வெள்ளி, 12 ஜூன், 2020

வேடந்தாங்கலை சுற்றியுள்ள 30 கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.- கே.எஸ்.அழகிரி



வேடந்தாங்கலில்  1858 ஆம் ஆண்டு அப்போதைய  செங்கல்பட்டு ஆட்சியரின்  நடவடிக்கையால் பறவைகள்  சரணாலயம்  நிறுவப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அந்த ஏரி ஒரு சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டின் வன ஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 'வேடந்தாங்கல் ஏரி பறவைகள் சரணாலயம்” என பிரகடனப்படுத்தப்பட்டது. 

வேடந்தாங்கல் ஒரு சுற்றுலா இடமாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமிருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்  பயணிகள் வருகின்றனர். ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு தங்கி பறவைகளை பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முயற்சி தவறானதாகும்.  ஏறத்தாழ  5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடப்  பகுதியை, 3 கிலோ மீட்டர் என்கிற அளவுக்கு  சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிரியல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சரணாலயங்களைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் பகுதிகள் அமைக்கப்பட வேண்டுமென்று சில ஆண்டுகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது. வேடந்தாங்கலில் அப்படி அமைக்க வேண்டுமென்றால், சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கி.மீ. சுற்றளவிற்கு வெளியில் தான் செய்ய முடியும். ஆனால், இதற்கு நேர்மாறாக தமிழக வனத்துறையோ, கிராமப்புற மக்களின் எதிர்ப்பை மீறி 5 கி.மீ. சுற்றளவிற்கு உள்ளாகவே இத்தகைய பகுதிகளை அமைக்க முயற்சி செய்கிறது. இதனால் சரணாலயப் பகுதியின் பரப்பு குறைக்கப்படும். இதை அனுமதிப்பது வேடந்தாங்கலின் முக்கியத்துவத்தை குறைத்து விடும். 

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் எந்த தொழிற்சாலைகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால், தமிழக வனத்துறை சரணாலயத்தின் பரப்பை குறைத்து அதற்கு வெளியில் தனியார் தொழிற்சாலைகளை அனுமதிப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வனத்துறை துணை போகிறது. இதை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் மிகுந்த அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் வேடந்தாங்கலை சுற்றியுள்ள 30 கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். 
எனவே, அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் தனியார் துறை சார்பாக எந்த தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. அதையும் மீறி சில தனியார் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அளித்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
எனவே, வேடந்தாங்கல் சரணாலயத்தின் சுற்றுப் பகுதியாக உள்ள 5 கி.மீ. பரப்பளவை எவ்வகையிலும் குறைக்கக் கூடாது. அந்த பகுதிக்குள்ளாக சுற்றுச் சூழலை பாதுகாக்கிற வகையில் நடவடிக்கை எடுத்து உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கிற நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக