புதன், 29 ஜனவரி, 2020

ஆர்.பி.உதயகுமார் பாரத் நெட் திட்ட டெண்டர் விவரங்களை முழுமையாக வெளியிடத்தயாரா?" - திரு.ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ


”முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாரத் நெட் திட்ட டெண்டர் விவரங்களை முழுமையாக வெளியிடத்தயாரா?"
 - திரு. ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ 

“பாரத் நெட் திட்ட டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய்க் குற்றச்சாட்டு” என்று முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்திருக்கிறார் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார்.


“பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லவேண்டும்” என்று எங்கள் கழகத் தலைவர் அடிக்கடி கூறுவது போல், அமைச்சர் தன் அறிக்கையின் வாயிலாகவே உண்மைகளை மறைக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

எங்கள் கழகத் தலைவரைப் பொறுத்தமட்டில் எப்போதும் ஆதாரபூர்வமான- ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை வைத்தே பழக்கப்பட்டவர். திரு உதயகுமார் போலவும், முதலமைச்சர் போலவும், பொய்ப் பேட்டிகளை- பொய் அறிவிப்புகளை- பொய் அறிக்கைகளைக் கொடுப்பவர் அல்ல. அந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் திரு உதயகுமார் ஒரு பிதற்றல் அறிக்கையை விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு “பச்சைப் பொய்யை”- அமைச்சர் கூறியிருப்பது- அவரும் இந்த ஒட்டுமொத்த “டெண்டர் திருவிளையாடல்களில்” ஆக்கபூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிய வந்து விட்டது.


இத்திட்டத்திற்கு நான்கு “பேக்கேஜ்களாக” ஆன்லைன் டெண்டர் 5.12.2019 அன்றே கோரப்பட்டு - அதை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. 22.1.2020 அன்று அந்த டெண்டர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு- அந்த தேதியும் முடிந்து விட்டது. பிறகு எப்படி அமைச்சர் இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதிய “கப்சா” ஒன்றை - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் எப்படிச் சொல்கிறார்?


20.1.2020-ஆம் தேதி டெண்டருக்கு இறுதி தேதி என்பதால்- அது தொடர்பான Pre-Bid Meeting நடைபெற்றதா அல்லது ரத்து செய்யப்பட்டதா? அதை விளக்கும் துணிச்சல் அமைச்சருக்கு உண்டா? இந்த இறுதி தேதிக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் திரு சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். “விருப்ப ஓய்வில்” சென்றதாகச் செய்திகள் வெளிவந்தது ஏன்? 27.1.2020 அன்று அவரும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனுக்கு நிர்வாக இயக்குநராக இருந்த திரு எம்.எஸ். சண்முகம் ஐ.ஏ.எஸ்-ஸும் திடீரென்று “டம்மி” பதவிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் தூக்கியடிக்கப்பட்டது ஏன்? டெண்டர் இப்போதுதான் கோரப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் (DIPR/4685/Tender/2019) என்ன ஆயிற்று? அறிவிக்கப்பட்டபடி 22.1.2020 அன்று மேற்கண்ட அந்த நான்கு பேக்கேஜ்கள் அடங்கிய டெண்டர் திறக்கப்பட்டதா இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகள் பாரத் நெட் உள்கட்டமைப்புப் பணிகளின் டெண்டரில் அணி வகுத்து நிற்கின்றன.


அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத திரு உதயகுமார் எங்கள் தலைவரைப் பார்த்து “பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று வசைபாடுவது அரை வேக்காட்டுத் தனமானது. துறை அமைச்சர் என்ற தகுதியைக் கூட துறந்து விட்டு அவர் தவிப்பதைக் காட்டுகிறது!


பாரத் நெட் திட்ட டெண்டரில் இவ்வளவு அசிங்கமான கூத்துகளையும் அடித்து விட்டு- தனது துறைச் செயலாளர், நிர்வாக இயக்குநர் எல்லோரையும் சதித் திட்டமிட்டு மாற்றி விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அமைச்சர் கூறலாம். ஆனால் கோப்புகள் உண்மையை இப்போது மட்டுமல்ல- எப்போதும் பேசும் என்பதை திரு உதயகுமார் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது நல்லது. தன் கட்சியின் தலைவர்களான மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி “எடப்பாடி எட்டாவது அதிசயம்” என்று புகழ்ந்த திரு உதயகுமாரிடமிருந்து இது போன்ற “பொய் அறிக்கையை” எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் எங்கள் கழகத் தலைவரை விமர்சிப்பதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பாரத்நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால் - இந்த டெண்டர் தகவல் தொழில் நுட்பத் துறையின் 9 ஆவது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே திரு உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “பாரத் நெட்” டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா?


அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் 2000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் அதிமுக அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக