புதன், 8 ஜனவரி, 2020

கொளத்தூர் பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

“திமுகவின் அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் கல்வி - வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்களை தொடங்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின்.
கொளத்தூர் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: 
அனைவருக்கும் வணக்கம். பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், உங்கள் அனைவரையும் சந்திப்பதற்கான இந்த நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை, குறைகளை நேரடியாக வந்து சந்தித்துக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறேன் என்பது இந்த தொகுதி மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய பொதுவாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வுகள் பல உண்டு. 
அவற்றில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி குறிப்பிடத் தக்கது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மூலம் நீங்கள் அனைவரும் பயிற்சி பெற்று, அதன் பயனாக வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும் வேலை வாய்ப்பையும் தரக்கூடிய இந்த நிகழ்ச்சியை எண்ணிப் பார்க்கும் போது, நீங்கள் அனைவரும் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களோ, அதை விடப் பலமடங்கு மகிழ்ச்சியை நான் அடைகிறேன் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்குக்கூட ஒரு சகோதரி பேசும்போது, ‘இது கொளத்தூர் தொகுதியில் மட்டும் இருக்கக்கூடாது. எல்லா இடங்களிலும் பரவவேண்டும்’ என்று சொன்னார். அந்தப் பணியை நாங்கள் இங்கு தொடங்கி இருக்கிறோம். ஏற்கனவே மாவட்ட செயலாளர் சேகர் பாபு அவர்கள் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் சைதாப்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் தொடங்கப்பட உள்ளது. நான் சைதாப்பேட்டை நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தி.மு.கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் இது போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த வேலை இல்லாமல் தவிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்’ எனச் சொல்லி இருக்கிறேன். 

தொடக்கத்தில் 61 பேர் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பைப் பெற்றனர். அதற்கு பிறகு 2வது கட்டமாக 67 பேர், சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.  அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறது. ஆகவே இது தொடரவேண்டும். தொடரத்தான் போகிறது. எந்த மாற்றமும் இல்லை. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கல் விழாவின் போது அனைவரும், உங்கள் இல்லத்தாருடன் சேர்ந்து விழாவைக் கொண்டாடப் போகிறீர்கள். நானும் பொங்கல் நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பல மாவட்டங்கள், ஊர்களில் இருந்து வரக்கூடிய தோழர்களை, மக்களைச் சந்திக்கவுமான வாய்ப்பு உள்ளது. அதனால் உங்களை வந்து பொறுமையாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்ல முடியாது என்பதால்தான், முன்கூட்டியே என் துணைவியாருடன் சேர்ந்து உங்களை வாழ்த்த வந்திருக்கிறேன். 

நீங்கள் அனைவரும் இதுவரை இந்தப் பயிற்சியில் பங்கேற்று, முறையாக பயின்று எப்படி வேலையைப் பெற்றிருக்கிறீர்களோ, அதேவகையில் இந்தச் சிறந்த முயற்சி தொடர வேண்டும். உங்கள் அத்தனை பேருக்கும் முன்கூட்டியே தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு செய்தியையும் நான் சொல்லியாக வேண்டும். இதே கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆண்கள் எங்களிடம் ஒரு கோரிக்கையை வைத்து வருகிறார்கள். ‘பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வேலை கிடைத்து, திருமணம் நடைபெற்று வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள். நாங்கள் அனைவரும் இங்கேதானே இருப்போம். எங்களுக்கு கிடையாதா?’ என்று கேட்கிறார்கள்.  ‘அவர்கள் எங்கே போனாலும் அங்கும் நம்மவர்களாகத்தான் இருக்கப் போகிறார்கள். எங்கே சென்றாலும் இவற்றையெல்லாம் மறக்கமாட்டார்கள்’ என்பதைத்தான் அவர்களுக்குப் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

அந்த அளவுக்கு வேலை வாய்ப்பை, அதற்கான பயிற்சியைப் பெறுவதில் ஆர்வமும், உணர்வும் வருவதற்கான உந்துதலாக இந்த அனிதா அச்சிவர்ஸ் அகாடமி உருவாகி இருக்கிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேருக்கும், பயிற்சி முடித்து வேலை வாய்ப்பைப் பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக