புதன், 22 ஜனவரி, 2020

தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்


மத்தியஅரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்களை கேட்பதிலும், அத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதிலும் தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டியது மிக மிக அவசியமான, தேவையான ஒன்று. காரணம் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி விவசாயிகள் மட்டுமல்ல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொது மக்கள் ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஏற்கனவே தமிழ்நாட்டில் சுமார் 3,200 ச.கி.மீ. பரப்பளவில் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது 5 ஆவதாக இத்திட்டத்திற்காக ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஏலத்தில் இத்திட்டத்திற்காக சுமார் 4,064 ச.கி.மீ. பரப்பளவிற்கு உரிமம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒதுக்கிய பரப்பளவை விட இப்போதைய ஏலத்தில் 5 ஆவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு அதிகம். மேலும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (20.01.2020) தமிழக முதல்வர் அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்க வேண்டியதில்லை என்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்ல தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட வேறு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்ததும் முக்கியமானது.

எனவே தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்கவும், தமிழகத்தில் விளை நிலங்களையும், நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக