வெள்ளி, 12 ஜூன், 2020

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களுடைய வீடுகளிலும், நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தமாட்டோம் சபதம் ஏற்க வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி


ஜீன்-12 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்!
“Children are Gift of the Nature
Let Them Fly With Their Dreams”

குழந்தைகள் இயற்கையின் கொடை அல்லது வரப்பிரசாதம் ஆவர். இன்றைய குழந்தைகளே நாளைய தேசத்தின் வலிமைமிகு தூண்கள். இன்று அன்போடு வளர்க்கக்கூடிய குழந்தைகளே, நாளை அன்பை இவ்வுலகிற்கு விதைக்ககூடிய மனிதர்களாக பரிணமிப்பார்கள். இவ்வளவு போற்றுதலுக்குரிய குழந்தைகளை உலகம் எப்படி நடத்துகிறது? 14 வயது வரையிலும் கட்டாயமாகக் கல்வி கொடுக்க வேண்டும் என்பதுதான் சட்டம்! ஆனால், அதை மீறி உலகெங்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். அதுவும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடிய நிகழ்வுகள் தொடர்கதையாகின்றன. இந்தியாவிலும், தமிழகத்திலும், உலகெங்கும் அண்மைக்காலம் வரையிலும் பட்டாசு உற்பத்தி, தீப்பெட்டி தொழிற்சாலை, கடுமையான கட்டிடப் பணிகள், வேளாண்மை, வீட்டு வேலைகள், கால்நடை வளர்த்தல், மீன் பிடித்தல், பின்னலாடை தொழில், செங்கல் சூளை, மளிகைக் கடைகள், கல்லுடைத்தல், சுமை தூக்குதல் என உடலுக்கும், உயிருக்கும் ஊறு விளைக்ககூடிய தொழில்களில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பல காலம், பல வருடங்கள் குரல் கொடுக்கப்பட்டதாலும், சட்டங்கள் இயற்றப்பட்டதன் விளைவாகவும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதைத் தடுத்திடவும் ILO - உலக தொழிலாளர் சம்மேளத்தின் வாயிலாக ஜூன் 12-ம் தேதியை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அறிவித்து, சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே 2002-க்குப் பிறகு பெரிய அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.  ஒரு வசதி படைத்த வீட்டுப்பிள்ளையை வளர்ப்பதற்காக ஏழைத்தாயின் குழந்தை தனது வாழ்வை அர்ப்பணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. 

குழந்தைத் தொழிலாளர் என்ற முறை சமுதாயத்தில் மிகப்பெரிய அளவிற்கு வேரூன்றி அது ஒரு விஷச் செடியை போல பரவி இருந்தது. பெற்றோர்களின் அளவு கடந்த வறுமை, அவர்களது கல்லாமை, அறியாமை, கொத்தடிமை முறை ஆகியவை ஒன்று சேர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகளை பணிக்கு அமர்த்த வேண்டிய சமூகக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உலகெங்கும் இப்பொழுதும் கூட, 15 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு விதமான தொழில்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால், பொலிவியா நாடு மட்டுமே இன்றும் அதை தடுக்கச் சட்டம் கொண்டு 1995-ஆம்  ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம்; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, இராஜபாளையம்; திருநெல்வேலி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் மாலை 4 மணிக்குத் துவங்கி, மறுநாள் காலை 10 மணி வரையிலும் பல நாட்கள் பல மாதங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு கிராமந்தோறும் புதிய தமிழகம் கட்சிக் கொடி ஏற்றி, அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது.

அப்போது எங்களுக்கு விடியற்காலை 3 மணிக்கு விழித்திருப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமாக இருக்கும். மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் 10 கிராமத்திற்கு சுற்றுப்பயணம் என்று அழைத்துக் சென்று விட்டு,  30 கிராமங்களுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு உணவு இருக்காது; தூக்கம் இருக்காது. வீழ்ந்த சமுதாயத்தை தட்டி எழுப்பவும், ஒன்றுபடுத்தவும் நாங்கள் விழித்துக் கொண்டிருந்தோம். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தங்களுடைய உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் எங்களுடைய வருகைக்காக விழித்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதிகாலை 3 மணிக்கெல்லாம் பல கிராமங்களிலிருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன்களின் நடமாட்டம் பெருமளவில் இருக்கும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் 2-3 வேன்கள் வந்து போவதைக் கூட பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வேன்களிலும் 10 முதல் 14 வயது குழந்தைகளே அதிகமாக இருப்பதை நான் கண்கூடாகப் பார்த்ததுண்டு. அவர்களெல்லாம் எங்கே 3 மணிக்கு கிளம்புகிறார்கள்? என்று வினவிய போது, தங்கள் கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்ல அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. அது ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது பகுதியிலோ அல்ல! தென் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் எண்ணற்ற பெண் குழந்தைகள் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவதை கண்ணுற்று, கண் கலங்கியதுண்டு. அதைப்பற்றி தீர விசாரித்த போது,  அந்த பகுதிகளில்    பல வருடங்களாக குழந்தைகளைப் பணிக்கு அனுப்புவது ஒரு சமூக அவலமாக நடந்து வந்திருக்கிறது என்பதை அறிந்தேன். 

எனவே அப்பகுதி ஊர் நாட்டாண்மைகளை அழைத்து பேசியும், அப்பகுதிகளில் இரண்டாவது, மூன்றாவது முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டும் குழந்தைகளை பணிக்கு அமர்த்தக்கூடாது, பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். முக்கிய சமூகப் பிரச்சனைகள் குறித்து கிராமங்களில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நேரம் அது. சாராயம் காய்ச்சக்கூடாது, சாராயம் விற்கக்கூடாது, சாரயம் குடிக்கக்கூடாது என்பதை கட்டளையாக்கி, ஒவ்வொரு கிராமமாக அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தோம். 

அதேபோல, குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வேலைக்கு அனுப்ப மாட்டோம்; பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று வாக்குறுதிகளை பெற்றோம். அதன் விளைவாக தென்மாவட்டங்களில் மிகக்குறுகிய காலகட்டத்திலேயே குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் சமூகச் சீர்கேடு பெரிய அளவிற்கு குறைந்ததை காண முடிந்தது.  

1996-ல் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காக பலமுறை சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர் முறையை மையமாகக் கொண்டிருந்த விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் இப்பொழுது பெருவாரியாக குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வும், போராட்டமுமே மிகமிக முக்கிய காரணமாகும்.

இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் எங்காவது குழந்தைத் தொழிலாளர் முறை நீடித்துக் கொண்டு இருக்க வாய்ப்பு உண்டு. அதையும் முற்றாக தடுத்தாக வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. 

இன்றைய குழந்தைகளே வருங்கால இந்தியாவின் தூண்களாக விளங்ககூடியவர்கள். எனவே இளம் வயதில் அவர்கள் எந்தவிதமான மன அழுத்தங்களுக்கும் ஆளாகக் கூடாது. கடுமையான பணிகள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும், மூளை வளர்ச்சியையும் மிகப்பெரும் அளவிற்கு பாதிக்கும். பால்குடி பருவம் மாறியபின், ஆனந்தமாக ஓடி விளையாடி, குதூகலமாக இருக்க வேண்டிய அவர்களை கல், மண் சுமக்கவும்; கடும் வீட்டுப் பணிகள் செய்யவும்; ஆபத்தான தொழில்களில் ஈடுபடச் செய்வதும் மனிதநேயமற்ற செயல் ஆகும்.

கோவிட் - 2019-க்கு பிறகு இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார வீழ்ச்சி ஏழை, எளிய மக்கள் மத்தியிலும், புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியிலும் தங்களுடைய குழந்தைகளை வேலைக்கு தள்ளும் அபாயகரமான புது சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த 2020-ஆம் ஆண்டில்  “Protect Children from Child Labour Now and More Than Ever” என்பதை மனதிலே கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை ஆகும். 

எனவே, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களுடைய வீடுகளிலும், நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தமாட்டோம் என்றும், அதுபோல வேறு எதாவது நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தால், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் சபதம் ஏற்பதே இன்றைய குழந்தைகளான நாளைய தலைவர்களுக்கு நாம் செய்யக்கூடிய தொண்டு ஆகும்.

”Protect Children from Child Labour Now and More Than Ever”
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்!
வருங்கால சந்ததியினரை வளர்ப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக