திங்கள், 27 ஜனவரி, 2020

எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்


சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசு மதத்தின், ஜாதியின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் கொடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டு வரும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்கிற நம்முடைய சுயமரியாதை, உரிமை பறிக்கப்படக் கூடிய நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் நிம்மதியாக நாட்டில் வாழ முடியுமா?

பக்கத்தில் இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர் எதிர்த்து தீர்மானம் போடப்போகிறோம் என்று சொல்கிறார். கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சியும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசியக் குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்கள்.  ராஜஸ்தான் மாநிலத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த போது நாடாளுமன்றத்தில் ஆதரித்த தெலுங்கானா மாநிலமும் எதிர்க்கத் தொடங்கிவிட்டது. பிஜேபி-உடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் கட்சி ஆதரித்து ஓட்டு போட்டது. அவரும் இப்போது எதிர்க்கிறார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இருந்து வருகிறது. இந்த லட்சணத்தில் 'நான் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்,  விருதுகள் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் எடப்பாடி.. விருது தந்தவர்களைத்தான் முதலில் கேட்க வேண்டும். நம்முடைய உரிமையைத் தட்டிப் பறிக்கக் கூடிய நிலை. உரிமை பறிபோய் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை இல்லை. 

ஏற்கனவே சட்டமன்றத்தைக் கூட்டியபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஒரு தனிநபர் தீர்மானத்தை எழுதிக் கொடுத்தேன். 5 நாட்கள் சட்டமன்றம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கேட்டபோது சபாநாயகர் ஆய்வில் இருப்பதாக கூறி, எடுத்துக் கொள்ளவே இல்லை. இப்போதும் கேட்கிறேன். நீங்கள் ஆதரித்து ஓட்டு போட்டீர்கள். அதிமுகவின் 11 எம்.பி.க்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு எம்.பியையும்  சேர்த்து 12 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டீர்கள். அதனால்தான் இந்த சட்டமே நிறைவேறியது. இப்போது நாடே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால், தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவை கூடிக் கலந்து பேசி தீர்மானம் போடவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் அயோக்கியத்தனம், கொள்ளை, கொலை, ஊழல் செய்திருந்தாலும் - இந்த்த் தீர்மானத்தை நிறைவேற்றினால், நானே மனமுவந்து உங்களைப் பாராட்டத் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவும் தயாராக இருக்கிறேன். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? போடமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

இன்றைக்கு மணக்கோலத்தில் இருக்கும் தம்பி பிரபாகர் ராஜா அவர்கள், ஒரு இளைஞர். நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அந்த பொறுப்பில் இருந்து வந்தவர்தான். அதற்கு பிறகு என்னுடைய மகன் உதயநிதிஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மிகச்சிறப்பாக பணியாற்றுவதாக அவர் தந்தையே தட்டிக் கொடுக்கிறார். ஒரு மகனை தந்தை பாராட்டுவது சாதாரண விஷயம் இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் என்னையும் பாராட்டி இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். அதுபோல் அவரை அவரது தந்தையே பராட்டி இருக்கிறார். அவருடைய தந்தை மட்டும் அல்ல நாங்களும் தம்பி பிரபாகரை பாராட்டுகிறோம். 

 தம்பி உதயநிதி ஸ்டாலின்  பொறுப்பேற்ற பிறகு, இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை ஒரு வரைமுறைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். யார் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு உண்டு. அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்கள். 

அதன்படி, தென்சென்னை மாவட்டம், தெற்கு பகுதி மாவட்டத்தில்  இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை அதிக எண்ணிக்கையில் நடை பெற்றிருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். தென்சென்னையிலேயே யார் அதிகம் உறுப்பினர்கள் சேர்த்திருக்கிறார்கள் என்றால் மணமகனாக வீற்றிருக்கும் தம்பி பிரபாகர் ராஜா அவர்கள்தான். 

தந்தை எப்படி வணிகர் சங்கத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தம்பி பிரபாகர் அவர்கள் இளைஞரணியைப் பெருக்கி அப்பாவின் பாராட்டைப் பெற்றுள்ளார். மணமக்களை நெஞ்சார, உளமாற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கூறியதைப் போல வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டராய் வாழுங்கள், வாழுங்கள் என வாழ்த்தி விடை பெறுகிறேன் வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக