புதன், 8 ஜனவரி, 2020

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வரவேற்கத்தக்கது. - ஜி.கே.வாசன்

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது  வரவேற்கத்தக்கது. - ஜி.கே.வாசன்


2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலையான இளம் பெண் நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வருகின்ற 22 ஆம் தேதி (22.01.2020) தூக்கு தண்டனையை நிறைவற்ற உத்தரவு பிறப்பித்திருப்பது காலம் தாழ்ந்த நீதி என்றாலும் வரவேற்கத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 23 வயதான நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிகளில் 4 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இருப்பது பாலியல் வன்கொடுமையில் இனிமேல் எவரும் ஈடுபடக்கூடாது என்பதற்கான தீர்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு தாமதமாக தண்டனை கிடைத்திருக்கிறது என்று பலர் நினைப்பது நியாயமாக இருந்தாலும் கூட இந்த தண்டனையை சரியான தண்டனை என்று நான் கருதுகிறேன்.

அதே சமயம் நிர்பயா வுக்கு நடந்த பயங்கரமான கொடுமைக்கு பிறகும் நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவது மிகுந்த அச்சத்திற்கும், வருத்தத்திற்கும் உரியது.

எனவே இனிமேலும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்கவும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும் என்றால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.

அந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளின் குற்றம் உறுதி செய்யப்படும் போது அதற்கான தண்டனை தூக்கு தண்டனையாக இருந்தாலும் அந்த தண்டனையை ஒரு நாள் கூட தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். இது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

மேலும் இது போன்ற தவறான வழிக்கு செல்லாமல் இருக்கவும், பாலியல் வன்கொடுமையில், கொலையில் ஈடுபடாமல் இருக்கவும் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். மேலும் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வியாபாரம் செய்யும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கும், பாலியல் தொந்தரவுகள் இருக்கக்கூடாது என்பதற்கும் விழிப்புணர்வை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், தவறு செய்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்கான தண்டனையானது நீதித்துறையின் மூலம் விரைவாக கிடைக்க வழி வகுக்கப்பட வேண்டும். எனவே நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இருப்பதை த.மா.கா வரவேற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக