புதன், 22 ஜனவரி, 2020

ரஜினியும், சுப்பிரமணிய சாமியும் சேர்ந்தால், எங்களுடைய வேலை இன்னும் சுலபமாக முடியும். - கி.வீரமணி

ரஜினியும், சுப்பிரமணிய சாமியும் சேர்ந்தால், எங்களுடைய வேலை இன்னும் சுலபமாக முடியும். - கி.வீரமணி


கேள்வி : நான் ஆதாரம் இல்லாமல் பேச வில்லை என்றும், திரித்துப் பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?


கி.வீரமணி : 1971 இல் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, புராண ஆபாசங்களை யெல்லாம் படங்களாகப் போட்டு எடுத்துக் கொண்டு வந்ததை  ரஜினிகாந்த் அவர்கள் ‘துக்ளக்' ஆண்டு விழாவில் பேசும்போது ‘‘ராமனையும், சீதையையும் நிர்வாணமாகப் படம் போட்டு, செருப்பு மாலை போட்டு எடுத்து வந்தார்கள்; அதைக் கண்டிக்கின்ற துணிவு வேறு எந்தப்  பத்திரிகைக்காரர்களுக்கும் இல்லை. சோ தான் அதை செய்தார்'' என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலை அங்கே சொன்னார்.

அது உண்மைக்கு மாறானது. அவருக்கு அப்போது இருந்த வயது, தெளிவு இவையால் அத்தனையும் அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. யாரோ எழுதிக் கொடுத்திருக்கிறார்கள், அந்த அடிப்படையில் அவர் பேசினார்.

நடந்தது என்ன என்பதைப்பற்றி நாங்கள் தெளிவாகச் சொன்னோம்.

அதற்குப் பிறகும்கூட, 1971 இல் நடைபெற்ற சம்ப வத்தை, 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு பத்திரி கையின் ஒரு சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அந்தப் பத்திரிகையில் படமோ மற்றவைகளோ கூட கிடையாது. அதை வைத்துக்கொண்டு, இந்த ஆதாரத்தை வைத்துத்தான் நான் பேசினேன்'' என்கிறார்.

பத்திரிகைகளில் சில செய்திகள் வருவது தவறானதாக அமையலாம். அதுவும் எத்தனை ஆண்டுகள் கழித்து? அதனைப் அப்போதே மறுத்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்பொழுது, அந்த ஆதாரத்தை வைத்துத்தான் நான் பேசினேன் என்று, இரண்டு துண்டுக் கடிதாசிகளைக் காட்டுவது என்பது இருக்கிறதே, அது பெரியாரைக் கொச்சைப்படுத்துகின்ற மிகக் கேவல மான செயல்.

அது அவருடைய தகுதியையும் கீழே இறக்கும் என்பது உறுதி. அந்த அடிப்படையில், உண்மைக்கு மாறான இந்த செய்தியை மிகத் தெளிவாக அவர் கூறி யிருக்கிறார்.

அறிவு நாணயம் இருக்குமேயானால்...

இரண்டாவதாக, அவருடைய பேச்சிலேயே முரண் பாடு - இந்தச் செய்தியைக் காட்டியதிலேயே இருக்கிறது. காரணம், வேறு எந்தப் பத்திரிகையும் சொல்லவில்லை என்று அன்று சொல்லிவிட்டு, இன்று இன்னொரு பத்திரிகையைத்தான் காட்டுகிறார்.

அவர் நாணயமாக உள்ளவராக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? அவரிடம் அறிவு நாணயம் இருக்குமேயானால், ‘துக்ளக்' பத்திரிகையிலே வந்திருக் கிறது என்று அவர் அதையல்லவா காட்டியிருக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகள் கிடையாது;

நீதிமன்றத்தில் அவர் வந்து தெளிவாகப் பதில் சொல்லவேண்டிய காலம் வரும். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும்.

பெரியார் ‘லைவ்'வாக இருக்கிறார்

ஒன்று நிச்சயம்; தந்தை பெரியார் அவர்கள் மறைந்து இன்றைக்கு 47 ஆண்டுகள் ஆகின்றன என்று சொன்னாலும், பெரியார் ‘லைவ்'வாக இருக்கிறார்.

எனவே, பெரியாரைப்பற்றி லைவ் ஓடிக்கொண்டிருக் கிறது. ஆகவே, பெரியார் மறையவில்லை. இதுவரை பெரியாரை எவ்வளவோ பேர் எதிர்த்திருக்கிறார்கள்; திரிபுவாதம் செய்திருக்கிறார்கள். அவர்கள்தான் காணா மல் போயிருக்கிறார்களே தவிர, பெரியார் என்றைக்கும் நிலைத்திருப்பார்,  மிகப்பெரிய அளவிற்கு இமயம்போல் உயர்ந்து கொண்டிருக்கிறார்.

இமயம் போன்ற பெரியார், பாபா போன்ற கற்பனையல்ல.
அறிவின் தரம் எங்கே போயிற்று?
காணாமல் போயிற்று

கேள்வி : ‘துக்ளக்' ஆண்டுவிழாவில், ‘முரசொலி' வைத்திருந்தால் தி.மு.க.காரர்கள்; ‘துக்ளக்' வைத்தி ருந்தால் அறிவாளிகள் என்று பேசியிருக்கிறாரே ரஜினி காந்த், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கி.வீரமணி : ‘அறிவாளிகள்' என்பதற்கு என்ன விளக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

‘துக்ளக்' படிப்பவர்கள்தான் இந்த நாட்டில் அறிவாளிகள் என்றால், அறிவின் தரம் எங்கே போயிற்று? காணாமல் போயிற்று என்றுதான் அதற்குப் பொருள்.

கேள்வி  : சுப.வீரபாண்டியன் அவர்கள் ‘துக்ளக்' வைத்திருப்பவர்கள் ‘அறிவாளிகள்' என்று ரஜினி சொன்னதை, ‘மாமா, மாமிகள்' என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறாரே, அதுபற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?

கி.வீரமணி : யார் பேசினாரோ, அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி இது.

நான் அதுபற்றி சொல்லியிருந்தால், அதுபற்றி நீங்கள் கேள்வி கேட்கலாம்.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

1971 இல்   சோ அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தி, கலைஞரை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்பதற்காக தி.மு.க.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது.

கலைஞர் எழுதிய ‘‘நானே அறிவாளி'' நாடகம்!

அதேநேரத்தில், ஒரே நாளில் கலைஞர் அவர்கள், ‘‘நானே அறிவாளி'' என்ற ஒரு நாடகத்தை எழுதி, அதை தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தினார். அது மிகப்பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், ராமர் பிரச்சினையை பெரிதாக ஊதினார்கள். அப்படி ஊதியவுடன், இவர்கள் சொல்லக் கூடிய ‘அறிவாளிகள்' எல்லாம் ஒன்றாக சேர்ந்தார்கள். அப்படி சேர்ந்த பிறகுதான், திராவிட முன்னேற்றக் கழ கத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் 183 இடங்கள் கிடைத்தன.

அவர் சொல்லுகின்ற ‘அறிவாளிகளுடைய' முடிவு என்னாகும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம். எனவே, அந்த ‘அறிவாளிகளை' நம்பி இவர் இறங் கினால், இவருடைய கதியும் அதேதான்.


கேள்வி : ரஜினிக்கு ஆதரவாக வழக்காடத் தயார் என்று சுப்பிரமணியசாமி சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கி.வீரமணி : சம்மன் இல்லாமல் ஆஜராகிறேன் என்று அவர் சொல்லுகிறார். அவ்வளவுதானே தவிர, இவர் உதவி கேட்டாரா? அவர் உதவி செய்கிறாரா? என்பதல்ல பிரச்சினை.

ஆனால், ரஜினியும், சுப்பிரமணிய சாமியும் சேர்ந்தால், எங்களுடைய வேலை இன்னும் சுலபமாக முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக