செவ்வாய், 21 ஜனவரி, 2020

பெரியார்பற்றி அவர் பேசியதற்கான விலையை அவர் கொடுப்பார் - கி.வீரமணி

பெரியார்பற்றி அவர் பேசியதற்கான விலையை அவர் கொடுப்பார் என்றார் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி! 
‘நீட்'  தேர்வை எதிர்த்து பரப்புரை பெரும் பயணத்திற்காக இன்று  (20.1.2020) தூத்துக்குடிக்குச் சென்ற  திராவிடர் கழகத்  தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்குப்   பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நீட் தேர்விலிருந்து குறைந்த பட்சம் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வேண்டும்!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டினுடைய மருத்துவக் கல்வி சீர்கெட்டுப் போன நிலையை, நீட் தேர்வு என்ற தேர்வின் மூலமாக உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவ - மாணவிகள், அந்தத் தேர்விலே, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரக் கூடிய வாய்ப்பையே தடுத்து நிறுத்தி, பல அனிதாக்களும், சுபசிறீக்களும், பிரதீபாக்களும், கீர்த்தனாக்களும், வைசியாக்களும், ரிதுசிறீக்களும், மோனிக்காக்களும் இதுவரையில், தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வை  ஒழிக்கவேண்டும், தமிழகத்திற்காவது குறைந்தபட்சம் விதிவிலக்குக் கொடுக்கவேண்டும் என்று நுழைவுத் தேர்வை இதுவரையில் தி.மு.க. ஆட்சியும் சரி, அதற்கு முன்பு இருந்த ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியிலும் சரி, அதற்கு இடமில்லாமல் செய்து சட்டமே இருந்தது.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், மீண்டும் மீண்டும் நீட் தேர்வு என்பதுதான் சிறந்தது என்று சொல்லி, நம்முடைய பிள்ளைகளின் படிப்பில் மண்ணைப் போடுகிறார்கள்.

தமிழகத்திலேதான் அதிகமான மருத்துவக் கல் லூரிகள் உண்டு. அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டுப் பிள்ளைகளோ, கிராமப் புற பிள்ளைகளோ படிக்க முடியாத அளவிற்கு, கரை யான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்ததுபோல பலர் வருகிறார்கள்.

ஆள் மாறாட்டம்!

எனவே, நீட் தேர்வில் பல ஊழல்கள் நடந்திருக் கின்றன; ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன. பயிற்சி நிறுவனங்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்களை கார்ப்பரேட்டுகள் பகற்கொள்ளை அடிக்கிறார்கள். சாதாரணமான ஏழை, எளிய மாணவிகள் அதில் பயில முடியாது. ஓராண்டு, ஈராண்டு அதில் பணம் கொடுத்துப் படித்துவிட்டு, அதிலும் ஆள் மாறாட்டம் செய்து வெற்றி பெறுகிறார்கள்.

இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துப் போராடவேண்டிய தமிழக அரசு, இரட்டை வேடம் போடுவதுபோன்று, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

ஏற்கெனவே, தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு அதற்கு இடங்கொடுக்காமல், திருப்பி அனுப்பியதைக்கூட அவர்கள் சொல்லவில்லை.

எனவேதான், எல்லாவற்றிற்கும் மத்திய அரசுக்குத் தலையாட்டக்கூடிய தமிழக அரசு, உடனடியாக தங்களுடைய நிலைப்பாட்டினை உறுதியாக எடுத் தால், நிச்சயமாக நீட் தேர்வை நாம் குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலாவது இல்லாமல் ஆக்கக்கூடிய வாய்ப் புகள் உண்டு.

நம்முடைய பிள்ளைகளின் படிப்பில்

மண் - இடைநிற்றல்!

அதுமட்டுமல்லாமல், கல்வித் துறையில் 5, 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, 10, 11, 12 ஆம் வகுப்பு களுக்குப் பொதுத் தேர்வுகள் அல்லாமல், நுழைவுத் தேர்வையும் எழுதவேண்டும் என்று சொல்லி, நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பில் மண்ணைப் போடக்கூடிய அளவிற்கு, இடைநிற்றல் ஏராளம் நடக்கக்கூடிய அளவிற்கு, இதனை ஆக்கிக் கொண் டிருக்கிறார்கள்.

இந்தக் கல்வி முறை என்பது, மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரக்கூடிய அளவிற்கு இருக்கும்.

தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் மற்ற திராவிட இயக்கத்தவர்களும் அரும்பாடுபட்டதன் காரணமாக, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றிருந்த நிலை மாறி, இன்றைக்குத் தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது.

கன்னியாகுமரிமுதல் திருத்தணி வரை!

எனவேதான், அந்த நீட் தேர்வையும், புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து, நாடு தழுவிய பிரச் சாரத்தை செய்யவேண்டும் என்று, இன்றைக்குக் கன்னியாகுமரியில் இருந்து திருத்தணிவரையில் அந்தப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து 10 நாள்கள் நடத்துவதற்காகத் தொடங்கியிருக்கிறோம்.

இன்று மாலை நாகர்கோவிலில் இருந்து அந்தப் பயணம் தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று பெரிய நகரங்களில் அந்தப் பிரச்சாரம் நடைபெறும். 30.1.2020 அன்று சென்னை யில் இந்தப் பிரச்சாரம் நிறைவு செய்யப்படும்.

21 ஆண்டுகள் நுழைவுத் தேர்வை எதிர்த்து போராடிய இயக்கம்!

மக்களுடைய விழிப்புணர்ச்சி, மக்களுடைய பெருந்திரள் ஆதரவு, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் இவர்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்தி, அதன்மூலம் தீர்வு காணவேண்டும் என்பது தான்.

சிலர் நினைக்கலாம், நீட் தேர்வு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு விட்டதே, அதனை மீண்டும் திரும்பப் பெறுவார்களா? என்று.

21 ஆண்டுகள் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற இயக்கங்கள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆகும்.

ஆகவே, அப்படிப்பட்ட இயக்கங்கள் இன்றைக்கு ஒன்றுபட்டு இருக்கின்றன.

எனவேதான், இந்தப் பணியை செய்வதற்கு, மக்கள் மத்தியிலே கருத்தைத் திரட்டுவதற்கான  ஒரு பிரச்சாரப் போராட்டமாக இதனை நடத்துகிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறோம்.

இன்று மாலை நாகர்கோவிலில், திருநெல்வேலியில், நாளைக்கு கோவில்பட்டி, சாத்தூர், மதுரை என்று வரிசையாக பிரச்சாரம் இருக்கின்றன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் - ரஜினியின் கருத்தும்!

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் பெரியாரைப்பற்றி கருத்து சொல்லியிருக்கிறாரே - ஆனால், அதற்காக நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே! அவரும் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லையே?

கி.வீரமணி :  அதற்குரிய விலையை அவர் கொடுப்பார்.  ஏற்கெனவே அவருக்கு இருக்கும் மரியாதை என்னவென்று வெளியே தெரிந்துவிட்டது.

தவறான தகவலை அவர் சொல்லும்பொழுது, மற்றவர்கள் அதனைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; அப்படி சுட்டிக் காட்டும்பொழுது அதனைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

அவர் இனிமேல் அரசியலுக்கு வந்தால், அவர் பேசுவது எப்படி இருக்கும் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், இந்தத் தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அவருடைய கருத்து என்னவென்பதைப் பார்த்தாலே, அவர் யார் என்று புரிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏழு பேரின் நிலை என்ன? என்று அவரிடம் செய்தியாளர் கேட்டபொழுது, எந்த ஏழு பேர்? என்று கேட்ட, ‘சிறந்த அரசியல் ஞானி' அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக