புதன், 17 ஜூன், 2020

ராகுல்காந்தி அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழா: தமிழகம் முழுவதும் 50 ஆவது பிறந்தநாளை நினைவுகூறுகிற வகையில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும்- கே.எஸ். அழகிரி



அன்னை சோனியா காந்தியின் தியாகப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிக்கின்ற வகையில் நவ இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற திரு ராகுல்காந்தி அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழாவை ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. 

இளம் தலைவரின் பிறந்தநாள் அடையாளமாக ஒவ்வொரு தேசியத் தோழரும் தவறாமல் தங்கள் பகுதியில் உள்ள ஒரு விவசாயியை சந்தித்து, அவருக்கு பயன்படும் வகையில் 5 கிலோ விதை நெல் மற்றும் மரக்கன்றுகளை அவசியம் வழங்க வேண்டும். 

தங்கள் இல்லத்தின் முன்பாக அல்லது பொது இடங்களில் ஒரு மரக்கன்றை நட்டு, அதை பாதுகாத்து, பராமரித்து வளர்க்கிற பொறுப்பை ஏற்க வேண்டும். தமிழகம் முழுவதும் 50 ஆவது பிறந்தநாளை நினைவுகூறுகிற வகையில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். 

மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கைகளின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு, நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்சினைகள் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு தங்கள் பகுதியில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் விநியோகம் செய்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எளிமையாக, ஆக்கப்பூர்வமாக, விவசாயிகளுக்கு பயன்படுகிற வகையிலும், அவர்களது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுக்கிற வகையிலும் அமைய வேண்டும். இதுவே விவசாயிகள் பாதுகாப்பு தினத்தின் குறிக்கோளாகும்.

கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு, சமூக விலகலை கடைப்பிடித்து, ஐந்து பேருக்கு மிகாமல் பங்கேற்கிற வகையில் இந்நிகழ்ச்சிகளை அதிக எண்ணிக்கையில் நடத்தும் வகையில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

ஏற்கனவே இலவச மின்சாரத்தை பறிக்கிற முயற்சியில் ஏற்பட்ட மத்திய அரசையும், தடுக்க தவறிய மாநில அரசையும் கண்டித்து தமிழகம் முழுவதும் பரவலாக சமூக விலகலை கடைப்பிடித்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்கிற வகையில் இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா நாடு போற்றும் வகையில் தனித்துவத்தோடு, மிகச் சிறப்பாக, வித்தியாசமான முறையில் நடைபெறவிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்குரலை ஒலிக்கிறவகையில் அவரது பிறந்தநாள் அமையும் என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக