ஞாயிறு, 12 ஜனவரி, 2020

கலைஞர் சிலையை அந்தமானில் திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் உரை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை, கடந்த 10.01.2020 அன்று அந்தமானில் திறந்துவைத்து, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

ஆயிரம் கடல் மைல் கடந்து, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்க நான் வந்திருக்கிறேன். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு இதே அந்தமானில், இதே கலைஞர் அறிவாலயத்தில், நம்மை ஆளாக்கி வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் சிலையை நான் திறந்து வைத்திருக்கிறேன். இன்று கலைஞர் மகனாக வந்து அவருடைய சிலையைத் திறந்து வைத்துள்ளேன். 

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பொதுக்குழு கூடி ஏக மனதாக நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிக்க என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். தலைவராகப் பொறுப்பேற்ற நான், நிறைவாக ஏற்புரை ஆற்றும் போது, ‘நீங்கள் அனைவரும் தலைவரை மட்டும் இழந்திருக்கிறீர்கள். ஆனால், நான் தலைவரோடு சேர்த்து என்னுடைய தந்தையையும் இழந்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன். 

தலைவர்களின் சிலையைப் பொறுத்தவரை, நம்முடைய தலைவர் மட்டும் அல்ல, எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் அவரது சிலை திறக்கப்படுகிறது என்று சொன்னால், அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னோடிகள் திறந்து வைப்பார்கள். அரசியலில் இருக்கும் தலைவர்கள் பங்கேற்றுத் திறந்து வைப்பார்கள்; அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்த முன்னோடிகள் திறந்து வைப்பார்கள்; தொண்டர்கள் கூட திறந்துவைப்பார்கள். அதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. அது புதிதும் அல்ல. ஆனால் தந்தையின் சிலையை ஒரு மகன் திறந்து வைக்க வந்திருப்பது, வரலாற்றில் பெரிய செய்தியாக இடம்பெறக் கூடிய ஒன்றாகும். அதிலும், அந்தமானில் திறந்துவைப்பது என்பது மிக மிகச் சிறப்பு. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்னார்; சென்னை அறிவாலயத்தில், தலைவரின் மூத்த பிள்ளையாம் முரசொலி அலுவலக வளாகத்தில், தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தோம். 10 நாட்களுக்கு முன்னர் சைதை தொகுதியில் திறந்து வைத்தோம். 

தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கிய, அண்ணா பிறந்த காஞ்சியிலும் திறந்து வைத்தோம். தந்தை பெரியார் பிறந்த மண்ணான - தலைவர் கலைஞர் அவர்களின் குருகுலம் என்று சொல்லப்படும் -  ஈரோட்டிலும் திறந்த வைத்தோம். தலைவர் கலைஞர் அவர்களின் திரையுலக வாழ்விற்கு அடித்தளம் அமைத்த சேலத்திலும் திறந்து வைத்தோம். ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நம்முடைய கழக அலுவலகத்தில் தலைவர் கலைஞரது சிலையைத் திறந்து வைத்திருக்கிறார். 

இப்படி நகரங்களில், ஊர்களில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு பகுதிகளில், கர்நாடக மாநிலத்தில் திறந்து வைத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் இன்றைக்கு அந்தமான் தீவில், இந்த நிகழ்ச்சி நடத்தி இதன் மூலமாகத் தலைவர் கலைஞருக்குச் சிலை திறந்து வைத்திருக்கிறோம். 

தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவரது சிலை அமைக்கப்படும் என்ற உறுதியோடுதான் நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

1,191 கடல் மைல் தொலைவு கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உறவால், உணர்வால், ரத்தத்தால், ஒரு தாய் மக்கள் என்ற அந்த உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 

அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ஆம் ஆண்டு வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைத்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார்; ‘ஒருதாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த தம்பி மார்களே, உடன்பிறப்புகளே’ என்று அண்ணா அவர்கள் அழைத்தார்கள். அந்தத் தாய்க்கு அண்ணா என்று பெயர்; அந்தத் தாய்க்கு கலைஞர் என்று பெயர்.

கடல் கடந்து வாழ்ந்தாலும், நீங்கள் தமிழ்நாட்டு மக்களுடன் சேர்ந்து, வாழ்வது போல்தான் உங்களைக் காண்கிறேன். அந்தமானில் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்படுவது, கலைருக்குக் கிடைத்திருக்கும் பெருமை அல்ல; அந்தமானுக்கே கிடைத்திருக்கும் பெருமையாகத்தான் நீங்கள் கருதவேண்டும்.

மன்னன் ராஜேந்திர சோழன் கடல்துறை அமைத்த ஊர் அந்தமான்தான். இந்திய தேசத்திற்காகப் போராடிய பலநூறு தியாகிகளைச் சிறைச்சாலையைத் தவச் சாலையாக மாற்றிய ஊரும் இந்த அந்தமான்தான். 

1943ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்றியது ஜப்பான். மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசிடம்தான்  அந்தமானை ஜப்பான் நாடு ஒப்படைத்தது. 1943 முதல் 1945 வரை 2 வருடம் இந்திய தேசிய ராணுவத்தின் மூலமாக நேதாஜியால் ஆளப்பட்டது, இந்த அந்தமான். இந்தியாவில் முதல் சுதந்திரப் போரைத் தொடங்கியதும்  இந்த அந்தமான்தான். முதல் சுதந்திரக் காற்று வீசியதும் இந்த அந்தமானில் இருந்துதான். 

இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கர்னல் லோகநாதன் எனும் தமிழர் முதல் ஆளுநராக பொறுப்பேற்றதும் இந்த அந்தமானில்தான். அத்தகைய வீரமும், விவேகமும், தியாகமும், தீரமும் கொண்டிருக்கக்கூடிய அந்தமானில், அந்தமான் தலைநகரத்தில் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்படுகிறது என்று சொன்னால், உள்ளபடியே இது பாராட்டுக்குரிய ஒன்று. அந்தப் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய இந்த மாநிலத்தின் அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கும்  குழந்தை அவர்களையும், அவருக்குத் துணை நின்று பணியாற்றிய அத்தனை பேரையும் அமைப்புச் செயலாளர் பாராட்டி இருந்தாலும், தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அத்தனை பேரையும் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். 

நான் நினைத்துப் பார்க்கிறேன். கடல் கடந்து வந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், நமக்கு எதற்கு கட்சி, அரசியல், கொள்கை என்றெல்லாம் கருதாமல் தமிழ்நாட்டைப் போலவே, இந்தக் கழகம் வரவேண்டும் என்று உழைத்திருக்கும், பாடுபட்டிருக்கும், தியாகங்களைச் செய்திருக்கும் நம்முடைய இயக்கத்தின் முன்னோடிகளை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

நம்முடைய வர்தமான் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார்;   தி.மு.கழகத்தை இந்தத் தீவில் ஆரம்பிக்கும்போது கழகத்தை வளர்க்கப் பாடுபட்டிருக்கக்கூடிய கோபாலனாக இருந்தாலும் சரி, மருதவாணனாக இருந்தாலும் சரி. தமிழகத்தில் இருந்து வெளிவரக் கூடிய முரசொலி, மன்றம், மாலை மணி பத்திரிகை தி.மு.க பத்திரிகைகளை எல்லாம் கப்பலிலே வரவழைத்து இங்கிருக்கக்கூடிய தமிழர்கள் படித்து நம்முடைய கொள்கையை வளர்க்கப் பாடுபட்டவர்களை நாம் ஒருக்காலும் மறக்க முடியாது. 

1962ஆம் ஆண்டு நடந்த சம்பள உயர்வு போராட்டம். அந்தப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த சேவகன், சண்முகம் பெருமாள் ஆகியவர்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இந்தத் தீவில் இருவண்ணக் கொடி பறக்கக் காரணமாக இருந்தவர்கள் யார்? குமாரசாமி மருதவாணன், சம்பந்தம், கோபால் ரகீம், சாமிநாதன், ராமச்சந்திரன். இவர்கள் நினைவை இன்றைக்கும் போற்றிக் கொண்டிருக்கிறோம். 

1964ஆம் ஆண்டு பொதுப் பணித்துறை ஊழியர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் - 72 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். அந்தப் பணியில் இருந்த கு.க. கோபால் தனது பணியைத் தூக்கி எறிந்துவிட்டு அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோபாலும், ராமச்சந்திரனும் தமிழகம் வந்து அறிஞர் அண்ணா அவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றார்கள். அதன்பிறகு தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். அரசு இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அது வரலாறு.

அதுமட்டுமின்றி இந்தத் தீவில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, தமிழ் மொழியைப் படிக்கும் சூழலில் அவர்கள் இல்லை. அந்தமான் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வகுப்புகள் நடத்தி இருக்கிறார்கள். அவர்களது துணைவிமார்களே ஆசிரியர்களாக மாறி தமிழ் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அந்தமானில் தமிழ்ப் கற்றுத் தர மறுக்கப்படுகிறது என்ற செய்தி அறிந்த உடன், அன்றைக்கு தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கந்தப்பன் அவர்கள் நாடாளுமன்றத்தில் முழங்கினார். அதற்குப் பிறகு 5ஆம் வகுப்பு வரை தமிழ் கற்றுத்தர அரசு ஒப்புதல் அளித்தது. 

அது ஒரு பெரிய மகத்தான நிகழ்ச்சி. யார் யார் ஆசிரியர்களாக இருந்து தமிழ் பயிற்றுவித்தார்களோ அவர்களையே தமிழாசிரியர்களாக நியமித்தனர். அதற்குப் பிறகு தொடர்ந்து போராட்டம் நடந்து, 1970ல் 8ஆம் வகுப்பு வரை தமிழை கற்றுக் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தந்தோம். இப்படி மொழிக்காக, இனத்துக்காக போராடக்கூடிய இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நான் இங்கே பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். 

இப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய, நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் சிலையை 2013ஆம் ஆண்டு இதே அந்தமானில் திறந்து வைத்தேன். தலைவர் கலைஞர் சிலையை அறிவாலயத்தில் திறந்து வைத்தோம்.

அரை நூற்றாண்டு காலமாக இயக்கத்தைக் கட்டிக்காத்து, இன்றைக்கும் சிலையாக இருந்தாலும் நம்முடைய நெஞ்சங்களில் இருந்து  நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர் என்பதை யாரும் மறந்து விட முடியாது.  அப்படிப்பட்ட தலைவர்  கலைஞர் அவர்களின் சிலையை இன்றைக்கு நான் திறந்து வைத்திருப்பது என்பது, அந்தமான் மக்களுக்கு, இந்த மாநிலத்திற்கு மிகப்பெரிய மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். அதேநேரத்தில், என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இந்த நாள் என்று பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

“பள்ளிக்கூடம் போ போ என்று என் பெற்றோர்கள் விரட்டிய நேரத்தில், பெரியாரின் பள்ளிக்கூடத்திற்குச் சென்று பயின்றவன் நான்” என்று தலைவர் கலைஞர் பெருமையுடன் கூறுவார். நானும் அப்படித்தான். படி படி என்று சொன்னபோது கலைஞரின் பள்ளிக்கூடத்தில் படித்தவன் நான். நான் சென்னை மாநகர மேயராக இருந்த போது பத்திரிக்கை நிருபர், ‘நீங்கள் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எந்தத் துறைக்குப் போயிருப்பீர்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்தத் துறைக்கும் போயிருக்க மாட்டேன். அரசியலில்தான் இருந்திருப்பேன். காரணம், அந்த அளவிற்கு அரசியல் ஆர்வம் இருந்தது. அதற்குக் காரணம் என்ன என்றால், அந்த எண்ணத்தை என்னுள் விதைத்தவர் தலைவர் கலைஞர்.

முரசொலியில் தலைவர் கலைஞர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் “உடன்பிறப்பே” என்று  எப்படிக் கடிதத்தைத்  தொடங்குவாரோ , அது போல பல்வேறு செய்திகள்  பல்வேறு தலைப்புகளில் முரசொலியில் அடிக்கடி வரும். கரிகாலன் பதில்கள். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள். தொடர்ந்து கரிகாலன் பதில்கள் என்ற அந்தப் பகுதியும் முரசொலியில் இடம்பெறும். 

கரிகாலன் பதில்கள் என்பது என்னவென்றால்  வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு தலைவர் பதில் சொல்வார் . அப்படி ஒருமுறை ஒரு தோழர் கலைஞரிடத்தில் ஒரு கேள்வி கேட்டிருந்தார். என்ன கேள்வி என்றால், ‘கரிகாலன் அவர்களே! உங்களிடத்தில் ஒரு கோப்பை விஷத்தைக் கொடுத்து, இதைக் குடியுங்கள்...! இல்லை என்றால் நீங்கள்  தி.மு.க.வில் இருந்து விலக வேண்டும் எனக் கேட்டால்  எதைச் செய்வீர்கள்? கையில்  கோப்பையில் இருக்கக்கூடிய  விஷத்தை குடிப்பீர்களா?  தி.மு.க.வை விட்டு விலகுவீர்களா?’  என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். 

அதற்கு கலைஞர் என்ன பதில் சொன்னார் என்றால், ‘அப்படி  யாரும் என்னிடத்தில் சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட  எதிரி எனக்கு கிடையாது. எதிரிகளாக இருந்தாலும் அந்த எண்ணம் அவர்களுக்கு வராது. ஒருவேளை  அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால், நான் விஷத்தைத் தான் குடிப்பேன்’ என்று கலைஞர் சொன்னார். இது அவருடைய சிலை திறப்பு விழா. அந்த உணர்வைத்தான் நாம் பெற வேண்டும். அதுதான் நமக்கு இருக்கக்கூடிய பெருமை. அந்த உணர்வைப் பெற்றால்தான் அரசியல் வாழ்க்கையில் இருக்கக்கூடிய மேடு பள்ளங்கள் எல்லாவற்றையும் தாங்கக்கூடிய பக்குவத்தை நாம் பெற முடியும். தலைவர் கலைஞர் அவர்கள் ‘நான் அவரை அரசியலுக்கு அழைத்து வரவில்லை’ என்று என்னைச் சொன்னார்.  

 ‘உங்கள் பையனை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள், வாரிசை உருவாக்கி விட்டீர்கள்’ என்று  விமர்சனம் வந்தது.  அதற்குத் தலைவர்   அவர்கள்  ‘நான் அவனை அழைத்து வரவில்லை. எமர்ஜென்சி கொடுமையால் அவன் இழுத்து வரப்பட்டு இருக்கிறான்’ என்று பதில் சொன்னார்.  

மனோகரா திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அரசவை அமைந்திருக்கும். நடிகர் திலகம் சிவாஜி அவர்களை ஒரு சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவார்கள். அந்த மன்னருக்கு முன்னால் வந்து நிறுத்துவார்கள். அந்த அரசன் கேட்பான். ‘மனோகரா உன்னை எதற்கு அழைத்து வந்திருக்கிறேன் தெரியுமா?’ என்று. உடனே மனோகரனான நடிகர் திலகம் கூறுவார்; ‘என்னை அழைத்து வரவில்லை; சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்று! அதுபோல் ‘ஸ்டாலினை அழைத்து வரவில்லை; அவரை இழுத்து வந்தார்கள்’ என்று கலைஞர் சொன்னார்.

1953இல்தான் கல்லக்குடிப் போராட்டம். நான் பிறந்த குழந்தை. என்னுடைய அம்மா தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கைக்குழந்தையாக தூக்கிக்கொண்டு திருச்சியில்  இருக்கும் சிறைக்கு வந்தார். தண்டவாளத்தில் தலை வைத்த காரணத்தால்  கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்கள்! அவர்களிடம் என்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டினார்கள். எதற்காகச் சொல்கிறேன் என்றால், நான் பிறந்தவுடன் வீட்டிலிருந்து வெளியில் போய்ப் பார்த்த முதல் இடமே சிறைதான். அதன் பிறகுதான் எமர்ஜென்சியைப் பார்த்தேன். 

தமிழ்நாட்டில் 1976ல் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. கலைத்த அடுத்த வினாடியில் 500க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

காவல்துறையினர் தலைவர் கலைஞருடைய இல்லத்திற்கும் வருகிறார்கள். அரைமணி நேரத்திற்கு முன் முதலமைச்சருடைய வீடாக இருந்தது. காவலர்கள், முதலமைச்சரான கலைஞருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சூழல் இருந்தது. அரை மணி நேரத்திற்குப் பிறகு கலைஞருடைய மகனான ஸ்டாலினைக் கைது செய்ய வருகிறார்கள். இதுதான் வரலாறு. 

கைது செய்ய வருகிறார்கள் என்றால், விரைவில் அ.தி.மு.க.வினர் உள்ளே போகப்போகிறார்களே - அது போல் அல்ல. மிசா சட்டத்தில், அரசியல் கைதியாக, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு, கைது செய்ய வருகிறார்கள். கைது செய்ய வந்த நேரத்தில் என் துணைவியார் உடன் அமர்ந்திருக்கிறார். திருமணமாகி 5 மாதங்களே ஆகி இருந்தன.  கிளம்பும்போது அவரிடம் கூட்டத்திற்குச் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டுத் தான் கிளம்ப வேண்டும். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள், “அம்மா கவலைப்படாதே. பொது வாழ்வு என்றால் இது சகஜம்தான். தாங்கிக் கொள்ள வேண்டும். நான் எத்தனை முறை போயிருக்கிறேன். உங்கள் மாமியாரைக் கேள்; சொல்வார்” என்று சமாதானம் செய்தார்.

பொது வாழ்க்கை என்பது பதவிகள், பாராட்டுகள், பட்டங்கள், மாலைகள், வரவேற்பு மட்டும் அல்ல. துன்பங்கள், துயரங்கள், சிறைகள், சித்திரவதைகள், அவமானங்கள் போன்ற அனைத்தும் இருக்கும். இரண்டையும் சரிசமமாக நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பக்குவத்தை நமக்கு அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தந்திருக்கிறார்கள். 

“சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக என் ஆயுள் இருக்கும் வரை நான் பாடுபடுவேன்” என்றார் தலைவர் கலைஞர். அப்படி என்றால் அதற்கு பிறகு, என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “எனக்குப் பிறகு தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என்று சொன்னார். தலைவர் கொடுத்த அந்தப் பாராட்டை விட வேறு பாராட்டு எனக்கு தேவையா?.

 ‘ஸ்டாலினிடம் உங்களுக்குப் பிடித்தது எது’ என்று பத்திரிக்கையாளர் கலைஞரிடம் கேட்டபொழுது, ‘அவரிடத்தில் எனக்குப் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கூறினார். அந்தப் பாராட்டைப் பெற்றிருக்கும்  அவருடைய மகனான நான் இன்றைக்குத் தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன். இந்தச் சிலையை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, நம்முடைய மாநிலத்தின் அமைப்பாளர்  குழந்தை, அதற்குத் துணை நின்று பணியாற்றக்கூடிய நிர்வாகிகள், தோழர்கள், செயல்வீரர்கள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறீர்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் சிறப்பான ஆதரவைத் தந்தார்கள் என்று பெருமையுடன் இங்கே சொன்னார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட அத்தனைபேர் ஒத்துழைப்பிலும் இந்தச் சிலை இன்றைக்கு இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நான் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் குழந்தை அவர்களுக்கும், அவருக்குத் துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் தமிழ் வாழக்கூடிய இடங்கள் எல்லாம் அவர்களுடைய ஆட்சி விரிந்து, பரந்து பரவியதை போல, தமிழர் வாழக்கூடிய இடங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடி பட்டொளி வீசி பறக்கக் கூடிய காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. 

இன்று திராவிட முன்னேற்றக் கழகம்  நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. பா.ஜ.க. காங்கிரஸ், தி.மு.க. மூன்றாவது கட்சி. இங்கு குழந்தை அவர்கள் அன்பான வேண்டுகோள் ஒன்றை எடுத்து வைத்தார். நான் வரும்பொழுது நினைத்துக்கொண்டுதான் வந்தேன். நீங்கள் எப்போது பார்த்தாலும் தமிழ்நாட்டில் பேட்டி கொடுக்கும் பொழுதும், பேசும்பொழுதும் பாண்டிச்சேரியை சேர்த்து நாற்பது என்று சொல்லி 39 இடங்களில் வெற்றி பெற்றோம் என்று பட்டியல் போடுகிறீர்கள். இனி  அந்தமானையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோளை வைத்தார்.  வரும்பொழுது அந்த முடிவுடன் தான் வந்தேன்.

இனிமேல் நான் அப்படித்தான் சொல்வேன். கவலைப்படாதீர்கள். இனிமேல் தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணி பட்டியலில் அந்தமானும் நிச்சயம் வரும். 41 இடங்களில் இப்போது 40 இடங்களில் வெற்றிபெற்று இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம்.

ஏனென்றால், அந்தமானில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், வெற்றி பெற்ற பிறகு சென்னைக்கு வந்து அறிவாலயத்தில் நம்முடைய நிர்வாகிகளைச் சந்தித்து, ‘தி.மு.க. இல்லை என்றால் நான் இல்லை. தி.மு.க. தான் வெற்றி பெற வைத்தது’ என்று வெளிப்படையாக எடுத்துச் சொன்னார். அந்த அளவிற்கு பாடுபட்டிருக்கும் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல விரும்புகிறேன். 

அதேபோல் சட்டமன்றத்தில் 100 பேர் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் அந்தமானையும் சேர்த்து 40 பேர் இருக்கிறோம். நடக்க இருக்கக்கூடிய பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புவதை விட நீங்கள்தான் அதிகமாக விரும்புகிறீர்கள். அந்தச் செய்தி உறுதியாக வரப்போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தமிழ்நாட்டிற்காக, தமிழ் இனத்திற்காக மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளுக்கும் குரல் எழுப்பிப் போராடுகிற சூழ்நிலையைத் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மாநிலக் கட்சி எனக் குறுக்கிவிட முடியாது.

இந்தியாவில் இன்றைக்கு மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. கிளர்ந்து எழுந்து இருக்கிறது. உதாரணத்திற்கு மற்ற மாநிலங்களில் இன்றைக்கு ஏதேனும் பிரச்சினைகள், மறியல், பேரணி, கூட்டம் என்று சொன்னால் நம்மைத் தான் முதலில் அழைக்கிறார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள், எந்த மாநிலத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரவை பதவி ஏற்கிறது என்றால், அந்த விழாவிற்கு தவறாமல் என்னை அழைக்கிறார்கள். அந்த விழாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பெருமை அல்ல. தி.மு.கழகத்திற்குக் கிடைத்த பெருமை.தி.மு.கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பெருமை. ஏன் தமிழர்களுக்கே கிடைத்திருக்கும் பெருமை.  

நேற்று பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், இலங்கை வாழ் தமிழ் மக்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்னை வந்து சந்தித்து பல பிரச்சினைகளை சொன்னார்கள். லாரன்ஸ் அவர்கள் என்னை வந்து சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். முழுமையாகப் படித்துப் பார்த்தேன். அதில், 1970 - 76 ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து வந்திருக்கும் 78 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படவேண்டும் என்று உறுதி வழங்கப்பட்டதன்படி, இன்னும் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தனர். இது வரையில் தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள். 

அவர்களுக்கு நான் ஒரு உறுதியினை வழங்குகிறேன்; இப்பொழுது நாடாளுமன்றத்தில் கழகக் கூட்டணிக்கு 40 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் அதற்காக குரல் கொடுப்போம். தொடர்ந்து போராடுவோம். மக்களவையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் இணைந்து எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதை இடைவிடாமல் தொடர்ந்து செய்வோம். 

அதே நேரத்தில் இன்னொரு வேண்டுகோள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்தலை முடித்து விட்டோம்.  எப்பொழுதுமே தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என்னவென்றால், ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக வெற்றி பெறுவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

ஆனால் இதைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாமல், பொறுத்துக் கொள்ளமுடியாமல், தாங்கிக் கொள்ள முடியாமல், அவர்கள் வளர்பிறை என்றும் நாம் தேய்பிறை என்றும் பேசுகிறார்கள். எது வளர்பிறை. அதிகம் வெற்றி பெற்றது வளர்பிறையா? தேய்பிறையா? திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுச் சொன்னேன். 89 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தோம். இப்பொழுது 100 பேர் இருக்கிறோம். இது வளர்பிறையா - தேய்பிறையா? எனக் கேள்வி எழுப்பினேன்.

நாற்பதில் அந்தமானையும் சேர்த்துச் சொல்கிறேன். இல்லையென்றால் கோபித்துக் கொள்வீர்கள். 40-ல் தேனியைத் தவிர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றோம். அப்போது மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டோம் என்று சொன்னார்கள். ‘தேனியில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். மிட்டாய் கொடுத்தீர்களா அல்வா கொடுத்தீர்களா?’ என்று கேட்டேன்.

உள்ளாட்சித் தேர்தலில் இன்றைக்குப் பெரும்பான்மையான இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் உங்களுக்கும் விரைவில் வரப்போகிறது. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படி ஒருங்கிணைந்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, நம் தோழர்களுக்குள் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கழகம்தான் -  தமிழர்கள்தான்-  அந்தமானில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்தக்கூடிய வகையில் உங்களுடைய பணி இருந்ததோ, அதேபோல் இந்தத் தேர்தலிலும் இருந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயம் அந்த ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. 

நாடாளுமன்றத்தில், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்முடைய மொழிக்கு, இனத்திற்கு ஆபத்து வரும் போதெல்லாம் கம்பீரமாக குரல் எழுப்பி வருகிறார்கள். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நேரத்தில் பார்த்தோம். தந்தை பெரியார் வாழ்க - அறிஞர் அண்ணா வாழ்க - தலைவர் கலைஞர் வாழ்க - டாக்டர் அம்பேத்கர் வாழ்க என்ற அந்த முழக்கத்தை முழங்கி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.

இப்படி தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது. ஆகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று - வெற்றி விழா நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நானே தேடி வருவேன் - அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை சிலைத் திறப்பு விழாவின் மூலமாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கும் குழந்தை, அவருக்குத் துணை நின்ற நண்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டி, வாழ்த்தி விடைபெறுகிறேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக