சனி, 25 ஜனவரி, 2020

காஞ்சிபுரம் அருகில் பெரியார் சிலை உடைப்பு; - வைகோ கடும் கண்டனம்!


காஞ்சிபுரம் அருகில் பெரியார் சிலை உடைப்பு; 
- வைகோ கடும் கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் - சாலவாக்கம் அருகில் உள்ள கலியப்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் சிலையை நேற்று (23.01.2020) சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நள்ளிரவில் திருட்டுத்தனமாக செய்யப்பட்டுள்ள இந்த அக்கிரமச்செயலை மறுமலர்ச்சி திமுகழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது என்பது இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிப்பதில் மெத்தனம் காட்டியே வருகிறது. தமிழக அரசு இந்த நிலையை மாற்றிக் கொண்டு பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் ஒரு சகாப்தம், காலக்கட்டம், வரலாறு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல பெரியாரின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசவும், அவரது வரலாற்றை திசை திருப்பி கொச்சைப்படுத்தவும், “திருப்பணிகள்” நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் பெரியார் சிலை மீது குறிவைக்கப்பட்டு இருக்கிறது.

வாழும்போதே எதிர்ப்புகளுக்கு இடையில் எதிர்நீச்சல் போட்டு சமுதாயப்பணி ஆற்றியவர் பெரியார். இன்று மறைந்த பின்பும் எதிர்ப்புகளுக்கு இடையில் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் முனைப்புடன் முழுவீச்சில் ஈடுபட்டு குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய அவலங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக