மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: மத்தியதொகுப்பு இடங்களை ஓபிசிக்கும் பகிர்ந்தளிக்க புதிய திட்டம் வரையறுக்கவேண்டும்!
உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு!
மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு
இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அவ் வழக்கை அனுமதித்துள்ளது ( Provisional Id 1838 of 2020 ) இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி தமிழ்நாட்டிலிருந்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. அதனால் அவ்வழக்குகள் இப்போது உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அவை அடுத்த வாரம் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பின் வருவனவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை பகிர்ந்தளிப்பதில் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 15 ஆகிய உறுப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ( WP 596/2015) காரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
மத்திய தொகுப்பு ( central Pool) இடங்களை கேபினெட் செயலாளர்களின் பிள்ளைகள், அயலுறவுத்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் என ஏற்கனவே சலுகை பெற்ற உயர் வர்க்கத்தினருக்கே மத்திய அரசு அளித்து வருகிறது. அதில் எந்தவொரு சமத்துவக் கோட்பாடும் பின்பற்றப்படவில்லை. மத்திய அரசு தனது விருப்பம்போல் அந்த இடங்களை ஒதுக்கி வருகிறது. மத்திய அரசு தன்னிச்சையாக அப்படி நடந்துகொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
எனவே, உச்சநீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென வழக்கில் கோரியுள்ளோம்.
1. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ( WP 596/2015) எவ்விதத்திலும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 15(4) பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையாக இல்லை என நீதிமன்றம் மத்திய அரசுக்கு விளக்க வேண்டும்.
2. சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி மருத்துவ படிப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிடவேண்டும்.
3. மத்திய தொகுப்பு இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக மத்திய அரசு சமூகநீதியை அடிப்படையாகக்கொண்ட திட்டம் ஒன்றை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும்; அந்த இடங்கள் சலுகைபெற்ற உயர் வர்க்கத்தினருக்கே மீண்டும் பயனளிக்கும் விதமாக இருப்பது தடுக்கப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
மேற்கண்டவாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடுத்துள்ள வழக்கில் கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக