சனி, 25 ஜனவரி, 2020

தோழர் பாலபாரதி அவர்களிடம் தரக்குறைவாகவும், மிரட்டல் தொனியிலும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! - சிபிஐ (எம்)


தோழர் பாலபாரதி அவர்களிடம் தரக்குறைவாகவும், மிரட்டல் தொனியிலும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! சிபிஐ (எம்) கடிதம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவருமான தோழர் க.பாலபாரதி அவர்கள் கடந்த ஜனவரி 18 மாலை 3.30 மணியளவில் திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு கட்சிப் பணி நிமித்தமாக ஒரு காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கரூர் அருகேயுள்ள மணவாசி சுங்கசாவடியில், சுங்கச்சாவடிகளுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும் சுங்கத் தொகை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆனால் அங்கு பணியில் இருந்தவர்கள் அவர் எழுப்பிய கேள்விகள் எதற்கும் விளக்கம் அளிக்காமல் முரட்டுத்தனமாகவும், மரியாதைக்குறைவாகவும் பேசியுள்ளனர். கார் ஓட்டுநர் மற்றும் சுங்க ஊழியர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் கூட்டமாக இணைந்து கொண்டு கூச்சலிட்டுள்ளனர். அப்போது, அலுவலகத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இவர்களோடு இணைந்து கொண்டு மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

ஒரு பொது இடத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடமே, அநாகரீகமாவும், மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் சாதாரண மக்களிடம் சுங்கச்சாவடியில் பணியற்றுபவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. இதே மணவாசி சுங்கச்சாவடியில் கடந்த காலங்களில் பலமுறை வாகனங்களின் பயணம் செய்வோர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்துள்ள சம்பவங்கள் தங்களது கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

எனவே மணவாசி சுங்கச்சாவடியில் சம்பவத்தன்று பணியில் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும் பொதுவாகவே சுங்கச் சாவடி நிர்வாகங்களில் அணுகுமுறையை ஒழுங்கு படுத்துவதும் அவசியத் தேவை என சுட்டிக் காட்டுகிறேன். இது குறித்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை எனக்கு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக