செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டர்கள் ஆகக் கூடாதா? ‘நீட்’ - பார்ப்பனர், முதலாளிகள் வைக்கும் கண்ணிவெடி! - கி.வீரமணி


ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டர்கள் ஆகக் கூடாதா?
‘நீட்’ - பார்ப்பனர், முதலாளிகள் வைக்கும் கண்ணிவெடி!
நுழைவுத் தேர்வை முறியடித்ததுபோல,
‘நீட்’டையும் முறியடிப்போம் - ஒன்று திரள்வீர்!

‘நீட்’, புதிய கல்விக் கொள்கை - மத்திய அரசின், அதற்குத் தலையாட்டும் மாநில அரசு - அதுவும் தமது உரிமை பறிபோகிறதே என்ற உணர்வுகூட இல்லாமல், நமது மாணவர்களின் கல்விக் கண்ணைக் குத்தும் முயற்சி - நமக்கு இதய வலியை விட மிகவும் கொடுமையான வலியைத் தந்து கொண்டே உள்ளது!

மனுதர்மப் பாம்பு படம் எடுத்து ஆடுகிறது!


சமூகநீதியை நிலைநாட்ட நமது தமிழ் மண் இந்தியாவிற்கே வழிகாட்டிய மண் என்ற வரலாற்றை மண் மூடிப் போகும் அளவு செய்கின்ற ‘நீட் என்ற தேர்வும், மருத்துவப் பட்டத்துக்குப் பிறகும், நீட்டப்பட்ட ‘‘நெக்ஸ்ட்’’ என்ற தேர்வும், அடுத்து கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பு - பட்டப் படிப்பு படிக்கவேண்டுமாயின் அதற்கும் தனித்தனி நுழைவுத் தேர்வு என்ற அடுக்கான ‘‘கண்ணிவெடிகள்’’ நமது பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்கி, இருண்ட காலத்திற்கு இம்மக்களை - குறிப்பாக ஏழை, எளிய, கிராமப்புற, விவசாய பாரம்பரியத்தில் வந்துள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அத்தனை ஒடுக்கப்பட்டோரையும் கல்வியோ தொழிற்கல்வியோ பெற முடியாத அளவுக்கு மனுதர்மப் பாம்பு படமெடுத்தாடுகிறது!

அண்ணா பெயரில் உள்ள ஆட்சி இரட்டை வேடம் போடலாமா?

அண்ணா பெயரில் உள்ள கட்சியின் ஆட்சியோ, அதற்கு மகுடி வாசித்து மகிழ்ந்து கொண்டிருப்பதோடு - இடையிடையே இரட்டை வேடத்தையும் போட்டு ஏமாற்ற முயலுகிறது! ‘நீட்’ தேர்வுபற்றி ஒருமனதாக நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர ஏன் மறுக்க வேண்டும்?

கல்வி என்பது வெறும் யூனியன் பட்டியல் அல்ல!

கல்வி என்பது மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றப்பட்டாலும்கூட, அது முழுக்க முழுக்க மத்திய அரசுப் பட்டியலாக - யூனியன் பட்டியலில் மாற்றப்பட்டது இல்லையே!
ஒத்திசைவுப் பட்டியலான Concurrent List - இல் தானே உள்ளது!
மத்திய அரசின் அத்துணைக் கொடூரச் சட்டங்களுக்கும் - மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களுக்கும் - சமூகநீதியைப் புதைக்கும் சட்டங்களுக்கும்கூட வாக்களித்து, நிறைவேற்றத் தவறாத ராஜாவை விஞ்சிய ‘‘விசுவாசிகளான’’ நமது மாநில அரசு, தங்கள் நிலைப்பாட்டில் உண்மையான உறுதிக் காட்டியிருந்தால், இந்த ‘‘நீட்’’ தேர்வு இத்தனை ஆண்டு நீடித்திருக்குமா?

அம்மா ஆட்சி இதுதானா?

‘அம்மா ஆட்சி’ என்கிறார்களே, அந்த அம்மா நுழைவுத் தேர்வை ஏற்றாரா? ஒழித்தாரா? அந்த செய்திகூட இப்போதைய ஆட்சியாளர்களுக்கு வசதியாக ஏனோ மறந்துவிட்டது!
எத்தனை அனிதாக்களும், சுபசிறீக்களும், பிரதீபாக்களும், கீர்த்தனாக்களும், வைசியாக்களும், ரிதுசிறீக்களும், மோனிக்காக்களும் எங்கள் சமுதாய இளந்தளிர்களின் கனவுகள் இந்த ‘நீட்’ தேர்வால் எரித்துச் சாம்பலாக்கப்படவேண்டுமா?

எத்தனை எத்தனைக் குளறுபடிகள்!

ஆண்டுதோறும் கேள்விகளில் குளறுபடிகள், திட்டமிட்டே தமிழ்நாடு பழிவாங்கப்படும் கொடுமை, உயர்நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்திலும் பதில் கிட்டாத தடம் புரண்ட நீதி, ஆள் மாறாட்டமோ நூற்றுக்கணக்கில்; கோடிக்கணக்கில் கார்ப்பரேட்டுகளின் பகற்கொள்ளை!
இந்த லட்சணத்தில் இந்த ‘நீட்’ தேர்வு - ஊழலை ஒழிக்க வந்த மாற்று முறை என்று வெட்கமில்லாமல் கூறும் வேதனை வழிந்தோடும் விளக்கங்கள்!

பெற்றோர்களே, மாணவர்களே ‘நீட்’டை சகித்துக் கொள்ளலாமா?

பெற்றோர்களே, மாணவர்களே, பெரியாரும், காமராசரும், அண்ணாவும், கலைஞரும், ஏன் அ.தி.மு.க.விலே கூட அதன் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்கூட காத்த மாநில உரிமை, தமிழ் மண்ணின் சமூகநீதி, கல்வி உரிமை இன்று ‘‘பொய்யாய், பழங்கதையாய், கனவாய்ப்’’ போய்க் கொண்டிருக்கிறதே - இதை எப்படி சகிப்பது?
எவ்வளவு குளறுபடிகள், ஊழல்கள்! இவற்றையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டாமா அண்ணா பெயரில் உள்ள ஆட்சி?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்று ஒரு நாடகமாடுவதுபோல செயல்படுவது எதற்கு? யாரை ஏமாற்றிட?
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமானால், சட்டப்படி எமக்குள்ள உரிமை ‘நீட்’ தேர்வுக்கு விலக்குத் தரவேண்டும் என்பதை வற்புறுத்திக் கேட்கும் நிபந்தனை வைக்கும் தெம்பும், திராணியும் இல்லையே ஏன்?

எமது பிள்ளைகள் டாக்டர் ஆகக் கூடாதா?

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு செல்லுபடி ஆகும்?

எமது கிராமப் பிள்ளைகளின் டாக்டர் ஆகும் கனவு, கலைந்த கனவாக, நினைப்பில் மண் விழுந்துவிட்டதே!

எம்.பி.பி.எஸ்., படித்து நோயாளிகளைக் கவனித்து, மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பைப் பறிக்கும் வகையில், தேர்வு, தேர்வு என்று ஆலாய் பறந்து, ஆலையிலிட்ட கரும்பாகி, எமது செல்வங்கள் நைந்து போனதுதான் மிச்சம்!
இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டாமா? மக்கள் எழுச்சிக்குமுன் எந்த கொடுங்கோன்மையும் நிற்காது! இது வரலாறு காட்டும் உண்மை! மக்களின் அதிருப்தி, வருத்தம், துன்பம், துயரம் கடல் அலைபோல் எழுந்து நிற்கிறது; மலைபோல் நிற்கிறது. பார்க்க மறுக்கின்றது மத்திய - மாநில ஆட்சிகள் - ஜனநாயக ஆட்சிகளுக்கு இது அழகா? முறையா?

பார்ப்பன - பனியா கும்பலின் சூழ்ச்சி!

திட்டமிட்டே இந்த சூழ்ச்சி வலை உயர்ஜாதி பார்ப்பன - பணக்கார முதலாளி வர்க்கத்தால் களமிறக்கப்பட்டு விட்டது.
எனவேதான், தமிழ்நாடு முழுவதும் ‘நீறுபூத்த நெருப்பாக’ நீட் எதிர்ப்புக் கனன்று கொண்டுள்ளது. கல்விக் கண்ணைக் குத்தும் புதிய குலதர்மக் கல்வி முறையின் ஆபத்தை விளக்கி அறவழியில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, சமூகநீதியைக் காக்க நாம் பிரச்சார பெரும் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

தீர்வு காண்போம் வாரீர்!

நுழைவுத் தேர்வினை எதிர்த்து 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற இயக்கம் நம் இயக்கம்; மக்கள் எம் பக்கம் என்பதை உணர, அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

மக்கள் சக்தியே மகத்தான ஜனநாயக ஆயுதம்!
எனவே, திரண்டு வந்து தீர்வு காண ஒத்துழைப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக