும்போது குளறுபடிகள் செய்வார்கள். அதையும் மீறி வெற்றி பெற்றால், அறிவிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அறிவித்ததை கூட மாற்றி அறிவிப்பார்கள். எனவே 40 - 50 சதவீதம் வெற்றி பெற்றாலே அது பெரிய வெற்றிதான் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது நான் வெளிப்படையாக சொன்னேன்.

ஆனால் இன்றைக்கு நிலை என்ன தெரியுமா? முறையாக குளறுபடிகள் இல்லாமல் நடந்திருந்தால், 90 சதவீதம் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? 50 முதல் 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வளவு அக்கிரமங்களுக்கு பிறகு. இந்த கெடுபிடிகள், அக்கிரமங்கள், அராஜகங்களை தாண்டி வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் உழைப்பு; நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு; கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புத்தான் என்பதை, நான் இங்கே பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நிச்சயமாக, உறுதியாக நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அதைத் தடுப்பதற்கான முயற்சியை ஆளுங்கட்சி மட்டுமல்ல. சில ஊடகங்களும், திட்டமிட்டு சதி செய்து கொண்டிருக்கிறார்கள். காய்ந்த மரம்தான் கல்லடிப்படும் என்று சொல்வார்கள். நேருக்கு நேர் களத்தில் சந்திக்க வக்கற்றவர்கள் செய்கிற சதி அது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி என்பது, நமக்கு கிடைத்திருப்பது ஒரு இடைவேளை. கிளைமேக்ஸ் சட்டமன்றத் தேர்தல். மறந்துவிடவேண்டாம்!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்திருக்கலாம். தோல்வி அடைந்த காரணத்தில் துவண்டுப் போய் மூளையிலே முடங்கிவிடுகிற கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல!

பொன்முடி அவர்கள் தலைமையில் இந்த மாவட்டத்தில் பொறுப்பேற்று இந்த இடைத்தேர்தலில் பணியாற்றி இருப்பதை நான் மறக்க மாட்டேன். அதற்காக தலைமைக் கழகம் சார்பில் தலைவணங்கி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த மாவட்டத்திற்கும் சேர்த்து விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. விரைவில் விக்கிரவாண்டியில் விட்டதை, உள்ளாட்சித் தேர்தலில் பொன்முடி மீட்டு திரும்பத் தருவார் என்ற நம்பிக்கை, அவருக்கு இருப்பதை விட எனக்கு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

வென்று காட்டுவோம்! இதுவே கலைஞரின் சிலைத் திறப்பு விழாவில் நாம் எடுக்கக்கூடிய சபதமாக இருக்கவேண்டும்.

கலைஞரே நம் உயிர்.

கலைஞரே நம் உடல்.

கலைஞரே நம் சக்தி.

அது நம்மை இயக்கும். நாம் தமிழகத்தை இயக்குவோம். வணக்கம். நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக