10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் பழனிசாமி அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்?
தெலங்கானாவைப் போல தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்!
- டிடிவி.தினகரன்
தெலுங்கானாவைப் பின்பற்றி தமிழகத்திலும் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கொரோனா பாதிப்பினால் தெலுங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியிருந்த புவியியல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்து முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், முந்தைய தேர்வு மதிப்பெண்கள் படியே தேர்ச்சியை அறிவிக்க இருக்கிறார்கள். 10 ஆம் வகுப்புக்கு மட்டுமல்ல மகாராஷ்டிராவில் பட்டப்படிப்புக்கான இறுதியாண்டு தேர்வுகளையே ரத்து செய்துவிட்டு முந்தைய பருவத்தேர்வுகளின் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்குவ்தென முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் தமிழ்நாட்டில் மட்டும் பழனிசாமி அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவது என்று பிடிவாதம் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை . அதிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட தேர்வுத்துறை இணை இயக்குநரே கொரோனா பாதிப்புக்கு ஆளான பிறகும் அரசு விடாப்பிடியாக இருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசே சொல்லியிருக்கிற நிலையில், 9 லட்சம் மாணவச்செல்வங்கள், சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லையா?
பேரிடர் நேரத்தில் எத்தனையோ விதிமுறைகளை திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள சூழலில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் யாருக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது? எனவே. தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10 ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும். அப்படி செய்ய அரசுக்கு மனம் இல்லாவிட்டால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையிலாவது தேர்ச்சி பற்றிய முடிவை அறிவிக்கலாம்.
கொரோனா விவகாரத்தில் நிர்வாகத் திறனில் லாமல் ஆரம்பம் முதல் தவறு மேல் தவறுகளைச் செய்து நோயைக் கட்டுப்படுவதில் தோற்றுப்போய் நிற்கிற பழனிசாமி அரசு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இவ்வளவு ஆபத்திற்கு இடையில் நடத்தி அதன் மூலம் இன்னொரு மோசமான தவறைச் செய்து போகும் பழிக்கு ஆளாகிவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக