ஞாயிறு, 26 ஜனவரி, 2020

குடியரசு தின நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் - கே.எஸ்.அழகிரி


குடியரசு தின நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் - கே.எஸ்.அழகிரி

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணல் மகாத்மா காந்தி தலைமையில், விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி, ஆகஸ்ட் 15, 1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம். ஆனால், ஜனவரி 26, 1950 அன்று தான் இந்தியா ஒரு குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தான் அரசமைப்புச் சட்டமும் அமலுக்கு வந்தது. இந்திய மக்களின் அறிவாற்றல், சட்ட நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், அகன்ற தேசியப் பார்வை, தீர்க்க தரிசனம் ஆகிய அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்வது தான் நம் அரசமைப்புச் சட்டம்.


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்ச்சியை, அடிப்படையை அதன் முகப்புரையில் காண முடியும். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தயாரிக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட நோக்க தீர்மானத்தின் அடிப்படையில் முகப்புரை தயாரிக்கப்பட்டது. சமூக, பொருளாதார நீதி முதலில் சொல்லப்பட்டு, அரசியல் நீதி பிறகு தான் வருகிறது. சமூக நீதியும், மதச்சார்பின்மையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக இருக்கிறது.

இந்தியா மதச்சார்பில்லாத சோசலிஸ்ட் அரசாக 1976 இல் நிறைவேற்றப்பட்ட 42-வது திருத்தம் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டது முதல் மதச்சார்பற்ற பதாகையை தாங்கி பாதுகாத்து வருகிறது. அந்த அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வகையிலும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்ட, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பாசிச கொள்கைகளையும் பா.ஜ.க. கடைப்பிடித்து வருகிறது. இந்தப் பின்னணியில் தான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து நாட்டு மக்கள் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு பா.ஜ.க. ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து அணிதிரண்டு வருகிறார்கள். இது அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற நடவடிக்கையாக நாம் கருதுகிறோம்.

எனவே, 71-வது இந்திய குடியரசு தினத்தில், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை பாதுகாக்கிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஒவ்வொரு குடிமகனும் இந்நாளில் சூளுரை ஏற்க வேண்டும். இத்தகைய சூளுரையின் மூலமே 130 கோடி மக்களுடைய நலனையும், உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அனைத்து மக்களும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக