அன்பு மழலை யாழினிக்கு சிந்தும் கண்ணீர்ப்பூக்களால்
அஞ்சலி செலுத்துகிறேன். - தொல்.திருமாவளவன்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தைச்சார்ந்த முன்னணி தோழர் தம்பி கண்ணன் என்கிற கார்வண்ணன் அவர்களின் மனைவி திருமதி எழிலரசி அவர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விசிக வேட்பாளராக தென்னை மரச்சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றிப்பெற்றார். இது அவர் இரண்டாவது முறையாக பெறும் வெற்றியாகும்.
ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களை எங்கோ ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவ்வாறு எங்கும் செல்லாமல், நேற்று மதுரைக்கு சென்ற என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக வந்தவழியில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருக்கும்போதுதான் வேதனைமிக்க அந்த விபத்து நேர்ந்துள்ளது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒருபுறத்திலிருந்து இன்னொருபுறம் சாலையைக் கடந்து வரும்போது, அதிவேகமாக மதுரையை நோக்கிச்சென்ற தனியார் வண்டியொன்று தம்பி கார்வண்ணன் மீது பலமாக மோதியுள்ளது. அப்போது ஏற்பட்ட பேரதிர்வில் தம்பி கார்வண்ணன் இடுப்பிலிருந்த குழந்தை யாழினி, அவர் பிடியிலிருந்து சிதறி சிலஅடி தூரம் மேலேதூக்கி எறியப்பட்டு தரையில் வீழ்ந்துள்ளது. அதனால் யாழினியின் தலையில் பலத்த அடிபட்டு மூளைக்காயம் ஏற்பட்டதில் உள்ளேயே பெரும் இரத்தக்கசிவு உருவாகியுள்ளது. மண்டையோட்டில் வெளிக்காயம் இல்லை. ஆனால், உள்ளே மூளையில் கடுமையான சேதம். உடனே அறுவை செய்து உயிரைக் காப்பாற்ற இயலாத அளவுக்கு நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து சுயநினைவற்ற நிலைக்குப்போய்விட்டது. பத்து நிமிடங்களில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தந்தையும் குழந்தையும் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கே சென்று பார்த்தேன். கார்வண்ணனின் இடுப்பெலும்பில் பலத்த அடி. இலேசான கீறல் உடைவு. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதல்.
மழலை யாழினியைக் காப்பாற்ற வாய்ப்பில்லையென மருத்துவர்கள் கையைவிரித்து விட்டனர். யாழினியின் கண்களில் ஒளியில்லை. உடலில் கொஞ்சமும் அசைவில்லை. தொட்டுப்பார்த்ததில் துளியும் வெப்பமில்லை. ஆக்சிஜன் கருவிமூலம் செயற்கை சுவாசம் இருந்தது. எனினும் மேலும் முயற்சிக்கவும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டேன்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பின்னர் இராஜாஜி மருத்துவமனையிலும் குழந்தையைக் காற்றுவதற்குப் போராடியும் இயலாமற் போய்விட்டது.
“பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.
“பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் ‘பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக