செவ்வாய், 14 ஜனவரி, 2020

தைத்திருநாளும், தமிழ் புத்தாண்டும் வாழ்வில் வசந்தத்தை வழங்கட்டும்! - DR.S. ராமதாஸ்


தைத்திருநாளும், தமிழ் புத்தாண்டும் 
வாழ்வில் வசந்தத்தை வழங்கட்டும்!
             

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டையும் பாரம்பரிய சிறப்புடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள  தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு  மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால் தான் தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கும், தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கும் இந்த ஆண்டு தைத்திருநாள் தீர்வுகளை வழங்கும்.

தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதை நிறைவேற்றுவது போன்று நடப்பாண்டில் பொங்கல் பானை பொங்குவதைப் போன்று மக்களின் வாழ்வில் வளங்களும், நலன்களும் பொங்கட்டும்; கரும்பும், சர்க்கரைக் பொங்கலும் இனிப்பதைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை இனிக்கட்டும்; மஞ்சள் மற்றும் இஞ்சியின் மருத்துவ குணம் கிருமிகளை அழிப்பதைப் போன்று நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் விலகட்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீச தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் வகை செய்யட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக