வெள்ளி, 31 ஜனவரி, 2020

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2500ரூபாய் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்


தமிழக அரசு – நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2500ரூபாய் வழங்கவும், ஆந்திரா பொன்னிரக நெல் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருப்பதால் நெல் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

நெல் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமாக, தீவிரமாக செய்து வருகிறார்கள். ஆனால் பல நேரங்களில் நெல் சாகுபடிக்காக செய்த செலவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

தற்போதும் நெல் விவசாயிகள் நெல் பயிரிட, விளைச்சல் செய்ய செய்த செலவு நெல்லை விற்கும் போது கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு ரூபாய் 1,905 வழங்குவதும், ஒரு குவிண்டால் பொதுரக நெல்லுக்கு ரூபாய் 1,855 வழங்குவதும் போதுமானதல்ல. இந்நிலையில் விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூபாய் 2,500 வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.

அதே போல திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட ஆந்திரா பொன்னிரக நெல்லானது புகையான், குலை நோய் ஆகியவற்றின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ ஆந்திரா பொன்னிரக நெல்லை 10 ரூபாய்க்கு கூட விற்க முடியவில்லை.

சாதரணமாக ஒரு கிலோ ஆந்திரா பொன்னிரக நெல்லை ரூபாய் 20 வரை விற்கலாம்.
அதே போல ஒரு ஏக்கருக்கு ஆந்திரா பொன்னி நெல் சுமார் 40 மூட்டை (ஒரு மூட்டை – 60 கிலோ) வரை சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் நோயின் தாக்கத்தால் இப்போது 7 அல்லது 8 மூட்டை வரை மட்டுமே சாகுபடி செய்ய முடிகிறது.

எனவே ஆந்திரா பொன்னிரக நெல் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாயிகளின் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். பொது மக்கள் ஆந்திரா பொன்னிரக நெல்லை அதிகம் விரும்பி வாங்குவதால் விவசாயிகள் இந்த நெல்லை பயிரிடுகிறார்கள். ஆந்திரா பொன்னிரக நெல்லுக்கு அரசு தடை விதித்த போதும் தனியார் விதை விற்பனை மையங்களில் விதை விற்பனை செய்யப்படுவது ஏற்புடையதல்ல.

எனவே தமிழக அரசு - தனியார் விதை விற்பனை மையங்களில் ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு ஆந்திரா பொன்னிரக நெல்லுக்கு ஈடாக புதிய சன்னரக நெல் கண்டிபிடித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக விவசாயிகள் இலாபம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக