திங்கள், 15 ஜூன், 2020

மனித குலத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு ஓரிரு நாள் போராட்டங்கள் போதாது, ஓரிரு நாள் சிறைவாசம் போதுமானது அல்ல - டாக்டர் K. கிருஷ்ணசாமி


புரட்சியாளர்களும் மரணித்ததில்லை!
புரட்சிகளும் மரணிப்பதில்லை!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி
  
1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலீவியாவில் சேகுவேரா கைது செய்யப்பட்டவுடன் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA தங்களது மேலதிகாரிகளுக்கு அனுப்பிய வாசகம் தான் ”500 CANSADO” என்பது ஆகும். அது ஒரு இராணுவ ரகசியக் குறியீடு. அதன் விளக்கம் தான் ’CHE’ HAS BEEN CAPTURED.  முதல், இரண்டாம் உலகப்போர்களின் போதும், அதைத் தொடர்ந்தும் பிரிட்டிஷ், ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும், அரசியல், சமூகக் கொடுமைகளுக்கும் ஆளான நாடுகளும், மக்களும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியாகவும், ஆயுதம் தாங்கியும் போராட்டங்களும், புரட்சிகளும் நடைபெற்ற காலகட்டம் அது. 

எர்னெஸ்டோ சேகுவேரா தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி பிறந்தார். இது அவரது 92-வது பிறந்த நாள் ஆகும். 1953-ல் மருத்துவ பட்டம் பெற்று, 1959-ல் கியூபாவில் நடைபெற்ற புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவுக்கு பக்க பலமாக நின்று, பலம் வாய்ந்த இராணுவ ஜெனரல் ஃபாடிஸ்டாவின் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு, சோசலிச கொள்கை கொண்ட அரசை நிறுவுவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான புரட்சியாளர் அவர். உலகின் பல தேசங்களில் இன்று வரை நடைபெறக்கூடிய பல்வேறு போராட்டங்களுக்கு உந்து விசையாகவும், அடையாளமாகவும், “சே” என்று செல்லமாக இலட்சோபலட்சம் இளைஞர்களால்  அழைக்கப்படக்கூடியவர் அவர். 

உலக மக்களை ஆட்டிப்படைத்த அரசியல் ஆதிக்கம், சமூக கொடுமைகள், நிற, இன வேறுபாடுகள், பொருளாதார சுரண்டல்களை எதிர்த்து போரிட்ட புரட்சியாளர்களில் சேகுவேரா என்னை மிகவும் கவர்ந்தவர். அவர் மீது அதிக பற்று ஏற்பட்டதற்கு காரணம் அவர் ஒரு மருத்துவராக தனது வாழ்க்கையை துவங்கி, புரட்சியாளரானார் என்பதற்காக அல்ல! மாறாக, புரட்சி செய்ததும், புரட்சிக்ககாவே வாழ்ந்து மடிந்ததும், புரட்சியின் அடையாளமாகவே அவர் விளங்கியதும் ஆகும். 

சேகுவேரா புரட்சியாளர்களுக்கு ஒர் அற்புதமான முன்னுதாரணம். பொலீவியா நாட்டில் புரட்சி ஏற்படுத்த அங்கு சென்று, குண்டடிப்பட்டு, அமெரிக்கா, பொலீவியா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, ஓர் ஆரம்பப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்ட பொழுது. “WHAT ARE YOU THINKING ABOUT- நீங்கள் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, “ I AM THINKING ABOUT IMMORTALITY OF THE REVOLUTION - என்றும் மரணமில்லா புரட்சியை பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார். 

அர்ஜெண்டினாவில் பிறந்து, வளர்ந்து, மருத்துவக் கல்வி பயின்ற போதே தென் அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் இருந்து வடபகுதி வரையிலும் சாலை வசதி இல்லாத அக்கால கட்டத்தில் பெரிய அளவிற்கு தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படாத ஒரு மோட்டார் சைக்கிளில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடந்து 4500 கி.மீ பயணம்  செய்து அந்நாட்டு மக்களின் வாழ்நிலையை கண்டறிந்தார். 

ஏகாதிபத்திய ஆட்சியாளர்களாலும், அவர்களுடைய அடிவருடிகளாலும் கசக்கிப் பிழியப்பட்ட மக்களின் அவலங்களை கண்ணுற்ற சேகுவேரா, தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில்  மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர எண்ணினார். 25-க்கும் மேற்பட்ட பெரு, சிறு தேசங்களை உள்ளடக்கி இருந்த அக்கண்டத்தில், எந்த நாட்டில் மக்கள் கிளர்ச்சிக்கு தயாராக இருந்தார்களோ அந்த நாட்டில் முதலில் புரட்சியை ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் மெக்சிகோ சென்றார். 

கியூபாவில் அன்று ஆட்சியில் இருந்த ஃபாடிஸ்டா என்ற அதிபருக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்துவதற்கு மெக்சிக்கோவில் களம் அமைத்துக் கொண்டிருந்த பிடல் காஸ்ட்ரோவின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து 1959-ல் ஃபாடிஸ்டா அரசை தூக்கி எறிந்து விட்டு, காஸ்ட்ரோவின் தலைமையில் சோசலிச முற்போக்குக் கருத்துகளை கொண்ட அரசை நிறுவினார்கள். பிடல் காஸ்ட்ரோ அதிபரானர். சேகுவேரா அவர்களுக்கு உடனடியாக கியூபாவில் குடியுரிமை வழங்கப்பட்டு, கியூபா மத்திய வங்கியின் தலைவராகவும், முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பிடல் காஸ்ட்ரோவின் வலதுகரமாக விளங்கிய சேகுவேரா அவர்கள், புதிய விடியலாக வந்த கியூபாவின் குரலாகவும், வேளாண்மை, மருத்துவம், தொழில் என பல்வேறு துறைகளிலும் பிற நாடுகளை சார்ந்து நிற்காமல், சுயமாக மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டார். அத்துடன் உலக நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இரஷ்யாவுக்கும், ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் பயணத்தை மேற்கொண்டார். அவர் அமைத்து கொடுத்த வலுவான தளமே இன்று வரையிலும் கியூபா மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் தற்சார்புடன் விளங்க முடிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூப்பிடும் தூரத்தில் இருந்த கியூபா ஒரு சிறிய நாடு. அது ஒரு சோசலிச நாடாக உதயமானதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே எந்த நேரத்திலும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடும் என்ற சூழல்  இருந்தாலும் கூட, அனைத்து துறைகளிலும் கியூபாவை நிலைபெறச் செய்ததில் சேகுவேராவின் பங்கு அளவிடற்கரியது. 

புரட்சியின் போதும், புரட்சிக்கும் பின்னரும் கியூபாவை உருவாக்குவதற்கும், ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக  அந்நாட்டை உருப்பெறச் செய்வதற்கும், பிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு ஈடு இணையற்ற நண்பராகவும், தோழராகவும், விளங்கிய சேகுவேரா அவர்கள் 1965-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதி தன்னுடைய பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், தன் வாழ்நாள் தோழரான பிடல் காஸ்ட்ரோவுக்கும் வரலாற்று சிறப்புமிக்க கடிதம் ஒன்றை அனுப்பி விட்டு, அவர் அன்றிலிருந்து தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு சென்றார்? எதற்குச் சென்றார்? என்பது அப்போது யாருக்குமே தெரியாது. கியூபாவை மீட்டெடுப்பதற்கும், அதை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் துணை நின்ற பிடல் காஸ்ட்ரோவுக்கும், அவருக்கும் எவ்வித கருத்து மோதலும் இல்லை, சங்கடமும் இல்லை. பெற்றோர்களுடனோ அல்லது பெற்ற பிள்ளைகளுடனோ எவ்விதமான பிணக்குகளும் இல்லை.

உலக அளவில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட, கோடான கோடி பாட்டாளி வர்க்கத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட, கியூபா தேசத்தினுடைய மதிப்புமிக்க புரட்சியாளராக திகழ்ந்தவர். ஆனால் அந்த மகத்தான புரட்சிக்காரர் தன்னுடைய வாழ்நாளின் கடைசி நாட்களை, தான்  சொன்னது போல, ”புரட்சிகள் சாகாவரம் பெற்றவை” என்பதை வரலாற்றுக் கடமையாக நிறைவு செய்ய வேண்டும், தானும் அப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், உற்ற தோழன், நாடு, நாட்டின் பதவிகள் என அனைத்து சுகங்களையும் துறந்து விட்டு மீண்டும் ஒரு சாதாரண சிப்பாயாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலீவியா தேச விடுதலை கொரில்லாப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். 

அவரை அமெரிக்க ராணுவமும், CIA ஏஜெண்டுகளும் தன்னுடைய கழுகுக் கண்களால் வட்டமிட்டு தேடினர். அமெரிக்காவினுடைய உளவுப் படைகள், சுகாதார ஆய்வாளர்கள், வேட்டைக்கு செல்வோர், வியாபாரம் செய்வோர், பாடம் சொல்லிக் கொடுப்போர், பாடம் கற்க  வருவோர்,  வரிவசூல் செய்வோர், சுற்றுலா செல்வோர் என எண்ணற்ற வழிகளில் அவரை கண்டுபிடிக்க வியூகங்கள் அமைத்து இறுதியில் பொலீவியா நாட்டையே சல்லடை போட்டுத் தேடி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1967-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி, உள்ளூர் பகுதியில் காசுக்கு விலைபோன கருங்காலிக் கூட்டத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஏறக்குறைய 24 மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு, காலில் பலத்த காயத்துடன் நகரவே முடியாத நிலையில் அமெரிக்கா, பொலீவியா இராணுவத்தினரால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளிக் கூடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுருந்தார். போர் விதிமுறைகளின் படியும், உலக நியதியின் படியும் காயம் ஏற்பட்டு உயிரோடு ஒரு வீரர் கைது செய்யப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டுமே தவிர சட்ட விரோதமாக அவரது உயிரை எடுக்க கூடாது. அமெரிக்க நாடு, பல கண்டங்களைக் கடந்தும், பல நாடுகளைக் கடந்தும் மனித உரிமை பற்றியும் அமைதி பற்றியும் உபதேசம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் சேகுவேரா விவகாரத்தில் அப்படி நடந்துகொள்ளவே இல்லை.

பொலீவியா நாட்டில் சேகுவேரா போர்க்களத்தில் சாதாரண கொரில்லாப் போர் வீரனாக போர் புரிந்து இருக்கலாம். ஆனால் அவர் உலகறிந்த புரட்சியாளர். ஒரு புரட்சிக்கு தலைமையேற்று ஒரு நாட்டை விடுதலை செய்த மாவீரர்.  அந்நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருந்த மகத்தான மாமனிதர். அவருக்கு சிகிச்சை அளித்து, அவர் உயிரை காப்பாற்றி, அவரது நாட்டுக்கே அழைத்து கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் 1967-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி கைது செய்து ”500 CANSADO” என்ற செய்தியை  அனுப்பி, ஒருநாள் அடைத்து வைத்து அக்டோபர் 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் மரியோ டெரான் என்ற அமெரிக்கா, பொலீவியா இராணுவச் சிப்பாய் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மகத்தான வீரரின் உடலைக் கூட அமெரிக்கா கியூபாவிற்கு அனுப்பி வைக்கவில்லை. எங்கோ புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அவரது ஒரு கை மட்டுமே கியூபாவில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
அர்ஜெண்டினாவில் பிறந்து, மருத்துவராகி, தென் அமெரிக்க கண்டத்தை ஒன்றரை வருடத்தில் பயணம் செய்து, கியூபாவை விடுவித்து, அந்நாட்டை அனைத்து துறைகளிலும் கட்டமைத்து, தன்னுடைய அனைத்து விதமான பதவிகளையும் துறந்து விட்டு, வாழ்க்கையை மீண்டும் இன்னொரு தேசத்தின் விடுதலைக்காக புரட்சிக்காரராகவே தொடங்கி, புரட்சிக்காரராகவே உயிர் நீத்த மகத்தான புரட்சியாளர் சேகுவேரா ஆவார்.

ஒரு நாடு அல்லது ஒரு மொழி அல்லது ஒரு தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, மனித குலம், பாட்டாளி வர்க்கம் எல்லா விதமான சமூக அவலங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற மிகப்பெரிய உன்னத இலட்சியத்திற்காக உயிர் வாழ்ந்து அதை உலக மக்களுக்கு நல்லதொரு செய்தியை விட்டுச் சென்ற அந்த புரட்சியாளர் பிறந்த நாள் தான் ஜூன்-14 (இந்தியாவில் ஜீன் -15)  ஆகும்.  அவரது இலட்சியத்தை ஒட்டியே ஈழ விடுதலைக்காக பிரபாகரனும், எண்ணற்ற இளைஞர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

தமிழகத்தில் எண்ணற்ற இளைஞர்கள் சேகுவாராவின் படங்களை தங்களுடைய பனியன்களிலும், டி-சர்ட்டுகளிலும் போட்டுக் கொண்டு இப்போதும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதையும், பல்வேறு போராட்டங்களில் அதைப் பயன்படுத்திக் கொள்வதையும் நான் கண்ணுற்று இருக்கிறேன். சேகுவேரா விளம்பரப்படுத்திக் கொண்ட புரட்சிக்காரரும் அல்ல! அதிகாரத்திற்கு அடிபணிந்தவரும் அல்ல!!  அதிகார போதையை அனுபவிக்கத் துடித்தவரும் அல்ல!!! ஜாதி, மதம், இனம், நிறம் என  அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர், சுதந்திரமாகவே வாழ வேண்டும் என்ற இலட்சியத்தை உலகிற்கு உணர்த்திய புரட்சியாளர் சேகுவேரா. 

சேகுவராவின் பிறப்பும், இறப்பும் மிக முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்துகின்றன. உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரே அடையாளம் தான் வேண்டும், அது மனிதன் என்ற அடையாளம் மட்டுமே. 

மனித குலத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு ஓரிரு நாள் போராட்டங்கள் போதாது, ஓரிரு நாள் சிறைவாசம் போதுமானது அல்ல, சர்வபரி தியாகத்திற்கு தயாரானவர்களால் தான் சமூக மாற்றம் நிகழும் என்பதற்கு ”சே” வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக