புதன், 17 ஜூன், 2020

இட ஒதுக்கீட்டுக்காக பொருளாதாரத்தில் நலிந்தோர் என்ற பேரில் யாருக்கும் சான்றிதழ் அளிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் நடவடிக்கை சரியானதே! - கி.வீரமணி


இட ஒதுக்கீட்டுக்காக பொருளாதாரத்தில் நலிந்தோர் என்ற பேரில் யாருக்கும் சான்றிதழ் அளிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் நடவடிக்கை சரியானதே!
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்புப் படியும் தவறானது! - கி.வீரமணி


சென்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு, (2019 ஜனவரியில்) பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு, பா.ஜக. அரசு அவசர அவசரமாக 5, 6 நாள்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்த்த ஒரு அரசியல் சட்டத் திருத்த முன்வடிவை திடீரென்று மத்திய அமைச்சரவை ஜனவரி 7 ஆம் தேதி மாலை கூடி முடிவு செய்து, மறுநாள் மக்களவையில் 8.1.2019 அன்று விரிவான விவாதத்திற்கு இடந்தராமலேயே நிறைவேற்றி, மறுநாள் 9.1.2019 அன்று மாநிலங்களவையிலும் - எவ்விதமான நிதானமான விவாதத்தை நடத் தாமலேயே - நாடாளுமன்றத்தின் தொடரை இதற்கெனவே ஒரு நாள் நீடித்து நடத்தினார்கள்.

ஒரு அரசியல் சட்டத் திருத்தம் - அதுவும் மிக முக்கியமான பெரும்பாலான மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முதலியவர்களின் கல்வி, உத்தியோக உரிமைகளைப் பறிக்கும் ஒரு கொடுமையான அரசியல் சட்டத் திருத்தம் - அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததாகவே அந்த 103 அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு போதிய பெரும்பான்மை இல்லை; அந்த அரசியல் சட்டத் திருத்தம் - முன்னேறிய ஜாதிகளில் ஏழைகளாக உள்ளவர்களுக்குப் பொதுப் போட்டி தொகுதியிலிருந்து 10 சதவிகித இட ஒதுக்கீடு தருகின்ற வகையில்தான்  இரு அவைகளிலும் முன்மொழியப்பட்டது.

இது  சமூகநீதியின் அடிப்படையையே தகர்க்க - திட்டமிட்ட- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனர்கள் விரும்பிய, வற்புறுத்திய ஒரு கோட்பாடு ஆகும். (அதற்குமுன் சட்டமன்றத் தேர்தல்களில் நீண்ட காலமாக தங்கள் வசம் இருந்த) ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைந்த வாய்ப்பு என்ற அதிர்ச்சி தோல்வி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்துவிடக் கூடாது என்ற அரசியல் உள் நோக்கமும், அந்த அவசரமாக நிறைவேற்றப் பட்ட - அதுவும் 5 நாள்களில் - நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் சட்டத் திருத்தம் இவ்வளவு ராக்கெட் வேகத்தில் நிறைவேற்றப்பட்டதற்கான முன்மாதிரியே எங்கு தேடினாலும் கிடைக்காது - நிறைவேற்றப் பட்டது.

மிகப்பெரிய அரசியல் பிழை

இதில் அரசியல் ரீதியாக இந்தத் தவறுக்கு - புரிந்தோ, புரியாமலோ, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆதரவு தந்தது, மிகப்பெரிய அரசியல் பிழையாகும்.

தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.ஜே.டி. என்ற லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக எதிர்த்தன - மாநிலங்களவையில் தி.மு.க.வின் அப்போதைய மாநிலங்களவை தி.மு.க. தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் இதை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு - செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி, விரிவான விவாதம் நடத்துங்கள் என்ற கோரிக் கையை வைத்தார். மேற்கண்ட எதிர்க்கட்சி களேகூட ஒத்துழைப்புத் தராததினால்தான், அது நிறைவேறியது.

இடஒதுக்கீடு என்பது எஸ்.சி., எஸ்.டி., மக்க ளுக்கும், ‘‘கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும்'' பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்பது தான் முதலாவது அரசியல் சட்டத் திருத்தம்; தந்தை பெரியாரின் பேருழைப்பால் இந்திய நாட்டுக்கே நன்மை! பொருளாதார அடிப் படையை அரசியல் சட்ட கர்த்தாக்களோ, அன்றைய பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த ஆளுங்கட்சியோ ஏற்கவில்லை - காரணம் பொருளாதார அடிப்படை நிலை யானது அல்ல. எனவே, 15(4) என்ற பிரிவில் ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்‘ என்பது மட்டுமே  இடம் பெற்றது.

9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது இன்றும் சட்ட வலிமை உள்ள ஒரு தீர்ப்பாகும்!

அதுமட்டுமல்ல,  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது,  இதேபோல், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் ஒன்று மத்திய அரசால் ஆணையாகப் போடப்பட்டதை விசாரித்த மண்டல் வழக்கில் (இந்திரா சகானி வழக்கு) அது அரசியல் சட்டப்படி செல்லாது என்றும், இந்திய அரசியல் சட்ட அடிக்கட்டுமானத்திற்கு அது முரணானது என்றும் - பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக உச்சநீதி மன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது இன்றும்கூட சட்ட வலிமை உள்ள ஒரு தீர்ப்பாகும்! (1992)

இதை மீறித்தான் இப்போதைய 10 சதவிகித இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதி நலிந்த பிரிவு - ஏழைகளுக்கு என்பதாக - பொருளாதார அடிப்படையை மெல்ல உள்ளே நுழைத்து, முரணான ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தையே நிறைவேற்றி உள்ளனர். பிறகு முழு இட ஒதுக்கீட்டையும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.-க்கு ரத்து செய்து, பொருளாதார அடிப்படையையே நிரந்தரமாக்குவதே ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பன ரின் திட்டம். அதை செயல்படுத்தவே இந்த முன்னோட்டம்.

இதனை பெரியார் மண் - சமூகநீதி மண் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தி.மு.க., கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, அ.தி.மு.க.  முசுலீம் அமைப்புகள், பா.ம.க. எல்லாக் கட்சிகளும் இதில் ஒரே நிலைப்பாடுதான் கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.

இட ஒதுக்கீட்டின் தத்துவமே - பசியேப்பக்காரனுக்குப் பந்தியில் இடம்!

10 சதவிகித தனி ஒதுக்கீட்டினை, தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், தமிழ்நாடு அரசும் ஏற்க மறுத்துள்ளது இன்று வரையில். காரணம், அது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே (Basic Structure) உடைப்பது என்பதால்தான்.

இட ஒதுக்கீட்டின் தத்துவமே - பசியேப் பக்காரனுக்குப் பந்தியில் இடம்; புளியேப்பக் காரனுக்கு இடம் இல்லை அப்பந்தியில் என்பதே ஆகும். ஏற்கெனவே முன்னேறிய ஜாதியின ராகிய அவர்கள், தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பன்மடங்கு அதிகமாகவே கல்வி உத்தியோ கத்தில் ஏகபோகம் அனுபவிப்பது என்பது யதார்த்தமானதே!

இந்திரா சகானி வழக்கில் (மண்டல் வழக்கில்) மிகவும் தெளிவாகவே 10 சதவிகித இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் பொதுப் போட்டியில் இருந்து ஒதுக்கித் தருவது அரசியல் சட்ட விரோதம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது - 9 நீதிபதிகளால்.

‘‘The question is whether this is constitutionally permissible? We think not. It may not be permissible to debar a citizen from being considered to an appointment to an office under the State solely on the basis of income or property- holding.

.... Any such bar would be inconsistent with the guarantee of equal opportunity held out by clause (1) of Article 16.''

என்று எழுதி, அவ்வாணை செல்லாது ஆக்கப்பட்டது. இந்நிலையில், அரசியல் சட்டத்தையே தகர்த்து, இப்படி ஒரு அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளது இரட்டை அநீதி அல்லவா?

பார்ப்பனர்கள் சலசலப்புக் காட்டி
மிரட்டுவது ஏற்கக்கூடியதல்ல!

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவசரமாக இப்படி உள்ளே நுழைந்துவிட பார்ப்பனர்கள் ‘முன்னேறிய ஜாதி ஏழைகள்' என்ற நிலையற்ற பொருளாதார அடிப்படையைக் காட்டி, நமது மக்களுக்கு உரிய பொதுப் போட்டி இடங்களைக் கைப்பற்றிட முனைவதை தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு ஏற்காது என்றும், வருமான சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும் ஒரு சரியான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதனைப் பார்ப் பனர்கள் சலசலப்புக் காட்டி மிரட்டுவது ஏற்கக்கூடியதல்ல.

இதனை எதிர்த்து ‘உலகப் பிராமண சங்கத் தலைவர்' என்றும், ‘அந்தணர் முன்னேற்றக் கழகம்' என்றும், ‘இந்து தமிழர் கட்சி' என்றும் ஏதேதோ பெயர்களில் பார்ப்பனர்கள் பல அவதாரம் எடுத்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறித்து அ.தி.மு.க. அரசு எவ்வித முக்கியத்து வமும் கொடுக்கத் தேவையில்லை. பின்வாங்கவும் கூடாது.

இது ஆட்சியின் கொள்கை முடிவு என்று முன்பே தெரிவித்திருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் - அது வரவேற்கத்தக்கதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக