ஞாயிறு, 6 ஜூன், 2021

என்எல்சி(NLC) மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட வேண்டும்.- தி.வேல்முருகன்


மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நெய்வேலி நகரின் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்,நெய்வேலி நகரில் பரவும் கொரோனா தொற்றை  கட்டுப்படுத்தும் முயற்ச்சியை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா 2-ம் அலையை தமிழக அரசு வெகு சிறப்பாக கையாண்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தொற்று பரவலை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தமிழக மக்களும் ஒத்துழைத்து வருகின்றனர். தொற்று பரவல் குறையத் துவங்கியிருப்பதால் மக்களின் தேவையைக் கருதியும், வியபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தொற்று பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இதையும் மக்கள் முறையாகப் பயன்படுத்தி, முழு ஊரடங்கு விலக்கு ஏற்பட ஒத்துழைப்பு நல்கிடவேண்டும்

கடலூர் மாவட்டத்திலும் ஓரளவுக்கு  பாதிப்பு குறையத் துவங்கியிருந்தாலும், நெய்வேலி நகரில் பாதிப்பு குறைந்தபாடில்லை. 

கடந்த ஒருமாதமாக நெய்வேலி நகரில் தொற்று பரவல் அதிகரித்து, 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களோடு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

என்எல்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரில் தொற்றாளர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, என்எல்சி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என அங்குள்ள தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரும் கடந்த வாரம் என்எல்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றுள்ளார். இருப்பினும் நிலைமை சீராகவில்லை என்எல்சி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களே தெரிவிக்கின்றனர்.

நெய்வேலியில் உள்ள மருத்துவர்கள் சிலர் கடந்த 2-ம் தேதியிட்ட ஒரு மின்னஞ்சலில் என்எல்சி மருத்துவமனையும், மருத்துவர்களையும் காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்து நிறுவனத் தலைவர், இயக்குநர்கள், சுகாதாரத்துறையினருக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு முதுநிலை மருத்துவர்கள் வருவதில்லை, இள நிலை மருத்துவர்களைக் கொண்டு நிலையை கையாள நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை கூறவோ, வழிகாட்ட வோ மருத்துவ அதிகாரிகள் எவரும் இல்லாத நிலையில், மருத்துவர்களும், செவிலியர்களும், மருந்தாளுநர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருப்பது அவர்கள் வெளியிட்ட மின்னஞ்சல் மூலம் தெரியவருகிறது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை உடனடியாக நெய்வேலியில் முகாமிட்டு, என்எல்சி மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக